
மித்தெனியவில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கஜ்ஜா என்ற அருண விதானகமகே, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் இருந்தமையை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் கடந்த 2025.09.30 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷவின் சாரதியாக அவருடன் வாகனத்தில் கஜ்ஜா செல்லும் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படடு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் கஜ்ஜா! என தெரவிக்கப்பட்டு கடந்த 2025.09.30 ஆம் திகதி இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து உண்மை அறியாத பலரும் இந்த புகைப்படத்தினை சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை காணமுடிந்தது.
அதே போன்று கடந்த பெப்ரவரி மாதம் மித்தெனியவில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கஜ்ஜா என்ற அருண விதானகமகே உயிரிழந்த சம்பவத்தின் பின்னரும் மேற்குறிப்பிட்ட புகைப்படமானது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Fact Check (உண்மை அறிவோம்)
கஜ்ஜா என்ற அருண விதானகமகே, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தின் போது அவருடன் பயணித்த அவரது 6 வயது மகளும் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார். அதே நேரத்தில், அவரது 9 வயது மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அருண விதானகமகே இருந்ததாக அவரது மனைவி தெரிவித்தமை குறித்து கஜ்ஜாவின் மூத்த மகன் கடந்த முதலாம் திகதி ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.
அந்தவகையில் உயிரிழந்த அருண விதானகமகே “ராஜபக்ஷ குடும்பத்திற்காக எந்த கொலையையும் செய்யும், ராஜபக்ஷவின் மரணதண்டனையை நிறைவேற்றுபவர்” என தன்னை அடையாளப்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்பு ஊடகவியலாளர் சமுதிதவினால் நடத்தப்பட்ட YouTube நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
எனவே நாமல் ராஜபக்ஷவின் சாரதியாக அருண விதானகமகே செயற்பட்டதாக தெரிவித்து பகிரப்பட்ட மேற்கண்ட புகைப்படம் தொடர்பில் நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம.
இதன்போது கஜ்ஜா என்று அழைக்கப்படும் அருண விதானகமகே என்பவரின் பேஸ்புக் கணக்கில் அவரின் புகைப்படங்கள், பதிவேற்றப்பட்டிருந்தன, மேலும் அந்த புகைப்படங்களை ஆராய்ந்தபோது, அவை மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபரி புகைப்படத்துடன் வேறுப்பட்டே காணப்பட்டன.

எனவே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் கஜ்ஜா இருப்பாதாக பகிரப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் நபர் தொடர்பில் ஆராய்ந்த போது, அது உயிரிழந்த கஜ்ஜா என்பவர் அல்ல எனவும் அது நுவன் லசந்த விஜேநாயக்க என்பவரின் புகைப்படம் என்பதனை அறியமுடிந்தது.
அதே போல் 2022 ஆம் ஆண்டு முதல் நாமல் ராஜபக்ஷவுடன் குறித்த நபர் இருக்கும் புகைப்படங்கள் அந்த பேஸ்புக் கணக்கில் இருப்பதனையும் காணமுடிந்தது. அத்துடன் நாமல் ராஜபக்ஷவின் வாகனத்தின் சாரதி ஆசனத்தில் நுவன் லசந்த என்பவர் இருக்கும் புகைப்படங்களும் அந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் சமூக ஊடகங்களில் கஜ்ஜா என்று பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் கஜ்ஜா அல்ல, வேறு ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தில் உள்ள நுவன் லசந்த விஜேநாயக்க, தனது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக இபலோகம பொலிஸில் முறைப்பாடு செய்த முறைப்பாட்டு பத்திரத்தின் புகைப்படமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமையையும் காணமுடிந்தது.

இருப்பினும், இந்தப் முறைப்பாட்டின் புகைப்படத்தில் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், இபலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதா என, அந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஆராய நாம் முன்வந்தோம்.
இபலோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
இது குறித்து இபலோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாம் தொடர்பு கொண்டு வினவியபோது, தான் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சாரதி எனவும், அவரின் புகைப்படத்தை கஜ்ஜா என குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் என்.எல். விஜேநாயக்க என்ற நபர் முறைப்பாடு செய்துள்ளதைாக தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமும் நாம் வினவினோம், சமூக ஊடகங்களில் ‘கஜ்ஜா’ என்று குறிப்பிட்டு பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள நபர் உண்மையில் தனது சாரதியாக பணிபுரியும் நுவன் லசந்த விஜேநாயக்கவின் புகைப்படம் என்று அவர் கூறினார். இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் சில குழுக்கள் விசாரணைகளை வேறு திசையில் திசை திருப்ப முயற்சிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது சாரதி இபலோகம பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டையும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அவர் அனுப்பிய கடிதத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எங்களுக்கு அனுப்பியிருந்தார்.


இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்த நுவன் லசந்த விஜேநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. எனவே அவரின் கருத்துக்களை அறிந்தவுடன் இந்த கட்டுரையில் அதனை இணைக்க காத்திருக்கின்றோம்.
குறிப்பு: சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மேற்கண்ட புகைப்படம் தொடர்பான உண்மைகளை மாத்திரமே ஆராய்ந்து நாம் இந்த கட்டுரையில் வெளியிட்டுள்ளோம்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் “கஜ்ஜா” இருப்பதாக பகிரப்பட்ட புகைப்படத்தில் உண்மையில் இருப்பது கஜ்ஜா என்ற அருண விதானகமகே அல்ல என்பதுடன் அது நாமல் ராஜபக்ஷவின் சாரதியாக செயற்படும் நுவன் லசந்த விஜேநாயக்கவின் புகைப்படம் என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:நாமல் ராஜபக்ஷ “கஜ்ஜாவுடன்” இருக்கும் புகைப்படமா இது?
Fact Check By: Suji shabeedharanResult: False
