நாட்டின் வெப்பநிலை 55°C வரை அதிகரிக்கும் என கடும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதா?

Missing Context இலங்கை | Sri Lanka

தற்போது நிலவும் வெப்பமான வானிலை என்பது நாட்டின் அநேகமான பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதான ஊடகங்களும், நிலவும் இந்த  கடும் வெப்பம் குறித்து அதிகளவான செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், சமூக ஊடகங்களில் இது தொடர்பான பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் உண்மைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டிருந்தது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று காலநிலைத் துறை அறிவித்துள்ளது. காரணம், வெப்பநிலை 45°C முதல் 55°C வரை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எவருக்காவது மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ அல்லது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

வீட்டில் காற்றோட்டம் இருக்க கதவுகளை திறந்து வைக்கவும்.

மொபைல் போன் பயன்பாட்டை குறைக்கவும்; அதிக வெப்பத்தில் அது வெடிக்கும் அபாயம் உள்ளது.

தயவுசெய்து எச்சரிக்கையாக இருந்து மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும்.

தயிர், மோர், மரச்சீனி (ஆப்பிள்) ஜூஸ் போன்ற குளிர்பானங்களை அதிகமாக உட்கொள்ளவும்.

மிகவும் முக்கிய தகவல்

சிவில் பாதுகாப்புத் துறை பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது:

வரும் நாட்களில் வெப்பநிலை 47°C முதல் 55°C வரை அதிகரிக்கலாம். மேலும் சில இடங்களில் சுவாசிக்க சிரமம் தரக்கூடிய சூழல் உருவாகலாம்.

காரில் வைத்திருக்கக் கூடாத பொருட்கள்:

1. எரிவாயு பொருட்கள்

2. லைட்டர்கள்

3. காபனேற்றப்பட்ட பானங்கள்

4. வாசனை திரவங்கள் மற்றும் பேட்டரிகள்

5. காரின் ஜன்னல்களை சிறிதளவு திறந்து வைக்கவும் (காற்றோட்டம்)

6. எரிபொருள் டேங்க் முழுமையாக நிரப்ப வேண்டாம்

7. மாலை நேரத்தில் எரிபொருள் நிரப்பவும்

8. காலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்கவும்

9. டயர்களை அதிகமாக காற்று நிரப்ப வேண்டாம்

பாம்புகள் மற்றும் பிற உயிரினங்கள் குளிர்ந்த இடங்களைத் தேடி வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு வரக்கூடும், ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். என தெரிவிக்கப்பட்டு 2026.03.30 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலரும் சமூக ஊடகங்களில்  இதனை பகிர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

FB | FB | FB

Fact Check (உண்மை அறிவோம்)

நாட்டின் வானிலை நிலைமை, வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள், தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் உத்தியோகபூர்வ நிறுவனமான வளிமண்டலவியல் திணைக்களத்தை மேற்கோள் காட்டி, தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை மற்றும் வருங்கால வானிலை மாற்றங்கள் குறித்து பிரதான ஊடகங்கள் மக்களைத் தெளிவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Link | Link 

இருப்பினும், சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளைப் போன்ற எந்தவொரு தகவலையும் இதுவரையில் பிரதான ஊடகங்கள் எவையும் அறிக்கையிடவில்லை.

வளிமண்டலவியல் திணைக்களம்  உத்தியோகபூர்வ இணையதளம்

ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதி வரை வெப்பநிலை 45 °C முதல் 55 °C வரை அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்போ அல்லது குறிப்பிடப்பட்ட அந்த காலப்பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளிப்புறங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் ஆலோசனைகளோ அடங்கிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, இன்றைய (01) தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பின்படி, தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு, சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

meteo.gov.lk

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை மையத்தினால் மார்ச் 31 ஆம் தினகிக்காக வெளியிடப்பட்டுள்ள வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

மேல், சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பச் சுட்டெண் (மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம்) ‘கவனம் செலுத்த வேண்டிய’ மட்டமான 39 °C முதல் 45 °C வரை நிலவக்கூடும்.

இதற்கமைய, தொழில் இடங்கள், வீடுகள், வாகனங்களுக்குள் மற்றும் வெளிப்புறங்களில் இருக்கும்போது அவதானமாக இருக்க வேண்டிய விதம் குறித்த அறிவுறுத்தல்கள் சுகாதார மற்றும் உள்நாட்டு மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனைகளுக்கு இணங்க வெளியிடப்பட்டுள்ளன.

இருப்பினும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போன்று வெப்பநிலை 45 °C முதல் 55 °C வரை அதிகரிக்கும் என்றோ அல்லது அங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ஏனைய ஆலோசனைகளோ வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்புகளில் எங்கும் உள்ளடக்கப்படவில்லை.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர்கள்

இதேவேளை, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கடும் வெப்பம் குறித்த செய்தி தொடர்பாக ஆராய்வதற்காக நாம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர்கள் சிலரைத் தொடர்பு கொண்டோம். இதன்போது கடமையிலுள்ள வானிலை ஆய்வாளர் கீர்த்தி பஸ்குவல் கருத்து தெரிவிக்கையில், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தியையோ அல்லது அது போன்ற எச்சரிக்கை செய்தியையோ திணைக்களம் வெளியிடவில்லை என உறுதிப்படுத்தினார். மேலும், 45°C – 55°C வரையிலான வெப்பநிலை உயர்வு குறித்து எந்த முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை ஒரு அசாதாரணமான நிலை அல்ல என்றும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாத இடைப்பருவ காலங்களில் குறிப்பாக இரத்தினபுரி, மத்தள மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பது இயல்பானது என்றும் அவர் கூறினார். இதன்படி, மக்கள் அதிக வெப்பத்தை உணர்ந்தாலும், இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாரிய வெப்பநிலை அதிகரிப்பு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், வெளிப்புறங்களில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழமை போலவே இம்முறையும் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து மேலதிக விளக்கங்களைப் பெற வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை ஆய்வு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கயானா ஹேந்தவிதாரணவை நாம் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டோம். சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று வெப்பநிலை அவ்வளவு உயர் மட்டத்திற்கு அதிகரிப்பதற்கு எவ்வித விஞ்ஞானபூர்வ காரணங்களும் இல்லை என அவர் குறிப்பிட்டார். கணினி மாதிரித் தரவுகள் (Computer Model Data) மற்றும் காலநிலை முன்னறிவிப்புகளின்படி ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இலங்கை இவ்வாறானதொரு கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் தெரிவித்தார். மேலும், மக்கள் 40°C இற்கும் அதிகமான வெப்பத்தை உணரக்கூடும் என்றாலும், அது உண்மையான வெப்பநிலைக்கு சமமானது அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.

எதிர்வரும் ஜூன் மாதமளவில் எல் நினோ (El Niño) நிலை ஏற்படுவதற்கு 70% வாய்ப்பு உள்ளதாகவும், அதன் மூலம் வானிலை கோலங்கள் மாறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்தகைய சூழ்நிலையிலும் கூட, சமூக ஊடகங்கங்களில் பகிரப்பட்ட செய்தியில் கூறப்படும் அளவிலான வெப்பநிலையை அடைய வாய்ப்பில்லை என அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த சமூக ஊடகச் செய்தியில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு மேலதிகமாக “சிவில் பாதுகாப்பு துறை” எனும் மற்றுமொரு நிறுவனம் குறித்தும், அந்நிறுவனம் வழங்கிய அறிவுறுத்தல்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எமது ஆய்வில் இலங்கையில் அத்தகையதொரு நிறுவனம் இயங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி, சமூக ஊடகங்களில் பரவும் இந்தச் செய்தியானது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றாகவோ அல்லது வேறு ஒரு நாட்டின் செய்தியின் மொழிபெயர்ப்பாகவோ இருக்கலாம் என்பதனை அறியமுடிகின்றது.

இலங்கையின் வெப்பநிலை

இலங்கை சமவெளிக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், ஆண்டு முழுவதும் சூடான காலநிலையே காணப்படுகிறது. பெரும்பாலான தாழ்வான நிலப்பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் பகல் நேர வெப்பநிலை பொதுவாக 26°C முதல் 32°C வரை இருக்கும். அதிக ஈரப்பதம் காரணமாக இந்த சூடான நிலை மேலும் அதிகமாக உணரப்படலாம். உலர் வலயத்திற்கு உட்பட்ட வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுவாக அதிக வெப்பநிலை காணப்படும்; குறிப்பாக கடும் வெப்ப காலங்களில் இது 34°C முதல் 35°C வரை உயரக்கூடும்.

மார்ச் முதல் மே மாதங்கள் வரை இலங்கையில் பொதுவாக அதிக வெப்பம் நிலவும் காலமாகும். இந்தக் காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை உச்சத்தை அடையும். குறிப்பாக கடலோரத்திற்கு அப்பாலான உள் நிலப் பகுதிகளில், பருவமழை தொடங்குவதற்கு முன்பு கடும் வெப்பமும் வறட்சியும் நிலவும். இலங்கையின் காலநிலை அமைப்பு முக்கியமாக இரண்டு பருவமழை முறைமைகளால் தீர்மானிக்கப்படுகிறது: மே முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை மற்றும் டிசம்பர் முதல் பெப்ரவரி வரை வடகிழக்கு பருவமழை. இந்த மழைக்காலங்கள் தொடங்கியதும் பகல் வெப்பநிலை குறைந்து, காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்.

ஆனால் நுவரெலியா மற்றும் கண்டி போன்ற மத்திய மலைப்பகுதிகள் உயரமான இடத்தில் அமைந்துள்ளதால், இப்பகுதிகள் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான காலநிலையைக் கொண்டுள்ளன. இப்பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை பொதுவாக 15°C முதல் 25°C வரை இருக்கும்; இரவு நேரங்களில் இது 10°C வரை குறையலாம். மொத்தத்தில் இலங்கை ஒரு சூடான மற்றும் ஈரப்பதமுள்ள நாடாக இருந்தாலும், 40°C போன்ற மிக அதிகமான வெப்பநிலையை அனுபவிப்பது மிகவும் அரிதானது; இது இலங்கையின் சாதாரண காலநிலை முறையில் பொதுவாக காணப்படுவதில்லை. Link | Link | Link

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில், எதிர்காலத்தில் நாட்டின் வெப்பநிலை 45°C முதல் 55°C வரை அதிகரிக்கும் எனவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்கள், வலிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்பது உறுதியானது.

மேலும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள “சிவில் பாதுகாப்பு துறை” என்ற அமைப்பும் இலங்கையில் செயல்பட்டு வரவில்லை. இதற்கிடையில், காலநிலை அதிகாரிகளின் தகவலின்படி, தற்போது நாட்டில் நிலவி வருவது இந்த காலத்தில் சாதாரணமாகக் காணப்படும் வெப்பமான காலநிலையே ஆகும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: நாட்டின் வெப்பநிலை 55°C வரை அதிகரிக்கும் என கடும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதா?

Fact Check By: Suji shabeedharan

Result: Missing context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *