
எலன் மஸ்க்கின் Starlink சேவை இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே குறித்த தகவல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் சேவை..!!
அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் (Starlink) எனப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் சேவை வேலைத்திட்டம் இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தரவுகள் மற்றும் தகவல் தொடர்பைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை இந்த சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஸ்டார்லிங்குடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் எனப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் சேவையை இலங்கைக்கு வழங்குவதற்கான உரிமத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.03.25) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்த உண்மை அறியாது பலரும் சமூக ஊடகங்களில் அதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காண முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாட்டில் Starlink சேவையின் நிறுவல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சில இணையதள செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.Link | Link
மேலும் இந்தச் செய்தியை முதலில் டெய்லி மிரர் இணையதளமே வெளியிட்டிருந்தது. டிஜிட்டல் பொருளாதாரத் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவின் கருத்துக்களுடன் குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை Starlink சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக (“Starlink on hold until national security concerns are addressed”) குறித்த செய்தியில் தலைப்பிடப்பட்டிருந்தது.
தரவு மற்றும் தொடர்பாடல் தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை இந்த செயல்முறையை அரசாங்கம் அனுமதிக்காது என்றும், சில தனிநபர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு Starlink செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளைப் பயன்படுத்தும் வழக்குகள் இருக்கலாம் என்றும், எனவே இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) இது தொடர்பாக ஸ்டார்லிங்குடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்டப்பூர்வ தேவை ஏற்பட்டால், ஸ்டார்லிங்கின் தரவுகளை சட்டப்பூர்வமாகக் கைப்பற்றுவதற்கான அல்லது தொடர்பாடல் தகவலை அணுகுவதற்கான உரிமையை உறுதி செய்த பின்னரே சேவைகளை செயல்படுத்த முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன டெய்லி மிரரிடம் தெரிவித்துள்ளார்.
சிலர் Starlink இணைய தொடர்பு சேவைகளை சட்டவிரோத நடவடிக்கைக்கும் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம் என்றும், அப்படியான சந்தர்ப்பங்களில், சட்ட நடவடிக்கைக்காக அத்தகைய தொடர்புகள் குறித்த தரவுகளைப் பெற இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும் அவர் தெரவித்துள்ளார்.
எனினும் இந்தச் செய்தியில் நாட்டில் ஸ்டார்லிங்க் சேவை இடைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை, மேலும் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கூறியது போல், தொடர்பாடல் தகவல்களை அணுகும் உரிமை உறுதிசெய்யப்பட்ட பின்னரே ஸ்டார்லிங்க் சேவையை செயல்படுத்த முடியும் என்றே அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன
இதேவேளை நாட்டில் Starlink சேவையை இடைநிறுத்துவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். Link
தரவு மற்றும் தொடர்பாடல் தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமையை உறுதி செய்வதில் குறித்த நிறுவனத்தினால் ஏற்பட்ட தாமதம் காரணமாக அதன் செயல்பாடுகளைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் Starlink சேவையை ஆரம்ப்பிப்பதற்கான தாமதம் தொடர்பில் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்த கருத்து பின்வருமாறு
அதற்கமைய நாட்டில் Starlink சேவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறவில்லை, மாறாக Starlink சேவை தரவு மற்றும் தொடர்பாடல் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஒரு Dashboard ஐ வழங்க வேண்டும் என்றும், அந்த வசதி வழங்கப்பட்ட பிறகு சேவையைத் தொடங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Starlink என்றால் என்ன?
ஸ்டார்லிங்க் இணைய சேவை என்பது பூமியின் மேற்பரப்புக்கு ஒப்பீட்டளவில் நெருக்கமாக, குறைந்த-புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இணைய அமைப்பாகும்.
Fibre-optic Cableகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஸ்டார்லிங்க் ஆயிரக்கணக்கான சிறிய, கீழ் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களின் அமைப்பைப் பயன்படுத்தி அதிக வேகத்தில் தரவை மாற்றுகிறது. எளிமையாகச் சொன்னால், ஸ்டார்லிங்க் இணையத் தரவை ரேடியோ அலைகள் வழியாக சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு அனுப்புகிறது, பின்னர் அது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு அனுப்பப்படுகிறது.
Fibre-optic Cable சென்றடைய முடியாத தொலைதூரப் பகுதிகளைக் கூட இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை சென்றடைகின்றது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட எலன் மஸ்க்கின் விண்வெளி போக்குவரத்து நிறுவனமான SpaceX, முதலில் 60 செயற்கைக்கோள்களை 2019 ஆம் ஆண்டு மே மாதம் பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செலுத்தியது, பின்னர் ஸ்டார்லிங் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்தியது.
இலங்கையில் Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம்
2024 ஆம் ஆண்டில், Starlink சேவையை இந்நாட்டில் ஆரம்பிப்பதற்கானஅனுமதியை முந்தைய அரசாங்கம் வழங்கியது. இருப்பினும், தற்போதைய அரசாங்கம் அந்த முடிவை மறுபரிசீலனை செய்து வருகிறது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) இதற்கு முன்பு ஸ்டார்லிங்க் சேவைக்காக ஐந்து பேக்கெஜ்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது. இந்த பேக்கெஜ்களின் விலைகள் 9,200 ரூபா முதல் 1.8 மில்லியன் ரூபா வரை செல்லும். இருப்பினும், மேற்குறிப்பிட்ட உண்மை கண்டறியும் ஆய்வில் அடிப்படையில், தரவுகளை ஆய்வு செய்ய இந்நாட்டிற்கு குறித்த நிறுவனம் அனுமதி வழங்காததால், இந்த சேவையை செயல்படுத்துவது மேலும் தாமதமாகியுள்ளது என்பது பலனாகின்றது.
இலங்கைக்கு ஸ்டார்லிங்க் சேவையை பெற்றுக்கொள்வது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
இதனடிப்படையில் இலங்கையில் Starlink செயற்கைக்கோள் இணைய சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானவை என்பது எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சட்டரீதியாக தரவுகளை கைப்பற்றுவதற்கான உரிமையை வழங்குவதற்கு அல்லது தொடர்பாடல் தகவல்களை பதிவு செய்வதற்கு குறித்த நிறுவனம் சான்றளித்த பிறகு, அதாவது, அந்தச் சேவையை வழங்கும்போது வழங்க வேண்டிய Dashboard ஐ வழங்கிய பின்னரே, நாட்டில் இந்தச் சேவையை செயல்படுத்த முடியும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:Starlink சேவையை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா?
Fact Check By: suji shabeedharanResult: Misleading
