
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களின் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், குளியாப்பிட்டியவில் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து கடைத் தொகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படடு காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த பதிவில் குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டி எனும் இடத்தில் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து கடைத் தொகுதிக்குள் உட்புகுந்த காட்சிகள் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.11.19 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்த காணொளியானது சில நாட்களுக்கு முன்பிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் இந்த காணொளியை நன்கு கவனிக்கும் பொழுது இதில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நீர் கடைகளுக்குள் சென்றுள்ளதனை பார்க்கமுடியவில்லை மாறாக கடல் அலையானது வீதியை தாக்குவதனைப் போன்றே காணப்பட்டது. ஆனால் குருனாகல் மாவட்டத்தில் கடல் இல்லை என்பது இலங்கைவாழ் அனைவரும் அறிந்த விடயமே, அவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த காணொளியில் இருக்கும் காட்சிகள் போலியானவை என்பதற்கான ஆதாரங்கள் அதிகம் என்றே கூறவேண்டும்.
அதே சந்தர்ப்பத்தில் இந்த காணொளி தொடர்பில் கமென்ட் செய்திருந்தவர்களும் இது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதனை குறிப்பிட்டிருந்தனர்.

எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

பிராந்திய செய்தியாளர்கள்
குளியாப்பிட்டியவில் தற்போது நிலவும் காலநிலை தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியபோது, தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக குளியாப்பிட்டிய பிரதேசத்தில் தொடர் மழை பெய்து வருவதாகவும் இதன் காரணமாக சில பகுதிகளில் சாதாரண மட்டத்திற்கு வெள்ள நிலை ஏற்பட்டிருந்தாலும் அந்த பகுதிகளில் இதுவரை எந்த அனர்த்த நிலைகளும் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டனர்.
குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்
மேலும் நாம் குளியாப்பிட்டியவில் நிலவும் காலநிலை நிலைமை தொடர்பில் குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்புகொண்டு வினவியபோது, குளியாப்பிட்டிய பிரதேசத்தில் தொடர் மழை பெய்து வருவதாகவும் அதனால் அந்த பிரதேசங்களின் தாழ்நிலப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு நீர்மட்டம் அதிகரித்திருப்பதாகவும், எனினும் அந்த பகுதிகளில் இதுவரை எந்தவித அனர்த்த நிலைமைகளும் அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தின் வெள்ள நிலைமை
கடந்த நாட்களில் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த உண்மையான காணொளிகைளையும் காணமுடிந்தது.
எனினும் அந்த காணொளிகளில் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் குளியாப்பிட்டியவில் பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் நீரில் மூழ்கியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
அவ்வாறான மேலும் சில காணொளிகளை காண இங்கே க்ளிக் செய்யவும். Link | Link
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை
மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலக பிரிவுகள், கண்டி மாவட்டத்தின் உடுதும்புர பிரதேச செயலக பிரிவிற்கும் மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் குறித்த அறிவித்தலுக்கமைய, அப்பகுதிகளிலிருந்து வௌியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பதுளை, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டை சூழவுள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் மறு அறிவித்தல் வரை கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த அறிவிப்பு வௌியாகும் வரை மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோன்று மழையுடனான வானிலை காரணமாக கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்றும்(27) நாளையும்(28) இடம்பெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திக்கா குமாரி லியனகேவினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் குளியாப்பிட்டியவில் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து கடைத் தொகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:குளியாப்பிட்டியவில் கனமழையால் நீர் பெருக்கெடுத்ததாக பகிரப்படும் காணொளி உண்மையா?
Fact Check By: Suji shabeedharanResult: False


