
செவ்வாய் கிரகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
“செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. இந்த சிலை செயற்கைக்கோள் மூலம் காணப்பட்டது. சில படங்கள் உங்களுடன் பகிரப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.08.18 ஆம் திகதி குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
உண்மையில் செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டிருக்குமாயின் அது குறித்து சர்வதேச மற்றும் மற்றும் உள்நாட்டு பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது கண்டறியப்பட்டது.
மேலும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது குறித்து நாசாவின் இணையதளத்தில் வெளியாகியிருக்கும். எனினும் நாம் நாசாவின் இணையதளத்தில் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த காணொளியையோ மற்றும் புகைப்படத்தினையோ காணவில்லை.
எனவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
இதன்போது ‘Tavi Technical Space’ என்ற யூடியூப் பக்கத்தில் இந்த காணொளியை காணமுடிந்தது.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்டுள்ள இந்த காணொளியில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காட்சி இருப்பதனையும் காணமுடிந்தது.
இந்த காணொளியின் தகவல் குறிப்பு தொடர்பில் நாம் ஆராய்ந்த போது இது நாசாவின் ‘Mars Rover Curiosity’ என்ற விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ‘Mars Rover Curiosity’ குறித்து நாம் ஆராய்ந்த போது நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ‘Jet Propulsion Laboratory‘ என்ற தளத்தில் Curiosity Views a Crater at ‘Jau’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், ‘Curiosity Mars rover’ என்ற தானியங்கி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் உள்ள ‘Jau’ என்ற இடத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி படம் பிடித்து பூமிக்கு அனுப்பியிருந்தது. இந்த புகைப்படம் சுமார் 129 புகைப்படங்களின் கூட்டுக் கலவை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தை zoom செய்து ஆய்வு செய்ததில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணாளியில் காணப்பட்ட காட்சி இதில் இருப்பதைக் அவதானித்தோம். ஆனால் அதில் விநாயகர் சிலை குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

ஆகவே ‘Curiosity Mars rover’ என்ற விண்கலம் எடுத்த புகைப்படத்தை காணொளியாக மாற்றி, அதில் இருக்கும் பாறையை விநாயகர் சிலை போன்று எடிட் செய்யப்பட்டுள்ளமை உறுதியாகின்றது.

நாம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை நன்கு அவதானித்த போது அதில் விநாயகர் சிலையின் வடிவம் போன்று தெளிவாக இல்லை அதாவது அவரின் தும்பிக்கை அமைப்பு போன்று காணப்படும் பகுதி வளைவாக காணப்படுகின்றது. அதனை குறித்த காணொளியில் எடிட் செய்து விநாயகர் சிலை போன்று காட்சி படுத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக நாம் மேலதிக தகவல்களை பெற நாசா நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதன் பதில்கள் எமக்கு கிடைத்தவுடன் குறித்த ஆய்வறிக்கையில் அதனை பதிவேற்றம் செய்கின்றோம்.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், 2023 ஆம் ஆண்டு Curiosity Mars rover’ என்ற விண்கலம் எடுத்த புகைப்படத்தில் இருக்கும் சிறிய பகுதியை எடிட் செய்து இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:செவ்வாய் கிரகத்தில் பழமையான விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதா?
Fact Check By: Suji ShabeedharanResult: Misleading
