
INTRO:
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரின் கார் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில் தவறான புரிதலை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் பல பதிவுகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.
எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குடிபோதையில் சென்ற தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் பாராளுமன்ற நீர் தடாகத்தில் கவிழ்ந்தது என தெரிவித்து குறித்த காணொளி கடந்த 2024.11.26 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மை அறியாது இதனை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் பிரதான ஊடகங்களில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளதா என நாம் முதலில் ஆராய்ந்தோம்.
இதன்போது ஊடகங்களில் இது குறித்த செய்தி வெளியாகியிருந்ததனை நாம் உறுதிசெய்தோம். எனினும் குறித்த செய்திகளில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் கடந்த 2024.11.26 மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், விபத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவை மீண்டும் ஏற்றிச் செல்ல சாரதி வந்தபோதே இவ்வாறு தடாகத்திற்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாகவும் குறித்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் ஊடக செய்திகளில் குடிபோதையில் சென்றபோது குறித்த விபத்து இடமபெற்றதாக குறிப்பிடப்படவில்லை.
அவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்திகள் பின்வருமாறு
பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP உறுப்பினரின் வாகனம்
பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP எம்.பி யின் வாகனம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தெளிவனை பெறும் நோக்கில் நாம் பாராளுமன்ற பொலிஸாரிடம் வினவினோம், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வுகள் பாராளுமன்றத்தில் இந்நாட்களில் இடம்பெறுவதாகவும், குறித்த செயலமர்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறப்பினர் நிஹால் அபேசிங்கவை அழைத்து வருவருதற்காக அவரின் சாரதி வாகனத்தை பாராளுமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரும் வேலையில் சீரற்ற காலநிலை காரணமாக வீதி சரியாக விளங்காதமையினால் அவரின் வாகனம் நீர்தடாகத்திற்குள் வீழ்நததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் குறித்த விபத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இருந்தமை தொடர்பான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் இந்த சந்தர்ப்பத்தில் சாரதிக்கு எந்தவித காயங்களும் எற்படவில்லை எனவும் பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து வாகனத்தை நீர் தடாகத்தில் இருந்து வெளியே எடுத்ததாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
மேலும், விபத்தின் போது சாரதி மது அறுந்தியிருந்தாரா என நாம் பொலிஸாரிடம் வினவியபோது, அவர் மது அறுந்தியிருக்கவில்லை எனவும் அது தவறான தகவல் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஹால் அபேசிங்க தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.
மேலும் குறித்த காணொளியானது “அத தெரண“ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி என குறிப்பிடப்பட்டிருந்தமையினால் குறித்த தொலைக்காட்சியில் விபத்து தொடர்பில் எவ்வாறு செய்தி அறிக்கையிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.
இதன்போது குறித்த செய்தியில் சாரதி குடிபோதையில் இருந்ததாகவோ அல்லது விபத்து இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பாராளுமனற் உறுப்பினர் வாகனத்திற்குள் இருந்ததாகவோ தெரிவித்திருக்கவில்லை. மாறாக பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் நீர்தடாகத்திற்குள் வீழ்ந்த காணொளியை மாத்திரம் பாராளுமனற நீர்தடாகத்திற்குள் வீழ்ந்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் வாகனம் என தலைப்பிட்டு வெளியிட்டிருந்தனர். குறித்த செய்தியை பார்வையிட
மேலும் குறித்த செய்தி அவர்களின் இணையத்தள பக்கத்தில் இவ்வாறு அறிக்கையிடப்பட்டிருந்தது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் வாகனம் பாராளுமன்ற நீர்தடாகத்தினுள் விழவில்லை என்பது புலனாகின்றது. மேலும் இந்த சந்தர்ப்பத்தில் சாரதி குடிபோதையில் இருக்கவில்லை எனவும், பாராளுமன்ற உறப்பினர் நிஹால் அபேசிங்கவும் வாகனத்தில் இருக்கவில்லை என்றும், பாராளுமன்ற செயலமர்வில் கலந்து கொண்ட நிஹால் அபேசிங்கவை அழைத்து வருவதற்காக அவரின் சாரதி பாராளுமன்ற வளாகத்திற்குள் செல்லும் போது சீரற்ற காலநிலை காரணமாக வீதி சரியாக விளங்காதமையினாலேயே வாகனம் நீர் தடாகத்திற்குள் வீழ்ந்துள்ளமை தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பாராளுமன்ற நீர் தடாகத்தில் வாகனம் வீழ்ந்தமைக்கு காரணம் NPP உறுப்பினர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமையா?
Written By: Fact Crescendo TeamResult: Misleading
