புற்றுநோயை முழுமையாக அழிக்கும் தன்மை கற்றாழைக்கு உள்ளதா?

Misleading மருத்துவம்

புற்றுநோய் என்று கூறும் போதே அது ஒரு உயிர்கொல்லி நோய் என்பது மாத்திரமே நமது எண்ணங்களில் தோன்றும். தற்போது சில உலக நாடுகள் அந்த நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்ற அதேவேளை சமூக ஊடகங்கள் வழியாக புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய கைமருந்துகள் தொடர்பில் அவ்வப்போது பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது.

அந்த வரிசையில் தற்போது புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி செய்யப்படும் மருந்தின் செயன்முறைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றது.

எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்றுநோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

**சோற்று கற்றாழை 400 கிராம்

**சுத்தமான தேன் 500 கிராம்

**whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்

அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு

நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். என குறிப்பிட்டு 2025.11.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட சமூக ஊடக தகவலில் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr Romano Zago என்பவரே இந்த வைத்திய முறையை கண்டுபிடித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே நாம் Fr Romano Zago  தொடர்பில் ஆராய்ந்த போது,  Google Books இல் இவர் எழுதிய புத்தகம் மற்றும் இவர் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பிரேசிலைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கன் பாதிரியார் Father Romano Zago, ஒரு எழுத்தாளர் எனவும் aloe science துறையில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டவர், மற்றும் அறிஞராகப் போற்றப்படுபவர் என்பதுடன் சிறப்பான சொற்பொழிவாளர்  என்ற பெயர் பெற்றவர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் எங்கும் இவர் ஒரு மருத்துவர் என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எனினும் இவர் aloe science துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமையினால் இவர் Cancer Can Be Cured என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மேற்குறிப்பிட்ட விதத்தில் சோற்றுக் கற்றாழை, தேன் மற்றும் மதுபானம் கலந்து தயாரிக்கப்படும் மருந்து தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த புத்தகத்தின் அடிப்படையில் இந்த மருந்து தொடர்பில் விஞ்ஞான ரீதியில் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அறிக்கைகள் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. 

அத்துடன் அவர் Aloe Isn’t Medicine … and Yet … It Cures என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதிலும் கற்றாழை ஒரு மருந்தல்ல ஆனால் குணமாகிறது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது அதிலும் இவர் கற்றாழை தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுகள் அதன்மூலம் குணமடையும் நோய்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தாலும் அவரின் அந்த மருந்துகளுக்கு இதுவரை உலகளவில் அதிகாரப்பூர்வ அங்கீகாரங்கள் வழங்கப்பட்வில்லை என்பதுவே உண்மை.

உலகளாவிய சுகாதார அமைப்புகளின் அறிக்கைகள்

எனவே நாம் இது குறித்து தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் cancer research uk இல் புற்றுநோய் சிகிச்சை மற்றும் அதன் பக்கவிளைவுகளுக்கு மாற்று மற்றும் நிரப்பு சிகிச்சையாக கற்றாழையைப் பயன்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

கற்றாழைப் பயன்பாடு குறித்து ஆய்வுகள் இருந்தாலும், கற்றாழையால் எந்தப் புற்றுநோய்க்கும் சிகிச்சையளிக்க முடியும் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  • கற்றாழைப் பயன்பாடு புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதாகக் கருதப்பட்டாலும், அது செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்த போதுமான நம்பகமான ஆதாரம் இல்லை.
  • பல இணையதளங்களில் கற்றாழையை பற்றி பல சாதகமான அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தாலும், எந்தவொரு புகழ்பெற்ற அறிவியல் புற்றுநோய் நிறுவனங்களும் இந்த கூற்றுகளை ஆதரிக்கவில்லை.

 சிகிச்சையாகப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துக்கள்

கற்றாழையை புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தும் போது சில கடுமையான ஆபத்துக்கள் மற்றும் எச்சரிக்கைகள் உள்ளன:

  • புற்றுநோய் சிகிச்சையாகப் பயன்படுத்தப்படும்போது கற்றாழை கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
  • நிரூபிக்கப்படாத சிகிச்சைகளுக்காக (unproven treatment) உங்களின் வழக்கமான புற்றுநோய் சிகிச்சையை (conventional cancer treatment) நிறுத்தினால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம்.

ஆய்வுகள் கவனம் செலுத்தும் பகுதிகள்

கற்றாழையானது புற்றுநோயைக் குணப்படுத்துவதாக நிரூபிக்கப்படாவிட்டாலும், புற்றுநோய் சிகிச்சையின் பின்னர் ஏற்படும் சில பக்க விளைவுகளை குணப்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.

  • பக்க விளைவுகளுக்குச் சிகிச்சை அளித்தல்: புற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சையால் தோலில் ஏற்படும் பக்க விளைவுகளுக்குச் சிகிச்சையளிக்க ஒரு தாவர அடிப்படையிலான சிகிச்சையாக சிலர் கற்றாழையைப் பயன்படுத்துகின்றனர். இது கதிர்வீச்சு சிகிச்சையால் ஏற்படும் வாய் புண் (sore mouth) மற்றும் மலக்குடல் அழற்சி (inflammation of the rectum) போன்ற பக்க விளைவுகளுக்குப் பயன்படுத்தப்படுவது குறித்து ஆய்வுகள் உள்ளன, ஆனால் இதற்கான ஆதாரங்களும் போதுமானதாகவோ அல்லது நம்பகமானதாகவோ இல்லை.
  • ஆராய்ச்சி பரிந்துரை: 2017 ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் உள்ளவர்கள் குறித்த ஒரு ஆய்வுக் குழு, கதிர்வீச்சு சிகிச்சையால் ஏற்படும் தீக்காயங்களுக்குச் சிகிச்சையளிக்க கற்றாழையைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்தது. இது சிறிய அளவில் வேலை செய்ய வாய்ப்புள்ளதாகக் காட்டினாலும், ஆராய்ச்சியாளர்கள் அதை ஒரு சிகிச்சையாகப் பரிந்துரைக்கவில்லை.
  • அலோ எமோடின் (Aloe emodin): ‘அலோ எமோடின்’ என்ற கற்றாழைச் சாறு குறித்த சில ஆய்வுகள் உள்ளன. அதில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் செல்கள் மற்றும் க்ளியோபிளாஸ்டோமா செல்கள் (glioblastoma cells) ஆகியவற்றின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ கூடும் என்று ஒரு ஆய்வில் அறியப்பட்டுள்ளது. எனினும், மேலதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே cancer research uk இன்படி கற்றாழையானது புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கு எந்தவிதமான நம்பகமான அறிவியல் ஆதாரமும் இல்லை. மேலும், புற்றுநோய் சிகிச்சையாக நிரூபிக்கப்படாத ஒரு சிகிச்சையை நம்பி உங்கள் வழக்கமான சிகிச்சையை நிறுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

கற்றாழையைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது கட்டாயம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.Link | Link

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க

எனவே நாம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க அவர்களிடம் வினவினோம்.

இதன்போது கற்றாழை, தேன், மற்றும் மதுபானம் ஆகியவற்றிற்கு தனித்தனியான மருத்துவ பண்புகள் உள்ளன. இவை உடலுக்குள் சென்றதும் வெவ்வேறு வகையில் செயல்படுகின்றன. ஆனால், இவற்றை குறிப்பிட்ட முறையில் ஒன்றுசேர்த்து உட்கொள்வது அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மை அளிக்கும் என்பதற்கோ, இது ஒரு குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சை என கருதுவதற்கோ, தற்போது  எந்தவித நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆதாரங்களும் இல்லை என வைத்தியர் தெரிவித்தார்.

மேலும், மனிதர்களின் உடல் அமைப்பு, நோய் நிலை, மருந்து சகிப்புத்தன்மை மற்றும் தனிப்பட்ட உடல் வேறுபாடுகள் காரணமாக, இத்தகைய கலவையை உட்கொள்வது சிலருக்கு விரும்பத்தகாத பக்கவிளைவுகளையும் நீண்டகால பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது எனவே  இதனை எந்த ஒரு நோய்க்கான சிகிச்சை முறையாக கருதுவதோ, மருத்துவ சேவைகளை மாற்றியமைக்கும் மாற்று வழியாக பயன்படுத்துவதோ ஏற்புடையதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

எனவே, இத்தகைய கலவையை சிகிச்சை நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கு முன், உங்களின் உடல் நிலையை மதிப்பீடு செய்யும்  தகுதியான மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. இது தேவையற்ற அபாயங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பான மற்றும் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையைப் பெறவும் உதவும் எனவும் வைத்தியர் குறிப்பிட்டார்.

Also Read: வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் என்பன குணமாகுமா?
தினமும் வெள்ளை பூசணி சாறு குடித்தால் புற்றுநோய் குணமாகுமா?

கொழும்பு பல்கலைக்கழகம் புற்றுநோய்க்கு எதிரான மருந்தை கண்டுபிடித்துள்ளதா?


எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாக பகிரப்பட்ட தகவல் தவறானது என்பதுடன் கற்றாழையை பல நோய்களுக்கான மருந்தாக பயன்படுத்துவது தொடர்பில் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டாலும் அதனை புற்றுநோய்க்கான மருந்தாக ஏற்றுக்கொள்ள முடியும் என எந்தவொரு நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

புற்றுநோய்கு வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால் ஏற்படும் பக்க விளைவுகளை குணப்படுத்துவதற்காக கற்றாழை சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டாலும் அதற்கும் எந்தவொரு நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆதாரங்களும் இல்லை.

புற்றுநோய்க்கு ரஷ்யா போன்ற நாடுகளினால் கண்டுப்பிடிக்கப்பட்ட மருந்துகளுக்கு கூட இதுவரை உலகளவில் சுகாதார அமைப்புகளின் அங்கீகாரத்தை பெறாத பட்சத்தில், மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று கற்றாழை மூலம் உருவாக்கப்படும் மருந்தினால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்பது ஆதாரங்கள் அற்ற விடயம் என்பது தெளிவாகின்றது. 

குறிப்பு: புற்றுநோய்க்காக நீங்கள் எந்த மருந்தை உபயோகிப்பதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை நாடி அவரின் ஆலோசனையை பெறுவதே உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:புற்றுநோயை முழுமையாக அழிக்கும் தன்மை கற்றாழைக்கு உள்ளதா?

Fact Check By: Suji Shabeedhran  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *