
முழுமையான அறிக்கைகளில் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து, வெவ்வேறு தலைப்புகளுடன் வெளியிடும்போது சில சந்தர்ப்பங்களில் அதன் அர்த்தம் சிதைக்கப்படுகின்றது. அவ்வாறு வெளியிடப்பட்ட ஒரு பதிவு குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

“நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிவில், உள்நாட்டு உற்பத்திகளை விடக் குறைந்த விலையில் நாட்டில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி பொருட்கள் குறித்து ஆராய்ந்து, அவற்றுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத்தளை கைத்தொழில் பூங்காவிற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் காலணிகள், டைல்ஸ் மற்றும் தீப்பெட்டிகள் போன்ற தயாரிப்புகள் குறித்த தகவல்களை வழங்குவது உள்நாட்டுத் தொழிலதிபர்களின் பொறுப்பாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மேற்கூறிய பதிவில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் ‘நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் கடும் தண்டனை’ எனும் தலைப்பைப் பயன்படுத்தி, கேலிக்கை ரீதியிலான பதிவுகள் பலவும் பின்வருமாறு உருவாக்கப்பட்டிருந்தன.

அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களும் உள்நாட்டு உற்பத்திகளை விடக் குறைந்த விலையில் இருந்தால், அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் அல்லது தண்டனை வழங்க முடியும் என்ற ரீதியில் இந்தப் பதிவுகள் பகிரப்பட்டிருந்தன.
இது குறித்து பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவா என்பது குறித்து நாம் ஆராய்ந்த போது, சில ஊடகங்கள் அந்தச் செய்தியை இவ்வாறு வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
முக்கியமாக, பிரதான ஊடகங்களும் ‘நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் கடும் தண்டனை’ எனும் தலைப்பிலேயே இச்செய்தியை வெளியிட்டிருந்தன. எனவே, இது குறித்த சரியான தகவல்களைச் சரிபார்ப்பதற்காக, மாத்தளை கைத்தொழில் பூங்காவிற்கான கண்காணிப்பு விஜயத்தின் போது அமைச்சர் உண்மையில் என்ன கூறினார் என்பது குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
அமைச்சர் உண்மையில் கூறுவது என்ன?
மாத்தளை மாவட்டத்திலுள்ள கைத்தொழில் பூங்காக்களுக்கு மேற்கொண்ட விசேட கண்காணிப்பு விஜயத்தின் போது அமைச்சர் தெரிவித்தது என்னவென்றால், ஏதேனும் ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பொருள், அந்த நாட்டில் அதனை உற்பத்தி செய்வதற்குச் செலவாகும் தொகையை விடக் குறைந்த விலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுமாயின், அது குறித்து ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யும் வசதி உள்நாட்டுத் தொழிலதிபர்களுக்கு உள்ளது என்பதாகும். அவ்வாறு முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில், அது குறித்து ‘Anti-dumping’ (சந்தையில் பொருட்களைக் குவிப்பதற்கு எதிரான) சட்டத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்படும் சில பொருட்கள் உள்ளன. அவற்றில் சில, அந்த நாட்டின் உற்பத்திச் செலவை விடவும், 100% வரி விதிக்கப்பட்ட பின்னரும் குறைந்த விலையிலேயே (சந்தைக்கு) வருகின்றன. அவ்வாறு நிகழ்கிறது என்றால் அது ‘Under-value’ அல்லது சட்டவிரோதப் பாதையூடாகக் கொண்டு வரப்பட்ட ஒன்றாகவே இருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், அந்தப் பொருளின் ‘Origin’ வரை சென்று எமது உற்பத்திக்கு இது ஒரு அச்சுறுத்தல் என எம்மால் முறைப்பாடு செய்ய முடியும். ஆனால், அந்த முறைப்பாடு போதிய ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட வேண்டும்.”
இதன்படி, தரமற்ற இறக்குமதிப் பொருட்களிலிருந்து உள்நாட்டுத் தொழில்முயற்சியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்காக ‘Anti-dumping‘ சட்டத்தின் ஊடாகச் செயற்பட முடியும் என்பதையே அமைச்சர் வலியுறுத்துகின்றார்.
மேலும் உதாரணங்களுடன் விடயங்களைத் தெளிவுபடுத்திய அமைச்சர், சில பொருட்களுக்கு அரசாங்கம் 100% வரி விதித்த போதிலும், உள்ளூர் சந்தையில் அத்தகைய சில பொருட்கள் அந்த வரியை விடவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். முறையான தரத்துடனும், சரியான நடைமுறைகளைப் பின்பற்றியும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருளை அவ்வாறு (அவ்வளவு குறைந்த விலையில்) விற்பனை செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
“அவர்களுக்கு நாம் 200% வரி விதித்தாலும், எமது காலணி சோடியின் விலையை விடவும் (அவர்களது பொருட்களின்) விலை குறைவாகவே உள்ளது. டைல்ஸ், லைட்டர்கள், தீப்பெட்டிகள் என 100% சமமான பொருட்கள் உள்ளன. மிகக் குறைந்த விலையில் பெருமளவிலான லைட்டர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நாம் விதிக்கும் வரியை விடவும் அவற்றின் விலை குறைவாகவே உள்ளது.”
அமைச்சர் இது குறித்து விரிவாக விளக்கும் காணொளி அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. தரம் குறைந்த இறக்குமதிப் பொருட்களிலிருந்து உள்நாட்டுத் தொழில்முயற்சியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்காக ‘Anti-dumping’ சட்டத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்து அமைச்சர் அங்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தியின் ஊடகச் செயலாளர்
மேலும் நாம் இந்த விடயம் கறித்து அமைச்சரின் ஊடகச் செயலாளரிடம் வினவியபோது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும், அந்த நாட்டில் உற்பத்திச் செலவை விடவும் குறைந்த விலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த பொருட்கள் குறித்தே அமைச்சர் அங்கு தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் எனத் தெரிவித்தார். முறையான நடைமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் தரமான இறக்குமதிப் பொருட்கள் குறித்து அவர் அவ்வாறு கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சில சமூக ஊடகப் பதிவுகள் அமைச்சரின் அறிக்கையை தவறாக வழிநடத்தும் வகையில் வெளியிட்டுள்ளதாகவும் ஊடகச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Anti-Dumping சட்டத்தில் உண்மையில் தெரிவிக்கப்படுவது என்ன?
வணிகத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ‘Anti-Dumping and Countervailing Duties’ சட்டத்தின்படி, அமைச்சர் குறிப்பிடும் சட்ட ரீதியான விடயம் பின்வருமாறு:
அதாவது, இந்தச் சட்டமானது குறைந்த விலையுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் அபராதம் விதிப்பதற்கான ஒன்று அல்ல. மாறாக, இது வரையறுக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடைமுறையாகும். இதற்கமைய, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் பின்வரும் மூன்று நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- பொருள் ‘டம்பிங்’ (Dumping) செய்யப்பட்டிருத்தல்: அதாவது, ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டில் அதன் சாதாரண விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுதல் (இலங்கையில் உள்ள விலையை விடக் குறைவாக இருப்பது மாத்திரம் இதில் கருத்திற் கொள்ளப்படாது).
- அந்த ‘டம்பிங்’ காரணமாக இலங்கையின் உள்நாட்டுத் தொழில்துறைக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டிருத்தல்: இவ்வாறான இறக்குமதிகள் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை எதிர்நோக்கியிருக்க வேண்டும்.
- குறித்த பாதிப்பிற்கும் ‘டம்பிங்’ செய்வதற்கும் இடையே தெளிவான தொடர்பு இருப்பதைக் காண்பித்தல்: ஏற்பட்ட பாதிப்பானது நேரடியாக இந்த விலைகுறைந்த இறக்குமதிகளால்தான் நிகழ்ந்தது என்பதைச் சான்றுகளுடன் நிரூபித்தல்.
மேலும், இந்த சட்டத்தின்படி ஆதாரங்கள் போதாமல் இருந்தாலோ அல்லது ‘டம்பிங்’ (Dumping) பெறுமதி மிகக் குறைவாக இருந்தாலோ விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில் இந்த சட்டம் திருத்தப்பட்டு விசாரணை நடைமுறைகள் மேலும் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பொருளுக்கும் உள்நாட்டுப் பொருளுக்கும் இடையிலான விலை வேறுபாடு மட்டுமே சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான காரணியாக அமையாது என்பதாகும். அதற்கு அதிகாரபூர்வமான முறைப்பாடு, ஆதாரங்கள் மற்றும் முழுமையான விசாரணை அவசியமாகும். அமைச்சர் தனது விளக்கத்திலும் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் இந்தச் சட்ட ரீதியான நிலைமையை முழுமையாகத் தவறாகச் சித்தரித்துள்ளன. எந்தவொரு இறக்குமதிப் பொருளையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்ற தொனியில் அந்தப் பதிவுகள் அமைந்துள்ளன. எனவே, சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்படுவது போன்ற கருத்தை அமைச்சர் தெரிவிக்கவில்லை.
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஏன் உள்நாட்டு உற்பத்திகளை விடக் குறைந்த விலையில் இருக்கக்கூடும் என்பதற்கான நியாயமான காரணங்கள் குறித்த விளக்கம்
சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளிலோ அல்லது அமைச்சரின் கூற்றை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கைகளிலோ குறிப்பிடப்படாத மற்றுமொரு சிறப்பம்சமான விடயம் இதுவாகும். அதாவது, முறையான நடைமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது. இலங்கையில் பல கைத்தொழில் துறைகளில் போதிய உற்பத்தித் திறன் இல்லாமை மற்றும் சில பொருட்களைப் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் உற்பத்தி செய்ய முடியாமை ஆகியவையே இதற்குப் பிரதான காரணங்களாகும். இதனைப் புரிந்துகொள்வதற்கான சில உதாரணங்கள் பின்வருமாறு
வீட்டு மின்சாதன உபகரணங்கள் (தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள்)
இலங்கையில் பொதுவாக மின்சாதன உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. Hisense, Samsung, LG போன்ற வர்த்தக நாமங்களின் கீழ் இவ்வுபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை பாரிய அளவிலான உற்பத்திகள் (Large-scale production) என்பதால், ஒரு அலகுக்கான உற்பத்திச் செலவு 30–50% வரை குறைகிறது. இதற்கமைய, இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்ட போதிலும், இந்தச் சாதனங்களை ஒரு போட்டித்தன்மை வாய்ந்த விலையில் அல்லது குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடிகிறது.
அதாவது, இலங்கையில் அத்தகைய ஒரு சாதனத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் விலையை விடக் குறைந்த விலைக்கு, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சாதனத்தை வாங்க முடியும். இங்கு அந்த இறக்குமதிப் பொருளின் விலை குறைவதற்கு அது சட்டவிரோதமானது என்பது காரணமல்ல; மாறாக அவர்கள் பாரிய அளவில் உற்பத்தி செய்வதனாலும், குறைந்த உற்பத்திச் செலவுமே காரணமாகும்.
செரமிக் டைல்ஸ்
இந்தியா, சீனா போன்ற நாடுகள் தானியங்கி உலைகள் (Automated kilns) மற்றும் குறைந்த எரிசக்தி செலவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அளவை விடவும் அதிகளவிலான டைல்ஸ் உற்பத்தி செய்கின்றன. இதற்கமைய, முறையான நடைமுறைகளின் கீழ் வரி செலுத்தி இறக்குமதி செய்யப்படும் டைல்ஸ், ‘டம்பிங்’ (Dumping) காரணமாக அன்றி, அவற்றின் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதன் காரணமாகவே உள்நாட்டு டைல்ஸ்களை விடக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
லைட்டர் மற்றும் தீப்பெட்டி
அமைச்சர் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டது போல, 100% வரி விதிக்கப்பட்ட போதிலும் லைட்டர்கள் போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் நாட்டிற்குள் வருகின்றன. இது உற்பத்திச் செலவு நன்மையின் (Production cost advantage) காரணமாக நிகழும் ஒன்றாகும். இது ஒரு கட்டாயமான சட்டவிரோத வர்த்தகம் என்பதற்கான சான்று அல்ல.
பிளாஸ்ட்டிக் வீட்டு உபகரண பொருட்கள்
இலங்கையானது பிளாஸ்டிக் உற்பத்திக்குத் தேவையான ‘Polymer’ மற்றும் ‘Resin’ போன்ற மூலப்பொருட்களை முழுமையாக இறக்குமதி செய்கின்றது. இதற்கமைய, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், வரிகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பொருட்களை விட அதிக விலை கொண்டதாக இருக்கக்கூடும்.
எனவே, இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் காணப்படும் குறைந்த விலையானது நாடுகளுக்கு இடையிலான போட்டித்தன்மை, பாரிய அளவிலான உற்பத்தி மற்றும் இலங்கையின் கைத்தொழில் திறன் பற்றாக்குறை போன்ற காரணங்களாலேயே ஏற்படுகின்றது. இது சட்டவிரோதமான ‘டம்பிங்’ (Dumping) நடவடிக்கையினால் ஏற்படும் ஒன்றல்ல.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், உள்நாட்டு உற்பத்திகளை விட குறைந்த விலையில் நாட்டில் விற்பனை செய்யப்படும் இறக்குமதிப் பொருட்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.
மேலும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் கூறுகையில், விதிக்கப்பட்டுள்ள வரிகளை விடக் குறைந்த விலையிலும், அந்தப் பொருளை உற்பத்தி செய்த நாட்டில் அதன் உற்பத்திச் செலவை விடவும் குறைவான விலையிலும் ஒரு பொருள் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுமானால், அது தரமற்ற, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருளாக இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். எனவே, அத்தகைய தயாரிப்புகள் குறித்து சான்றுகளுடன் முறையாக முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில், அது குறித்து ஆராய்ந்து ‘Anti-dumping’ சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையே அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


