
நாளைய தினம் (2025.05.06) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன. எனவே குறித்த தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களினால் குடும்ப விபரங்களை கோரும் விண்ணப்பப் படிவம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களினால் வீடுகளுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்படிவம் விநியோகம் செய்கின்ற செயற்பாடுகள் நடைபெறுவதாக அறிகிறோம்.
தேர்தல் காலங்களில் இப்படியான விண்ணப்பங்களினை விநியோகிப்பது தேர்தல் சட்டத்திற்கு முரணானது.
நமது கொள்கையிலேயே நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் ஆண்டவன் தான் பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு ஒரு விண்ணப்ப படிவத்தின் புகைப்படம் கடந்த 2025.04.17 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.
மேலும் இதனைபலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஏதேனும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் காணக்கிடைக்கவில்லை.
மேலும் குறித்த விண்ணப்ப படிவத்தினை நாம் கவனித்த போது அதில் எழுத்துப்பிழைகள் இருப்பதனையும் அதில் சில தெளிவின்மையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் இந்த பதிவில் குறித்த விண்ணப்பப் படிவம் விநியோகிக்கும் நடவடிக்கை எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பில் எந்த தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
எனவே இந்த தகவல் பதிவிடப்பட்டிருந்த பேஸ்புக் பக்கத்தினை நாம் ஆராய்ந்த போது குறித்த நபர் காதான்குடியை சேர்ந்தவர் என்பதுவும் அவர் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் என்பதனையும் அறியக்கிடைத்தது.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
இது குறித்து நாம் காத்தான்குடி பிராந்திய ஊடகவியலாளர்களிடம் வினவியபோது, காத்தான்குடி முதலாம் வட்டாரம், பதுரிஹா வட்டாரத்தின் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும், அந்த வட்டாரத்தின் வேட்பாளருமான அஹ்சன் என்பவரினால் பதுரிஹா வட்டாரத்தில் மாத்திரம் இந்த விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பட்டனர்.
அத்துடன் குறித்த விண்ணப்பப் படிவங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே விநியோகிக்கப்பட்டதாக பதுரிஹா வட்டாரத்தின் வேட்பாளர் தங்களிடம் தெரிவித்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.
எனினும் தேசிய மக்கள் சக்தியின் கத்தான்குடி அமைப்பாளருக்கோ அல்லது கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கோ இது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும் காத்தான்குடியின் வேறு எந்த பகுதிகளிலும் இவ்வாறான விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப் படவில்லை என்பதனையும் அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
மேலும் நாம் நாட்டின் ஏனைய சில பிரதேசங்களின் பிராந்திய ஊடகவியலாளர்களிடமும் இது குறித்து வினவினோம் எனினும் அவர்களும் இவ்வாறான விண்ணப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டனர்.
தேசிய மக்கள் சக்தி
மேற்குறிப்பிட்ட பதிவில் பகிரப்பட்ட விண்ணப்பப் படிவம் தொடர்பில் நாம் தேசிய மக்கள் சக்தி கட்சியை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு செல்லும் போது அவர்களின் கட்சியினால் அச்சிடப்படும் பத்திரிகை மற்றும் தங்கள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் என்பவற்றை மாத்திரமே விநியோகித்ததாகவும், வேறு எந்த விண்ணப்பப் படிவங்களையும் நாட்டின் எந்த பகுதிகளிலும் விநியோகிக்கவில்லை என்பதனையும் தெரிவித்தனர்.
அத்துடன் காத்தான்குடி பதுரிஹா வட்டாரத்தில் இவ்வாறான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்திற்கு எந்த அறிவிப்புகளும் வழங்கப்படவில்லை எனவும் அது குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவம் அவர்கள் குறிப்பிட்டனர்.
பஃவ்ரல் அமைப்பு
மேலும் மேற்குறிப்பிடப்பட்டவாறு குடும்ப விபரங்களைக் கோரி விண்ப்பப் படிவங்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என நாம் பஃவ்ரல் அமைப்பிடம் வினவியபோது, அவ்வாறான எந்தவொரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்பதனை அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
அத்துடன் குறித்த பதிவில் இவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அது குறித்தும் நாம் பஃவ்ரல் அமைப்பிடம் வினவியிருந்தோம.
இதன்போது உண்மையில் தேர்தல் காலங்களில் மக்களின் குடும்ப விபரங்களை சேகரிப்பதற்கு இவ்வாறான விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தால் அவை தேர்தல சட்ட மீறல் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும் தற்போது இது தொடர்பான எந்த முறைப்பாடுகளும் தங்களுக்கு கிடைவிலலை எனவும் இவ்வாறான பல ஆதாரமற்ற தகவல்கள் தங்களுக்கும் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனைப் போன்று தேசிய மக்கள் சக்தியினரால் குடும்ப விபரங்களை கோரிய விண்ணப்பப் படிவமானது, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரினால் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட காலத்தில் காத்தான்குடி பதுரிஹா வட்டாரத்தில் மாத்திரம் விநியோக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
எனினும் இது குறித்து கட்சியின் தலைமையகத்திற்கோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு எந்த அறிவிப்புகளும் வழங்கப்படவில்லை என்பதுடன் அவர்களுக்கு இது குறித்த விபரங்கள் எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தேர்தல் பிரச்சார காலக்கட்டத்தில் இவ்வாறான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தால் அது தேர்தல் சட்டமீறலாகவே பார்க்கப்படும், எனினும் இது குறித்து தமக்கு எந்த முறைப்பாடுகளும் தேர்தல் காலத்தில் கிடைக்கவில்லை என ப்ஃவ்ரல் அமைப்பு சுட்டக்காட்டியது.
அத்துடன் இவ்வாறான விண்ணப்பப் படிவங்கள் நாட்டின் வேறு எந்த பகுதிகளிளும் விநியோகிக்கப்பட்டமைக்கான ஆதாராங்கள் எதுவும் இதுவரை இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:NPP வேட்பாளர்களினால் குடும்ப விபரங்களை கோரும் விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்பட்டதா?
Written By: Suji ShabeedhranResult: Missing Context
