விரிவுரையாளர் கொலை வழக்கில்  சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகநபர் சார்பில் ஆஜராகினாரா?

Missing Context இலங்கை | Sri Lanka

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தின் பெண் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குறித்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மகள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியுள்ளார் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Threads | Archived Link

குறித்த பதிவில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் திலீபன் தயாளினி கொ*லை வழக்கு!

விரிவுரையாளரின் மகளான சந்தேகநபருக்கு சார்பாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜர்! என தெரிவிக்கப்பட்டு 2026.03.22 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த விடயம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கம் செலுத்தியிருந்தமையையும் காணமுடிந்தது.


Fact Check (உண்மை அறிவோம்)

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டவாறு சந்தேக நபரான மகள் சார்பில் சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் ஆஜராகியுள்ளாரா என்பது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகளில் வெளியாகியுள்ளனவா என்பதனை நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.

எனவே இந்த விடயம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமைக்கு பிரதான காரணம் என்ன என்பது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டோம். இதன்போது,கஜி ரிப்போர்ட் என்ற பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் வெளியான பதிவே பிரதான காரணமாக அமைந்திருந்தது. நாம் அந்த பேஸ்புக் பக்கத்திற்கு சென்று மேலும் ஆராயும் போது அங்கு குறித்த பதிவு நீக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பதிவின் screenshot கீழே இணைப்பட்டுள்ளது.

Archived Link

இந்த பதிவே தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது. எனினும் குறித்த பேஸ்புக் பக்கத்தில் அந்த பதிவு நீக்கப்பட்டிருந்தாலும் அதன் பின்னர் அந்த பதிவு தவறானது என தெரிவிக்கப்பட்டு மறுப்பு பதிவொன்றை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

FB | Archived

அது மாத்திரமன்றி இது குறித்து விளக்கமளிக்கப்பட்ட பதிவொன்றையும் அவர் பதிவேற்றம் செய்திருந்தமையையும் காணமுடிந்தது.

Archived Link

சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன்

நாம் இந்த தகவலின் பின்னணி தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்த போது சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் இது குறித்து அவரின் பேஸ்பக்த்தில் பதிவிட்டிருந்த இரண்டு பதிவுகளை காணமுடிந்தது.

அதில் முதலாவது பதவில் தயவு செய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்!

பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரிற்காகவே திரு சுமந்திரன் அவர்கள் நீதிமன்றில் முன்னிலையானார்.

மேலும், தவறான செய்திகளைப் பரப்புவர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Archived Link

அதேபோன்று சுமந்திரன் அவர்களின் இரண்டாவது பதிவில் இரண்டாவது தடவையாகவும் பொய்ச் செய்தியை கஜி ரிப்போர்ட் பரப்புகிறது!

திரு சுமந்திரன் அனுமதி கேட்கவும் இல்லை, நீதிமன்றம் அப்படி கட்டளையிடவும் இல்லை. நீதிமன்ற நடவடிக்கைகளை தவறாக பிரசுரிப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் – Admin என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Archived Link

இது குறித்து மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் எம்.ஏ. சுமந்திரன் அவர்களை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை ஆகவே அவரிடமிருந்து இந்த விடயம் தொடர்பில் விளக்கம் கிடைத்தவுடன் நாம் அதனை இந்த கட்டுரையில் இணைக்க காத்திருக்கின்றோம்.


யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

நாம் இது குறித்து யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம் இதன்போது, மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மகள் மற்றும் மருமகன் இருவரும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் கொலைசெய்யப்பட்ட விரிவுரையாளரின் மகளான சந்தேகநபர் நேற்றைய 22ஆம் திகதி இடம்பெற்ற அவரின் இறுதிக்கிரியைகளின் கலந்துகொண்டாரா என நாம் வினவினோம். இதன்போது சந்தேகநபராக இருந்தாலும் சரி குற்றவாளியாக இருந்தாலும் சரி தாயின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள அனுமதி கேட்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார் ஆனால் அந்த பெண் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டாரா இல்லையா என்பதற்கு இறுதியான பதில்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.

மேலும் குறித்த வழக்கு விசாரணைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் எந்த தகவல்களும் வழங்குவது சட்டத்திற்கு உட்பட்டது அல்ல எனவும் குறித்த விரிவுரையாளரின் மகளான சந்தேகநபர் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டமைக்கான எந்த ஆதாராங்களும் இல்லை என்பதனையும் அவர் எமக்கு தெரிவித்தார்.

அதேவேளை இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் …. 2023.03.19 அன்று யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுண்டுக்குளி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் காணாமல் போனதாக, அந்த பெண்ணின் மகனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காணாமல் போனதாக கூறப்படும் அந்த பெண் தனது திருமணமான மகன் மற்றும் மகனுடன் வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. மகள் தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தாயுடன் வீட்டில் தங்கி வந்ததும் தெரிய வந்தது.

அந்த பெண் காணாமல் போன நாளிலிருந்து மகள் வீட்டில் இல்லாத நிலையில், அவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மகள் தனது கணவருடன் திருகோணமலை நிலாவெளி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகள் குழு மகளையும் அவரது கணவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், 2026.03.18 அன்று அதிகாலை வீட்டில் அந்த பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்து, பின்னர் மன்னார் பகுதிக்கு காரில் கொண்டு சென்று காட்டுப்பகுதியில் உடலை வீசி விட்டு, இருவரும் நிலாவெளி பகுதிக்கு சென்றுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் உடல் மன்னார் சாலையில் உள்ள காற்றாலை 4ஆம் கோபுரம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் யாழ்ப்பாண பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்தவர் வயது 53, யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட மகளும், அவரது கணவரும் 2026.03.21 அன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். என மாத்திரமே அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ். பிராந்திய ஊடகவியலாளர்கள்

இந்த சம்பவம் தொடர்பில் நாம் யாழ். பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம் இதன்போது, ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற விரிவுரையாளர் தயாளினி திலீபன் அவர்களின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக அவரின் மகளான சந்தேகநபர்  மயானத்திற்கு வந்தமை உண்மை என்பதனை அவர் எமக்கு தெரிவித்தார். மயானித்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர், தயாரின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்ததன் பின்னரே நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன்பின்னரே அவருக்கு எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டனர்.

மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை போன்று சந்தேகநபரான மகளின் சட்டத்தரணியாக எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகவில்லை எனவும், அவர் கொலைசெய்யப்பட்ட விரிவுரையாளருக்காகவே ஆஜரானதாகவும் குறிப்பிட்டனர்.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் திலீபன் தயாளினி கொலைச் சப்பவம்

யாழ். பாண்டியன்தாழ்வில் வசித்துவந்த 54 வயதுடைய தனது தாய் திலீபன் தயாளினி  காணாமல் போனதாக பெண் விரிவுரையாளரின் மகன் கடந்த 19 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தனது தங்கை மற்றும் அவரின் கணவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியிருந்தார்.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் விரிவுரையாளரின் 19 வயதான மகள் மற்றும் 21 வயதான மருமகன் ஆகியோரை  திருகோணமலையில் வைத்து 20 ஆம் திகதி கைது செய்தனர்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது பெண் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் உள்ள புதரில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை பொலிஸார் 21 ஆம் தழகதி மீட்டுள்ளனர்.

சடலத்தை அடையாளம் காண்பதற்காக சந்தேகநபரான மகளையும் பொலிஸார் தனங்கிளப்பு பகுதிக்கு அழைத்துச்சென்றிருந்தனர்.

சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கடந்த 22 ஆம் திகதி கொலைசெய்யப்பட்ட விரிவுரையாளருக்க இநுதிக்கிரியைக்ள இடம்பெற்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.Link

யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தின் சித்த மருத்துவபீடத்தின் சமூக நலத்துறை தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர், டொக்டர் தயாளினி திலீபன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..Link | Link 


எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் திலீபன் தயாளினியின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியுள்ளதாக பகிரப்பட்ட தகவல் தவறானது என்பதுடன், அந்த வழக்கில் தான் சந்தேகபர் சார்பில் ஆஜராகவில்லை எனவும், தான் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் தரப்பிலேயே ஆஜராகியுள்ளதாகவும் சுமந்திரன் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: விரிவுரையாளர் கொலை வழக்கில்  சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகநபர் சார்பில் ஆஜராகினாரா?

Fact Check By: Suji Shabeedhran

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *