
இலங்கையில் புதுமையான வழிகளில் கடன் அட்டைகளை (credit card) மக்களிடையே பிரபலப்படுத்தும் வங்கியான HSBC தற்போது இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறியதாகவும், அது தொடர்பான பல்வேறு விளக்கங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் #இலங்கையிலிருந்து_முழுமையாக வெளியேறிய HSBC வங்கி!
200,000 #வாடிக்கையாளர்களை நெஷன் டிரஸ்ட் பாங்கில் ஒப்படைத்து செல்கிறது HSBC to NTB
HSBC கிரெடிட் கார்டு 28% என தெரிவிக்கப்பட்டு கடந்த 25 (2025.09.25) ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையைக் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே நாம் முதலில் இலங்கையின் வணிக வங்கியான நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி மற்றும் இலங்கையில் உள்ள HSBC (ஹாங்காங் மற்றும் ஷங்காய் வங்கி கூட்டுத்தாபனம்) ஆகியவற்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இது தொடர்பான ஏதேனும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளனவா என்பதனை நாம் ஆராய்ந்தோம்.
HSBC வங்கி
இதன்போது, HSBC வங்கி இலங்கையில் தனது முழு சில்லறை வர்த்தக வணிக நடவடிக்கைகளிலிருந்தும் (Retail Banking) வெளியேற முடிவு செய்துள்ளதுடன், அந்த வணிக செயற்பாடுகளை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு விற்க ஒப்புக்கொண்டதாக அறியமுடிந்தது.
அது குறித்து HSBC வங்கி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு

இந்த அறிவிப்பில் சுமார் இரண்டு இலட்சம் HSBC வங்கி வாடிக்கையாளர் கணக்குகள், கடன் அடடைகள் மற்றும் சில்லறை கடன்கள் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு மாற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் வங்கி வணிகத்தின் மூலோபாய மதிப்பாய்வின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும், இந்த முறையில் சில்லறை வர்த்தக வங்கி நடவடிக்கைகளை விற்பனை செய்வதன் மூலம் HSBC குழுமம், அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிறப்பாகப் பயனடைவார்கள் என்ற முடிவிற்கு வந்ததுள்ளதாகவும் மேற்கண்ட அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (NTB), சில்லறை வர்த்தக வணிகத்தை ஆதரிக்கும் அனைத்து HSBC இலங்கை ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த உடன்படிக்கைக்கு அமைய இந்தப் பரிவர்த்தனை, ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சுமூகமான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இரண்டு வங்கிகளும் எதிர்வரும் மாதங்களில் இணைந்து செயற்படவுள்ளது.
மேலும், இந்த தீர்மானம் HSBC இன் இலங்கையில் உள்ள பெருநிறுவன மற்றும் நிறுவன வங்கி வணிகத்தைஎ(Corporate and Institutional Banking) பாதிக்காது என்பதை HSBC வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, HSBC வங்கி இலங்கையில் இருந்து முழுமையாக வெளியேறியாதாக தெரிவிக்கும் விடயம் தவறானதாகும்.
எனவே, HSBC வங்கியின் சர்வதேச நிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் உலகளாவிய வலையமைப்பிற்கான முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், இலங்கையிலும் உலகெங்கிலும் செயல்படும் வாடிக்கையாளர்களிடையே இருவழி வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் HSBC வங்கி இலங்கையில் உள்ள அதன் பெருநிறுவன மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
HSBC வங்கி இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறவில்லை!
இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் உள்ள HSBC வங்கியின் பிரதிநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியிருந்தோம், அதன்போது HSBC வங்கி இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறவில்லை என்றும், HSBC வங்கி இலங்கையை விட்டு வெளியேறுவதாக பகிரப்படும் செய்தி தவறானது என்றும் அவர் கூறினார்.
நேஷன் டிரஸ்ட் வங்கி, HSBC வங்கியின் சில்லறை வர்த்தக வணிகத்தை மாத்திரமே வாங்கியுள்ளதாகவும், இலங்கையில் HSBC வங்கியின் பெருநிறுவன மற்றும் உலகளாவிய வங்கிச் சேவைகள் முன்பு போலவே இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனியார் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பிறகு, ஒழுங்குமுறை உடன்பாட்டிற்கு உட்பட்டு, நேஷன் டிரஸ்ட் வங்கியுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இன்றி வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
HSBC யின் உலகளாவிய மறுசீரமைப்பு மூலோபாயத் திட்டம் மற்றும் இலங்கையில் சில்லறை வர்த்தக வணிகத்திலிருந்து வெளியேறுதல்
2023 ஆம் ஆண்டு மே மாதம் ஆசியாவை மையமாகக் கொண்ட சில்லறை வர்த்தக வணிகத்திலிருந்து (Retail) HSBC முதன்முதலில் வெளியேறுவதற்கான அறிவித்தலை வழங்கியிருந்தது. அப்போது, வங்கி அதன் ஆசிய மைய உத்தியின் ஒரு பகுதியாக 12 நாடுகளை “வெளியேறும் கண்காணிப்புப் பட்டியலில்” வைத்தது.
அதன் பின்னர், ஒரு முறையான மூலோபாய மதிப்பாய்வைத் தொடர்ந்து, சில்லறை வர்த்தக வணிகத்திலிருந்து HSBC வெளியேறுவதற்கான முதற்கட்டமானது தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜஸ் எல்-ஹெடரியின் ” எளிமைப்படுத்தும் உத்தியின்” கீழ் 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் ஆரம்பமானது, இதில் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பரில் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு அதன் இலங்கை நுகர்வோர் வங்கி செயல்பாடுகளை 18 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் சில்லறை வணிக சந்தைகளில் இருந்து வெளியேறும் HSBCயின் உலகளாவிய கொள்கையுடன் உடன்படுகின்றது. HSBC ஏற்கனவே அமெரிக்கா (2021), கனடா (2022), பிரான்ஸ் (2024), அர்ஜன்டீனா (2024) மற்றும் பஹ்ரைன் (2025) ஆகிய நாடுகளில் சில்லறை வங்கி நடவடிக்கைகளில் இருந்து வெளியேறியுள்ளது.
இலங்கையில் சில்லறை வர்த்தக வணிகத்திலிருந்து HSBC வெளியேறுவது, HSBC உலகளாவிய மறுசீரமைப்பின் மூலோபாய முறையை செயல்படுத்துவதை பிரதிபலிக்கிறது.
மேலும், சமூக ஊடகங்களில் பரவும் சில பதிவுகள் பங்கு விற்பனையைக் குறிப்பிடுகின்றன என்றாலும், அவ்வாறான எந்த செய்றபாடுகளும் இடம்பெறவில்லை என்பதுவே உண்மை. ஒரு வணிக அலகு (சில்லறை வர்த்த வணிகம் போன்றவை) இந்த வழியில் விற்கப்படும்போது, தலைமை வங்கியின் பங்குகள் மற்ற வங்கிக்கு மாற்றப்படுவதில்லை, மேலும் பங்குதாரர்கள் உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள், மேலும் தொடர்புடைய வணிகப் பிரிவின் வாடிக்கையாளர்கள், சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே வாங்குபவர் வங்கிக்கு மாற்றப்படுகின்றன. இருப்பினும், இந்த பரிவர்த்தனை மூலம் இந்த இரண்டு வங்கிகளின் பங்குதாரர்களின் பங்குகளின் மதிப்பு மாறும் வாய்ப்பும் உள்ளது.
NTB வங்கி
நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, HSBC இலங்கை வங்கியின் சில்லறை வங்கி வணிகத்தை கையகப்படுத்துவதற்காக இணைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இது நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியில் எங்களுக்கு ஒரு மைல்கல்லாக அமைவதோடு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கி அனுபவத்தை உருவாக்குவதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக NTB வங்கியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதை மேலும் விளக்குவதற்காக வெளியிடப்பட்ட கொழும்பு பங்குச் சந்தைக்கு அனுப்பப்பட்ட பின்வரும் அறிக்கையில், மேலே உள்ள HSBC அறிக்கையைப் போன்ற பல குறிப்புகள் உள்ளன.
மேலும், இலங்கையில் HSBC மூலம் நடத்தப்படும் சில்லறை வர்த்தக வணிகத்தை 18,000,000,000 ரூபாய்க்கு (பதினெட்டு பில்லியன் இலங்கை ரூபாய்) மற்றும் பொருந்தக்கூடிய வரிகளுக்கு கையகப்படுத்த நேஷன்ஸ் டிரஸ்ட் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகவும், இதற்குத் தேவையான நிதி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும், இது NTB பணிப்பாளர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்த முழுமையான அறிக்கை பின்வருமாறு

இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கைகளை பார்வையிடவும். Link | Link | Link
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் HSBC வங்கியின் சில்லறை வர்த்தக வணிகப் பிரிவு மாத்திரமே, நேஷன் டிரஸ்ட் வங்கியால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், HSBC வங்கியின் பெருநிறுவன மற்றும் நிறுவன வங்கிச் சேவைகள் (Corporate and Institutional Banking) இலங்கையில் முன்பு போலவே இயங்கும் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, HSBC வங்கி இலங்கையில் இருந்து முழுமையாக வெளியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தவறானவை என்பது தெளிவாகிறது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:HSBC வங்கி இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


