சொக்லட் திருடியமைக்காக தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தில் ஊடகங்கள் வெளியிட தவறியவை!

Misleading சமூகம் | Society

சில ஊடகங்கள் சம்பவங்களின் பின்னணியை சரியாக ஆராயாமல் வெளியிடும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவ்வாறு இரண்டு சொக்லட்களை திருடியதற்காக தாயொருவரும் அவரின் இரண்டரை மாதக் குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு அனுதாபப் பதிவுகள் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது.

எனவே அதன் உண்மைத் தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link


இரண்டு சொக்லட் களவு எடுத்ததற்கு தண்டனையாக தாய் மற்றும் குழந்தை சிறையில் அடைப்பு.. என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது கடந்த 2025.10.01 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவல் தழிழில் மாத்திரமன்றி சிங்கள மொழியிலும் அதிகளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இந்த சம்பவத்தை இலங்கையிலுள்ள சில ஊடகங்கள் பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தன.

மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய பெண்ணும் 2 1/2 மாதக் குழந்தையும் கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாத்தறை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சமீர மீகந்தவத்த, நீண்ட வாதங்களை முன்வைத்தார். இளம் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அது குழந்தைக்கு அநீதியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிணை வழங்க மறுத்த மாத்தறை தலைமை நீதவான் சதுர திசாநாயக்க அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். Link | Link | Link

கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

எனவே நாம் இது குறித்த ஆராய முதலில் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு வினவினோம், இதன்போது இந்த சம்பவம் தொடர்பான உண்மையை சமூக ஊடகங்கள் வழியாக திரிபுப்படுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் 11,000 ரூபா பெறுமதியான சொக்லட்களை திருடியதாகவும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொக்லட்கள் மற்றும் பரிசுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்கு தொடர்புடைய அழகுக்கலை நிலைய உரிமையாளரின் 18,000 ரூபா பணத்தை திருடியதாகவும் குறித்த பெண் மீது முறைப்பாடுகள் கிடைத்ததுடன், மேலும் அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் மாத்தறை பிரதேசங்களில் இந்த பெண்ணுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அனைத்து குற்றங்களுக்காகவும் சந்தேகநபரான குறித்த பெண் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் குழந்தை தொடர்பில் நாம் வினவியபோது, இரண்டரை மாதக் குழந்தையை தாயை விட்டு பிரிக்க முடியாது என்பதனால் அந்த குழந்தையும் தாயோடு விளக்கமறியலில் இருப்பதாக அவர் கூறினார்.

கந்தர பிராந்திய செய்தியாளர்கள்

இது குறித்து நாங்கள் வினவியரி போது, ​​சமூக ஊடகங்களும், பிரதான ஊடகங்களும் தகவல்களை ஆராயாமல் தவறான முறையில் செய்தி வெளியிட்டிருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

குறித்த பெண் ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அழகு நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து 11,000 பெறுமதியான சொக்லட்களையும் 18,000  ரூபா பணத்தைஉரிமையாளரின் பணப்பையிலிருந்து திருடியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் போதைப்பொருள் குற்றச்சாட்டில் மாத்தறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனவும் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் சிறிய குற்றத்திற்காக நீதவான் பிணை வழங்காமல் விளக்கமறியல் உத்தரவு வழங்கியமைக்காக சில வழக்கறிஞர்கள் தமது நீதவான் மீது அதிருப்த்தியுடன் இருப்பதாகவும், இரண்டு சொக்லட் திருடியதற்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தமையினாலேயே சமூக ஊடகங்களில் இது தவறாக பகிரப்படுகின்றது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அழகுக்கலை நிலைய உரிமையாளர் இந்த சம்பவம் தொடர்பில் எமக்கு வழங்கிய தகவல்

மேற்கண்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரான, திருட்டு இடம்பெற்ற  தெவிநுவரவில் உள்ள அழகுக்கலை  நிலையத்தின் உரிமையாளரை நாம் தொடர்பு கொண்டு, மேலும் இந்த சம்பவம் குறித்து அவரிடம் வினவினோம்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி அந்தப் பெண் தனது குழந்தையுடன் தனது சலூனுக்கு வந்ததாகவும், தனது தலைமுடியை சரிசெய்ய வேண்டும் என்று கூறியதாகவும், ஆனால் அன்று வேறு வேலைகளுக்காக முன்பதிவுகள் இருந்ததனால், வேறொரு நாள் திரும்பி வரும்படி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த முன்பதிவை மேற்கொள்வதற்காக பல தடவைகள் தனக்கு தொலைபேசி மூலம் அழைத்தாகவும், மற்றுமொரு நாள் மீண்டும் அழைத்து இன்று தான் அழகுக்கலை நிலையத்திற்கு வருவதாகவும், ஒன்றரை மற்றும் இரண்டு இலட்சத்திற்கு வேலையொன்று செய்ய வேண்டும் என்றும், தனக்கு தனது திருமண வைபவத்தை சிறப்பாக செய்ய முடியாமல் போனதாகவும் அன்றைய தினமே தனக்கு மணப்பெண் போல அணியவேண்டும் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுநாள், சந்தேகத்திற்கிடமான பெண் தனது கணவர் என்று கூறிக் கொள்ளும் ஒரு ஆணுடன் சலூனுக்கு வந்ததாகவும். அவர் மணப்பெண்ணாக உடை அணிய விரும்பியதால், சலூனில் இருந்த மணப்பெண் உடைகளை முயற்சி செய்து பார்த்தார் எனவும் தெரிவித்தார்.

அழகு நிலையத்தின் உரிமையாளர் விருந்து அலங்காரங்கள் (Party Decos) மற்றும் Birthday Surprise  போன்றவற்றை செய்பவர், மேலும் இறக்குமதி செய்யப்பட்ட சொக்லட்டுகளும் சலூனின் ஒரு பகுதியில் விற்பனைக்கு உள்ளன. மேற்கூறிய சந்தேகநபர் தனது கணவரை  Surprise செய்ய விரும்புவதாகக் கூறி ஒரு சொக்லட் கூடையைத் தயாரிக்க கூறி, அதை அழகு நிலையத்தின் உரிமையாளர் அந்த நேரத்தில் சலூனுக்கு வெளியே இருந்த சந்தேக நபரின் கணவர் என்று கூறப்படும் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

மேலும், சந்தேகத்திற்குரிய பெண் மணப்பெண்ணாக அலங்கரிக்க உண்மையான பூக்களினாலான  பூங்கொத்து தேவை என்று கூறியதால், தேவையான அலங்காரப் பொருட்களை கொண்டு வருவதற்கு போதுமான நேரம் இல்லாததால் தனது கணவரை அழகுக்கலை நிலையத்திற்கு அழைத்ததாக, அழகுக்கலை நிலைய உரிமையாளர் எங்களிடம் தெரிவித்தார். இது குறித்து தனது கணவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ​​மேற்கூறிய பெண் சிறிது நேரத்தில் அழகுக்கலை நிலையத்தை விட்டு வெளியேறியதை தான் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர், உரிமையாளர் அவரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்ட போது, பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றதாகக் அவர் கூறியுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் பல நாட்களாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாலும், நட்பாக பழகியதாலும், உரிமையாளர் அப்போது எதையும் சந்தேகிக்கவில்லை, பின்னர் தொலைபேசி அழைப்புகளுக்கு அந்த பெண் பதிலளிக்கவில்லை. 

பின்னர் ஆராய்ந்ததில் அழகுக்கலை நிலைய உரிமையாளரின் பணப்பையும் அங்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், சொக்லட் கூடைக்கான பணம் முன்னதாகவே செலுத்தப்படாததால், பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அழகு நிலையத்தின் உரிமையாளர் மேலும் கூறுகையில், தான் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், அடையாள அணிவகுப்பின் போது அந்தப் பெண்ணை அடையாளம் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். இருப்பினும், அந்த பெண்ணின் கணவர் என கூறிய நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை இருந்ததால் இந்த விடயத்தை முதலில் கைவிட எண்ணியதாகவும், இருப்பினும் இந்த பெண் இந்த வழியில் மேலும் பல பணமோசடி திட்டத்தைச் செய்திருக்கலாம் என்பதால் பின்னர் சட்ட உதவியை நாடியதாக அழகுக்கலை நிலைய உரிமையாளர் கூறினார்.

எனவே இந்த சம்பவம் தொடர்பான அடுத்தக்கட்ட நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெற இருப்பதனால், அதன் பின்னர் கிடைக்கும் அறிக்கைகளைக் கொண்டு இந்த கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:சொக்லட் திருடியமைக்காக தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தில் ஊடகங்கள் வெளியிட தவறியவை!

Fact Check By: Suji shabeedharan  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *