மன்னாரிலுள்ள எண்ணெய் களங்களிலிருந்து விரைவில் எண்ணெய் கிடைக்கும் என அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தாரா?

Missing Context இலங்கை | Sri Lanka

இலங்கையில் கனிம எண்ணெய் ஆராய்ச்சியானது தற்போது ஆரம்பமான ஒன்றல்ல. 1974ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் மன்னார் தீவில் பேசாலை பகுதியைச் சுற்றிய பகுதிகளில் எண்ணெய் ஆய்வுகளை ஆரம்பித்தது. 2011ஆம் ஆண்டு மன்னார் படுகையில் செயலில் உள்ள கனிம எண்ணெய் அமைப்பு இருப்பது அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தப்பட்டாலும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் எண்ணெய் உற்பத்தி இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது.

எனினும், 2025ஆம் ஆண்டு மன்னார் எண்ணெய் களங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைத்ததுடன், உலகளாவிய அளவில் எண்ணெய் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் நிலவுகின்ற இந்த நேரத்தில் மீண்டும்மன்னார் எண்ணெய் களங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆய்வு ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் ஐந்து எண்ணெய் கிணறுகள் உள்ளன.. விரைவில் அகழ்ந்தெடுக்கப்படும்.. அதன் பின்னர் வெளிநாட்டு எரிபொருட்களிலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம்  இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தாக குறிப்பிடப்பட்டு கடந்த 2026.03.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்திருந்தமையையும் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்நிலையை முன்னிட்டு, உலகளவில் உருவாகியுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க இலங்கை எடுத்துள்ள தீர்வாக, குறுகிய காலத்திற்குள் மன்னார் படுகையில் இருந்து எரிபொருள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தாரா என்பதை நாம் முதலில் ஆய்வு செய்தோம்.

கடந்த மார்ச் 10ஆம் திகதி ITN தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான ‘ON AIR POLITICS’ நிகழ்ச்சியின் போதே அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார் என பகிரப்படுகின்றது. ஆகவே நாம் அந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்த்தபோது,  அதில், உலகளாவிய போர்நிலையை முன்னிட்டு இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து அமைச்சர் விளக்கமளித்திருந்தார்.


மேலும் இந்த உரையாடலின் போது, மன்னார் பகுதியில் உள்ள எண்ணெய் வளங்களை கண்டறிதல் குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் அமைச்சர், மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் இருப்பதை கனிம வள ஆய்வுகளுக்குப் பொறுப்பான அதிகாரசபை தரவுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது எனவும், அவற்றை அகழ்வதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளைப் பெற அமைச்சரவை அனுமதி பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் சுமார் 5 கனிம எண்ணெய் வளங்கள் உள்ளன என்பதையும், அவற்றில் 3 அல்லது 4 வளங்கள் குறித்து இதுவரை முக்கியமான அளவிலான தகவல்கள் ஆய்வுத் தரவுகளின் மூலம் கிடைத்துள்ளன என்பதையும் அமைச்சர் அங்கு சுட்டிக்காட்டினார். அத்தோடு, எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பது தரவுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவற்றை அகழ்வதற்கான செயல்முறையை அமைப்பதற்காகவே அமைச்சரவை அனுமதி முக்கியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த நடவடிக்கைக்கு தேவையான விலைமனு கோரல், அகழ்வுப் பணிகளுக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளைப் பெறுவது, இதற்கான பொருத்தமான ஆலோசகர்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்த செயல்முறைக்குத் தேவையான நிதியும் தற்போது ஒதுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தரவுகள் மூலம் எண்ணெய் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், தற்போது செய்ய வேண்டியது அதை அகழ்ந்து எடுக்கும் செயல்முறையை உருவாக்குவதே என்றும், அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்றும் அமைச்சர் தெரிவிக்கிறார். மேலும், எதிர்காலத்தில் அதன் பலன்கள் கிடைத்தால், எரிபொருள் மற்றும் எரிவாயுவை முழுமையாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தேவையை ஒரு அளவு குறைக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

அதேவேளை, இந்த செயல்முறைக்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்பதை அமைச்சர் தெளிவாக விளக்குறார். ஆனால் விரைவில் எண்ணெய் அல்லது எரிபொருள் விநியோகத்தை தொடங்க முடியும் என்ற கருத்தை அவர் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்பதனையும் அறியமுடிகின்றது.

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை கீழே காணலாம்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் கலாநிதி நெத்திகுமார

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் கலாநிதி  நெத்திக்குமார அவர்களின் கருத்திற்கமைய,  மிகுந்த தொழில்நுட்ப திறனும் முதலீட்டு வசதியும் தேவைப்படும் இந்தத் திட்டத்தை உலகளாவிய தொழில் தரநிலைகளுக்கு ஏற்ப வணிக ரீதியாக ஆரம்பிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் என குறிப்பிட்டார். மேலும், அனைத்து பணிகளும் நிறைவு பெற்று திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வருவதற்கு சுமார் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, மன்னார் படுகையில்  நடைபெறும் இந்த எண்ணெய் அகழ்வுப் பணிகளின் மூலம் எரிபொருள் பெறுவதற்கு ஒரு காலம் எடுக்கும் என்பது தெளிவாகிறது.

அவர் குறிப்பிடுவதாவது, நாட்டின் குறித்த எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தின் மதிப்பு அமெரிக்க டொலர் 267 பில்லியன் ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன். முதலீட்டாளர்களுக்கு 50% கட்டணமாக செலுத்தப்பட்டாலும், நாட்டிற்கு அமெரிக்க டொலர் 133.5 பில்லியன் நிலைத்திருக்கும் சூழல் உருவாகும் நிலையில், இந்த ஆய்வு நாட்டுக்கு மிகவும் முக்கியமானது எனஅவர் கூறுகின்றார்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் தேசிய பலன்கள் இரண்டையும் உறுதிசெய்யும் விதத்தில் ஒரு ஒப்பந்தத்தை தயார் செய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன். மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட தொழில்துறை நிபுணர்களுடன் கலந்தாலோசனை நடத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நெத்திக்குமார தெரிவித்தார்.

இந்த ஆய்வு நடைபெறும் நிலப்பரப்புகளின் சட்டப்பூர்வ அதிகாரம் அரசிடம் உள்ளது என்பதை நெத்திக்குமார சுட்டிக்காட்டினார். பெற்றோலிய  வளங்கள் சட்டத்தின் கீழ், இலங்கையில் மேற்கொள்ளப்படும் எந்த எண்ணெய் நடவடிக்கையிலும் பெறப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட அனைத்து எண்ணெய் தரவுகளின் உரிமை அரசுக்கு சொந்தமானதாகும். மேலும், அந்த எண்ணெய் தரவுகளின் முகாமைத்துவ மற்றும் கட்டுப்பாடு அதிகார நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படும். முன்னதாக அமைக்கப்பட்ட செயல்முறைகள் மற்றும் கட்டண விதிகளுக்குட்பட்ட வணிக, கல்வி அல்லது அறிவியல் பயன்பாடுகளுக்காக எண்ணெய் தரவுகளுக்கான அணுகலை வழங்கும் உரிமையும் அதிகார நிறுவனத்திற்கே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது வெளியான செய்தி அறிக்கையிடல் இங்கே


மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு

எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் அவர்களின் ஊடக செயலாளர் தெரிவித்ததாவது, மன்னார் படுகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பகுதியின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைக்கு சுமார் 3 ஆண்டுகள் காலம் எடுத்துக்கொள்ளப்படும் என்பதாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்களுடன் பெற்றோலிய  வள ஒப்பந்த விதிமுறைகளை 2026 ஆகஸ்ட் மாதமளவில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2026 நவம்பர் மாதம் நிலப்பகுதிகள் ஒப்படைக்கப்படுவதோடு, எண்ணெய் நடவடிக்கைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2026 டிசம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்ட நிலப்பகுதிகளில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்க முதன்மை கட்டத்திலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சி

இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுப் பணிகள், எரிசக்தி அமைச்சின் கீழ் உள்ள பெற்றோலிய வள மேம்பாட்டுச் செயலகத்தால் (PRDS) நிர்வகிக்கப்படுகின்றன. இலங்கையில் பெற்றோலிய ஆய்வுப் பணிகள் 1950-களில் இருந்தே நடைபெற்று வருகின்றன. 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட தரவுகள் “பழைய தரவுகள்” என்றும், 2001 ஆம் ஆண்டுக்குப்  பின்னர் பெறப்பட்ட தரவுகள் “புதிய தரவுகள்” என்றும் கருதப்படுகின்றன.

வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் ஆப்பிரிக்கப் பிளவு மண்டலத்தின் மையப்பகுதியில் இலங்கை அமைந்திருந்ததால், அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயுப் படிவுகள் இருக்கலாம் என நீண்ட காலமாகச் சந்தேகிக்கப்பட்டு வருகிறது. புவியியல் ரீதியாக, மன்னார் படுகையின் படிவுகள் ஜுராசிக் காலத்தின் மொசாம்பிக் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகத் தோன்றுகின்றன, இது எண்ணெய் மற்றும் எரிவாயுப் படிவுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறைக் குறிக்கிறது. எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறையில் சிறப்பான சேவையாற்றிய அனுபவமிக்க மின் பொறியியலாளரான தனுஷ்க நுவன் பண்டார, இலங்கையின் எண்ணெய் ஆய்வு வரலாற்றின் காலவரிசை நிகழ்வுகளைப் பின்வருமாறு கோடிட்டுக் காட்டியுள்ளார் Link | Archived Link

2011 ஆம் ஆண்டில் மன்னார் படுகையின் M2 ஆய்வுப் பகுதியில், Dorado மற்றும் Barracuda என்ற இரண்டு இயற்கை எரிவாயுப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும், மன்னார் படுகையில் ஒரு செயல்படும் பெற்றோலிய அமைப்பு உள்ளது என்பதை அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்தின.

இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம், பிராந்திய நிபுணர்களின் உதவியுடன், மன்னார் படுகையில் மாத்திரம் 2 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெயையும், 9 டிரில்லியன் கன அடிக்கும் அதிகமான இயற்கை எரிவாயுவையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. 2011 அக்டோபர் 2 ஆம் திகதியன்று, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தலதா மாளிகையில் நடைபெற்ற ஒரு விழாவில், மன்னார் படுகையில் ஒரு மாபெரும் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுப் படிவம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். Link

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மன்னார் படுகையிலிருந்து விரைவில் எரிபொருளை அகழ்ந்தெடுக்கப்படும்  என தெரிவித்ததாக  சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறானவை என்பதுடன்,  மன்னார் படுகையில் எண்ணெய் இருப்பது தரவுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், தற்போது செய்ய வேண்டியதெல்லாம், எண்ணெயை அகழ்வதற்கான வழிமுறையை உருவாக்குவதுதான் என்றும், இதற்குச் சிறிது காலம் ஆகும் என்றும், எதிர்காலத்தில் கிடைக்கும் முடிவுகளின் மூலம், வெளிநாடுகளிலிருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதைச் சார்ந்திருப்பதை ஓரளவிற்குக் குறைக்க முடியும் என்றே  அமைச்சர் உண்மையில் தெரிவித்தார் என்பதுவும் கண்டறியப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: மன்னாரிலுள்ள எண்ணெய் களங்களிலிருந்து விரைவில் எண்ணெய் கிடைக்கும் என அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தாரா?

Fact Check By: Suji Shabeedhran

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *