‘Anura Go Home’ ஆரம்பிப்போம் என தெரிவித்து சில இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த பதிவில் “அநுர கோ கோம் ஆரம்பிப்போம்”
அநுர அரசாங்கத்திற்கெதிராக இன்று கொழும்பை நோக்கி பாரிய இளைஞர்படையொன்று திரண்டது!
அரசாங்கம் இளைஞர் சேவை மன்றங்களில் பாரிய அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய இவர்கள் அரசுக்கெதிராகவும் இளைஞர் விவகார பிரதியமைச்சருக்கு எதிராகவும் சுலோகங்களை ஏந்தி வந்தோடு, “அநுர கோ கோம்” ஆரம்பிப்போம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். என தெரிவித்து கடந்த 2025.08.06 ஆம் திகதி குறித்த காணொளியானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன் உண்மை அறியாத பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
உண்மையில் ‘Anura Go Home’ உருவாகலாம் என தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்களாயின் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை என்பது உறுதியானது.
எனவே மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, இருவேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட காணொளிகளை ஒன்றாக இணைத்து குறித்த காணொளியானது உருவாக்கப்பட்டுள்ளமையை அறியமுடிந்தது.
எனவே அதில் முதல் பாதி காட்சியானது 2022 ஆம் ஆண்டு கண்டி புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி என்பதனை அறியமுடிந்தது.
மேலும் இந்த காணொளி தொடர்பில் நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 09 ஆம் திகதி கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பிற்கு புகையிரதம் ஒன்றை அனுப்புவதற்காக இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து புகையிரமொன்று கொழும்பிற்கு பயணத்தை ஆரம்பித்தது.
அதாவது ஆட்சி மாற்றத்திற்காக நாடு முழுவதிலுமுள்ள மக்கள் காலிமுகத்திடலை நோக்கி படையெடுத்தனர். அதன்போது கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிப்பதற்காகவே இந்த புகையிரதத்தில் மக்கள் தேசிய கொடிகளை ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பிய வண்ணமும் சென்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் இணைக்கப்பட்டுள்ள இரண்டாவது காட்சி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, அந்த காணொளியானது கடந்த 2025.08.06 ஆம் திகதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அரசியல் மயமாக்கப்பட்டு வருவதாக தெரிவித்து சமூக செயற்பாட்டாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
கடந்த 06 ஆம் திகதி மஹரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அங்கு வருகைத்தந்திருந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் இது ‘Anura Go Home’ போராட்டமா? என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேள்வியெழுப்பியபோது, இங்கு அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் இது அதற்கான போராட்டமோ அல்லது ஆட்சி மாற்றத்திற்கான போராட்டமோ அல்ல இது இளைஞர் சேவைகள் மன்றத்திற்குள் இடம்பெறும் அரசியல் தலையீடுகளுக்கு எதிரான போராட்டம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்னர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு
மேலும் குறித்த சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ‘Anura Go Home’ உருவாகும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அண்மையில் இளைஞர்களினால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதா என நாம் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, அவ்வாறான எந்தவித போராட்டகளும் இடம்பெறவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டமானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் இளைஞர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமே தவிர அங்கு ‘Anura Go Home’ என்ற விதத்திலான எந்தவித கோஷங்களும் எழுப்பப்டவில்லை எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியது.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
அதனடிப்படையில் நாம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் ‘Anura Go Home’ ஆரம்பிப்போம் என இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன் அந்த காணொளியானது இருவேறு சம்பங்களின் காணொளிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒன்று என்பதுவும் கண்டறியப்பட்டது.
மேலும் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டமானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:‘Anura Go Home’ ஆரம்பிப்போம் என எச்சரித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டமா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading
