
கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய சேதங்களுக்கு நாடு முகங்கொடுத்திருந்தது. அந்த பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்களை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நன்கொடையாக பெய்லி பாலங்களை வழங்கியிருந்தது.
அந்த வகையில் அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை இந்திய இராணுவத்தினர் இரண்டே நாட்களில் அமைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

சாதனை படைத்த இந்திய ராணுவம்.. புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில், இரண்டே நாட்களில் 120 அடி நீளத்திற்கு ராட்சத பாலத்தை அமைத்து இந்திய ராணுவத்தினர் சாதனை.. யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவத்தின் சிறப்பு பொறியியலாளர் பணிக்குழுவினர், இரட்டை வழிப் பாதையுடன் பெய்லி பாலத்தை வெற்றிகரமாக கட்டமைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவு 2025.12.23 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்கைளை மீண்டும் புனரமைப்பதற்காக இந்தியாவினால் தற்காலிக பெய்லி பாலங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தன.
அந்தவகையில் தித்வா புயலின் போது சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை, இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர், இலங்கை இராணுவத்தினரோடு இணைந்து புனரமைத்துள்ளனர். எனவும் இந்த தற்காலிக பேய்லி பாலம் கடந்த 23ஆம் திகதி பொதுமக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்ட செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை எமது ஆய்வுகளின் மூலம் அறியமுடிந்தது.Link | Link
எனினும் அந்த செய்திகளில் இந்த பாலத்தை இந்திய இராணுவத்தினர் மாத்திரம் செய்ததாகவோ அல்லது இந்த பாலமானது இரண்டே நாட்களில் செய்து முடிக்கப்பட்டதாகவோ தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
எனவே நாம் இது தொடர்பில் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது, வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த A – 35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் பதினோராவது கிலோமீற்றரில் உள்ள பாலத்தின் புனரமைப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவ பொறியியல் அணியைச்சேர்ந்த 37 இந்திய இராணுவத்தினர் கடந்த 08 ஆம் திகதி கிளிநொச்சிக்கு வருகை தந்து புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் இவர்களுடன் இலங்கை இராணுவத்தினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் இணைந்து பாலத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு அத தெரண இணையதளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
அதேபோன்று கடந்த 8 ஆம் திகதி இந்த புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்தற்காக கிளிநொச்சிக்கு வருகைத்தந்த இந்திய இராணுவத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணொளியானது District Media Unit News பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த புனரமைப்பு பணிகள் இரண்டாவது நாளாக தொடர்வதாகவும், இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கப்பட்டுவரும் பாலத்தினை யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்ட செய்திகள் பிரதான ஊடகங்களில் கடந்த 09 ஆம் திகதி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புனரமைப்புப் பணிகளை பார்வையிடச் சென்ற யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி ஊடகங்களில் தெரிவித்த கருத்து பின்வருமாறு
சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை புனரமைத்து மீண்டும் அந்த பாலமாலமானது கடந்த 23 ஆம் திகதியே மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் பிரதான ஊடகங்களில் வெளியான செய்திகளை காண்க. Link | Link
இந்த பாலத்திற்கான புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவுசெய்யப்பட்டு அது கடந்த 23 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்கள் தமது x தளத்தில் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தகது.

இவற்றின் அடிப்படையில் கடந்த 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து இந்த பாலமானது மக்கள் பாவனைக்கு கடந்த 23 ஆம் திகதியே கையளிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த பாலமானது இரண்டே நாட்களில் முழுமையாக புனரமைக்கப்பட்டுவிட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
எனினும் இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெறுவதற்காக நாம் முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது வெள்ள அனர்த்தம் காரணமாக A35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் 10ஆவது கிலோமீற்றரில் உள்ள பாலம் சேதமடைந்ததையடுத்து அங்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட பேய்லி பாலங்களை அமைக்கும் நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவத்தின் பொறியியலாளர்கள் குழு கடந்த 08 ஆம் திகதி கிளிநொச்சிக்கு வந்து குறித்த பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஆரம்பித்ததாகவும, அந்த பாலத்தின் முழுமையான புனரமைப்புப் பணிகள் முடிவடைந்து கடந்த 23 ஆம் திகதியே குறித்த பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த பாலத்தை புனரமைக்க சுமார் 15 – 20 நாட்கள் எடுத்ததாகவும் இந்த பணியில் இந்நிய இராணுவத்தினர், மற்றும் இலங்கை இராணுவத்தினர், கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்களும் ஈடுபட்டனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபை
இந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் ஆரம்பம் முதல் செயற்பட்ட கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஒருவரை தொடர்புகொண்டு நாம் இது குறித்து வினவியிருந்தோம். இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களில் தவறுகள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் சேதமடைந்த A35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் 10ஆவது கிலோமீற்றரில் உள்ள பாலத்தை பார்வையிடுவதற்கு இந்திய இராணுவத்தினர் கடந்த 03 ஆம் திகதியே கிளிநொச்சிக்கு வந்ததாகவும், சேதமடைந்த பாலத்தை முழுமையாக அகற்றி அந்த இடத்தி கொங்றீட் இடப்பட்டு, அதன் பின்னரே அந்த இடத்தில் புதிதாக பேய்லி பாலங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இந்த புனரமைப்பு பணிகளின் போது பேய்லி பாலங்களை அமைக்கும் பணிகளே பிரதானமாக இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கும் இலங்கை இராணுவத்தினர் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியதாகவும், அது மாத்திரமன்றி சேதமடைந்த பாலத்தை அகற்றுதல் மற்றும் கொங்றீட் இடுதல் உள்ளிட்ட பணிகளை இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து வீதி அபிவிருத்தி அதிகாரபையே மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த பாலத்தை முழுமையாக 2 நாட்களில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடயமாகும் எனவும், சேதமடைவதற்கு முன்னர் இந்த பாலம் 24 மீட்டர் நீளத்தை கொண்டிருந்ததாகவும் தற்போது புனரமைக்கப்பட்டதன் பின்னர் அந்த பாலத்தின் நீளம் 36 மீட்டர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே இந்த பாலத்தை முழுமையாக செய்து முடிப்பதற்கு 20 நாட்கள் எடுத்தாகவும், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் மற்றும் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கூட்டு முயற்சியினாலேயே இந்த பாலம் முழுமையாக்கப்பட்டு தற்போது மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை இந்திய இராணுவத்தினர் இரண்டே நாட்களில் முழுமையாக அமைத்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், சேதமடைந்த பாலத்தை அகற்றி மீண்டும் அங்கு பேய்லி பாலத்தை அமைப்பதற்கு முழுமையாக 20 நாட்கள் எடுத்துள்ளது எனவும், இது தனியாக புனரமைக்கப்படவில்லை என்பதுடன் இந்திய இராணும், இலங்கை இராணுவம், கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கூட்டு முயற்சியிலேயே இந்த பாலமானது புனரமைப்பட்டுள்ளது என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு பாலத்தை இந்திய இராணுவம் இரண்டே நாட்களில் புனரமைத்ததா?
Fact Check By: Suji shabeedharanResult:Missing Context


