சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்ததற்காக ஒருவரை சமீபத்தில் மறைந்த ஈரான் அதிபர் தூக்கிலிட்டு கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஈரானில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட புகைப்படம், சிறுமி ஒருவர் அதை பார்ப்பது போன்ற படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

நிலைத்தகவலில், "சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக எழுதியதற்காக ஈரான் அதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்தது எவ்வளவு பயங்கரமான காட்சி. அந்த ஆடவர் கிரேனில் தூக்கிலிடப்படும் போது, ​​அவரது 5 வயது மகள் தன் தந்தையை எப்படிப் பார்க்கிறாள் என்பதைப் பாருங்கள், அவரது மகள் சோகமாக இருப்பதைப் பார்த்து, அவளுடைய தந்தை தனது கடைசி நேரத்தில் கூட சிரித்து அவளை மகிழ்ச்சியடையச் செய்ய முயன்றார்.* *கற்பனை, அவர் இறக்கப் போகிறார் என்று அப்பாவுக்குத் தெரியும், ஆனால் அவர் தனது மகளை சிரிக்க வைத்து அவள் முகத்தில் இருந்து சோகத்தை அகற்ற விரும்பினார். இப்போது ஹெலிகாப்டர் விபத்தில் மிருகம் கொடூரமாக இறந்துவிட்டது, இது ஒவ்வொரு மிருகத்தின் தலைவிதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை பலரும் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழந்தார். அவர் தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சித்த நபர் ஒருவரை தூக்கிலிட்டு கொலை செய்தார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், மறைந்த இப்ராஹிம் ரெய்சியோ 2021ம் ஆண்டுதான் ஈரான் அதிபராக பொறுப்பேற்றார். இது சந்தேகத்தை ஏற்படுத்த இந்த பதிவில் கொஞ்சமாவது உண்மையுள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: bbc.co.uk I Archive

முதலில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயர் மஜித் கவுசிஃபர் (Majid Kavousifar) என்பதும் இவர் 2007ம் ஆண்டில் ஈரானில் தூக்கிலிடப்பட்டதும் தெரியவந்தது. நீதிபதி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இவரும், இவரது உறவினரும் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டதாக பிபிசி வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அந்த செய்தியில் தன்னுடன் தூக்கிடப்படுவதற்காக அழைத்து வரப்பட்ட தன்னுடைய உறவினரான ஹொசைன் என்பவர் வருத்தத்துடன் இருந்தார். அவரைப் பார்த்து மஜித் சைகை செய்து புன்னகைத்தார் என்றும், தூக்கிலிடப்பட்டவர்களில் ஒருவரின் தாயார், "கடவுளே என் மகனை என்னிடம் அளித்துவிடு" என்று கதறியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த இடத்திலும் மஜித்தின் மகள் அந்த இடத்திலிருந்தார் என்று குறிப்பிடப்படவில்லை.

உண்மைப் பதிவைக் காண: reuters.com I Archive

சிறுமியின் புகைப்படத்தை மட்டும் தனியாக கட் செய்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது அந்த புகைப்படத்தை reuters செய்தி நிறுவனம் 2007ம் ஆண்டு வெளியிட்டிருப்பது தெரிந்தது. புகைப்படம் பற்றி சிறுகுறிப்பு பகுதியில் "டெஹ்ரானில் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி மஜித் கவுசிஃபர் மற்றும் ஹொசைன் கவுசிஃபர் தூக்கிலிடப்படுவதைக் காண வந்த சிறுமி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த இடத்திலும் இந்த சிறுமி மஜித் கவுசிஃபரின் மகள் என்று குறிப்பிடப்படவில்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் சமூக ஊடகத்தில் தன்னை விமர்சித்த நபருக்கு தூக்கு தண்டனை அளித்த ஈரான் அதிபர் மரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தூக்கிலிடப்பட்ட சம்பவம் 2007ம் ஆண்டு நடந்தது. அப்போது யார் ஈரான் அதிபராக இருந்தார் என்று பார்த்தபோது, மகுமூத் அகமதிநெச்சாத் (Mahmoud Ahmadinejad) என்பவர் இருந்துள்ளார். இப்ராஹிம் ரெய்சி 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஈரான் அதிபரானார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

நம்முடைய ஆய்வில் ஈரானில் தூக்கிலிடப்பட்ட நபர் நீதிபதி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்த சிறுமி அவரது மகள் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. தூக்கிலிடப்படுவதைக் காண வந்த சிறுமி என்றே 2007ம் ஆண்டு வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது மறைந்த இப்ராஹிம் ரெய்சி 2007ம் ஆண்டு ஈரான் அதிபராக இல்லை. அப்போது சமூக ஊடகமும் பெரிய அளவில் இல்லை. இதனால் சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்தவரை தூக்கிலிட்டு கொலை செய்த இப்ராஹிம் ரெய்சி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஈரானில் 2007ம் ஆண்டு நீதிபதி கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நபரின் புகைப்படத்தை எடுத்து, சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்ததற்காக தூக்கு தண்டனை விதித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரெய்சி சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்தவரை தூக்கிலிட்டாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False