INTRO:
இன்று (2024.11.27) இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை மையமாகக் கொண்டு சமூகத்தில் பல தவறான தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றமையை காண முடிக்கின்றது.
அந்தவகையில் இலங்கையில் பாரியளவிலான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த கணொளியானது நேற்றைய தினம் (2024.11.26) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்ட பேஸ்கணக்கு தொடர்பில் ஆராய்ந்த போது இது பிரித்தானிய வாழ் தமிழர் ஒருவரின் பேஸ்புக் பக்கம் என்பதனை நாம் உறுதிப்படுத்தினோம்
எனினும் இந்த காணொளியின் உண்மைத் தன்மை அறியாது இது இலங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு என எண்ணி சமூகவலைத்தளங்களில் இதனை பலரும் பகிர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பான உண்மைத் தன்மை தொடர்பில் நாம் ஆராய்ந்த போது இது பிரித்தானிய வாழ் தமிழரான தியாகராஜா மன்மதகுமார் என்பவரின் பேஸ்புக் கணக்கில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அவரின் பேஸ்புக் கணக்கை ஆராய்ந்த போது குறித்த நிகழ்வானது மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் Mill lane, Banbury OX17 3QP என்ற இடத்தில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அதனைத் தொடர்ந்த குறித்த இடம் தொடர்பில் நாம் ஆய்வு செய்த போது பிரித்தானியாவில் உலக தமிழ் வரலாற்று மையம் என்ற ஒரு இடம் இருப்பதனை நாம் உறுதிப்படுத்தினோம்
மேலும் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பேஸ்புக் பக்கத்தில் மாவீரர் தினத்திற்கான அழைப்பிதழ் ஒன்று பகிரப்பட்டிருந்ததனையும் எம்மால் காண முடிந்தது.
குறித்த பேஸ்புக் பதிவை பார்வையிட
இதேவேளை குறித்த காணொளியில் உள்ளவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் நாம் ஆய்வு செய்தோம்.
பிராந்திய செய்தியாளர்கள்
நாம் இது குறித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிராந்திய செய்தியாளர்களிடம் வினவினோம். இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் அமைதியான முறையில் இடமபெற்றதாகவும் குறித்த காணொளியில் உள்ளவாறான நிகழ்வுகள் எங்கும் இடம்பெறவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் எந்தவொரு இடத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடிகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் இறுதிப் போரில் உயிர்நீத்த தங்கள் உறவுகளுக்காக மிகவும் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தியதாகவும் சுட்டிக்காட்டினர்.
மேலும் இலங்கையில் மாவீரர் தினத்தை முன்னிட்டு குறித்த காணொளியில் உள்ளவாறான நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனவே அவ்வாறான செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என்பதனை நாம் ஆராய்ந்தோம்.
இதன்போது காணொளியில் உள்ளவாறு இலங்கையில் மாவீரர் தின நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், வழமையான விதத்தில் இறுதிப் போரில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் வடக்கு கிழக்கை உள்ளடக்கிய பல மாவட்டங்களில் இடம்பெற்றதற்கான செய்திகள் மாத்திரமே வெளியாகியிருந்ததனை எம்மால் காண முடிந்தது.
அவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்திகள் பின்வருமாறு
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
வவுனியாவில் மாவீர் நாள் அனுஷ்டிப்பு
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த காணொளியில் உள்ள மாவீரர் தின நிகழ்வு இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு அல்ல எனவும் குறித்த நிகழ்வானது பிரித்தானியாவின் Mill lane, Banbury OX17 3QP என்ற இடத்தில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு என குறிப்பிட்டு பகிரப்படும் காணொளி! உண்மை என்ன?
Written By: Fact Crescendo TeamResult: Misleading
