
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைளின் படி, புற்றுநோய் உலகளவில் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாக காணப்படுவதுடன், இந்த நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூழலில், புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் மருந்து கண்டுபிடிப்புகள் குறித்துஅறிவிக்கப்படும் போது அவை, மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன.
அந்தவகையில் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் , மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ( IBMBB) உருவாக்கிய “ஊட்டச்சத்து மருந்து” குறித்து இலங்கையின் பல ஊடக நிறுவனங்களும், சமூக ஊடக பயனர்களும் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
அதில் இது புற்றுநோய் செல்களைக் கொல்லும் என்றும் , புற்றுநோய்க்கான சாத்தியமான சிகிச்சை அல்லது தடுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டே பகிரப்படுகின்றன.
எனவே உண்மையில் புற்றுநோய்க்கான மருந்து இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டதா என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

இலங்கையில் புற்றுநோய் செல்களைக் கொல்லும் மருந்து கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவு 2025.10.03 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன் உண்மையான விபரம் அறியாத பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
அதேபோன்று இது புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் புற்றுநோய் செல்களை கொல்லும் மருந்து எனவும் தெரிவித்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையையும் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் , மூலக்கூறு வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சமீர ஆர். சமரக்கோன் தலைமையிலான ஒரு ஆராய்ச்சிக் குழு, 17 ஆண்டுகள் ஆராய்ச்சியின் பின்னர் இந்த ஊட்டச்சத்து மருந்தை கண்டுபிடித்துள்ளதாக முக்கிய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன .
மேலும்,சில சிங்களமொழி ஊடகங்களில், இந்த மருந்தானது, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்பதை சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது என்றும், ‘ Vernolac’ என்று அழைக்கப்படும் இந்த மருந்து இப்போது சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், தேவைப்படும் நோயாளிகளுக்கு மானிய விலையில் கிடைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில ஊடகங்களால் புற்றுநோய் சிகிச்சையாக அறிமுகப்படுத்தப்பட்ட FADNA (Food & Nature Pvt. Ltd) ஆல் விற்கப்படும் வெர்னோலக், தொடர்பில் ஒன்லைன் சந்தையில் பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

வெர்னோலக் என்பது புற்றுநோய் சிகிச்சையை ஆதரிப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தால் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்ட மூலிகை மருந்து ஆகும். Vernonia zeylanica மற்றும் மேம்பட்ட குணப்படுத்தும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இது, புற்றுநோய் செல்களை இலக்காகக் கொண்டு இயற்கையாக புற்றுநோய்க்கு எதிராக செயற்படுகின்றது மற்றும் கீமோதெரபியினால் ஏற்படும் அசௌகரியத்தையும் நீக்குகிறது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு ஆயுர்வேதத்தில் பதிவுசெய்யப்பட்ட வெர்னோலக், பாரம்பரிய சிகிச்சைகளுடன் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தும் நம்பகமான மூலிகைப் புற்றுநோய் சிகிச்சை துணைப் பொருளாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, இந்த மருந்து புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்துவதாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் இந்த மருத்துவ துணைப் பொருளானது புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோய் மருந்து, புற்றுநோயைக் கொல்லும் மருந்து என்று தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த மருத்துவ துணை மருந்து உண்மையிலேயே இவ்வளவு வெற்றிகரமான செயற்பாட்டை வழங்குவதானால், சுகாதார அமைச்சு அதில் தலையிட்டிருக்க வேண்டும் அல்லது அதை விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் சுகாதார அமைச்சினால் அத்தகைய விளம்பரம் அல்லது அறிக்கை எதுவும் செய்யப்படவில்லை என்பது இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும்.
மேலும் கொழும்பு பல்கலைகழகத்தினால் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராயச்சியின் வெற்றியாகவே, இந்த புற்றுநோய்க்கான துணை மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பினும், உண்மையில் அந்தகைய மருந்து கொழும்பு பல்கலைகழகத்தினால் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்குமாயின் அதனை அரச அனுசரணை மூலம் விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும் எனினும் பல்கலைக்கழத்தின் இணையதளத்திலோ அல்லது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்த்திலோ அவ்வாறான எந்த விளம்பரப்படுத்தல்களையும் காணமுடியவில்லை.
இது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகம் பின்வருமாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதேபோல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கடந்த 2025.10.09 ஆம் திகதி ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில் பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பல தவறான பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இவ்வாறான பதிவுகள் மூலம் பல்கலைக்கழகத்தின் நற்பெயர் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பில் ஏற்படும் கடுமையான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு , தவறான தகவல்களைப் பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் அல்லது சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மாத்திரமே பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவ தயாரிப்புகளின் மருத்துவ குணங்களை ஆராய பல்கலைக்கழகத்தால் பல ஆராய்ச்சி ஆய்வுகள் நடத்தப்பட்டாலும் , அவை இன்னும் மருத்துவ பரிசோதனை நிலை அல்லது மருந்து பதிவு நிலையை எட்டவில்லை என்றும், அவற்றை மருந்துகளாகக் கருத முடியாது என்றும் , தகுதிவாய்ந்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பதிவுசெய்யப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமே நோயாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்தின் செய்தி என தெரவித்து, இலங்கை புற்றுநோயியல் கல்லூரியும் இது தொடர்பான பதிவொன்றை தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அதில் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி உலகளவில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள் மூலம் மாத்திரமே புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத சிகிச்சைகளைப் பயன்படுத்தி உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் தவறான சிகிச்சையை நாடினால், உங்கள் உயிரைக் காப்பாற்ற மற்றொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தைப் நாடி, சரியான ஆலோசனை மற்றும் பராமரிப்புகளை பெறுங்கள்.
மேற்கண்ட மூலிகைகளினால் உருவாக்கப்பட்ட மருந்துகளை புற்றுநோய் சிகிச்சையாகவோ, புற்றுநோய் மருந்தாகவோ அல்லது புற்றுநோயைக் கொல்லும் மருந்தாகவோ கருத முடியாது என்பதையும், இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் உயிருடன் விளையாடக் கூடாது என்பதையும் இந்தக் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Facebook
இந்த மருந்தை உட்கொண்ட பிறகு ஏற்படும் பக்க விளைவுகளுக்கு எந்த நிறுவனமோ அல்லது தனிநபரோ பொறுப்பல்ல, ஏனெனில் இது புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று நினைத்து, எந்த மருத்துவ பரிந்துரையும் இல்லாமல், அதனை உட்கொள்வதனை தவிர்க்கவும், இந்த மருந்தை உற்பத்தி செய்த பேராசிரியர் சமீர ஆர். சமரக்கோனின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவிலிருந்தும் அதனை தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஒரு முன் மருத்துவ ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் , அறிவியல் மேற்பார்வையின் கீழ் தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும், தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை மாத்திரமே நோயாளர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று “முறையான மருத்துவ சிகிச்சையைப் பின்பற்றத் தவறினால் ஏற்படும் எந்தவொரு பாதகமான விளைவுகளுக்கும் நானும், எங்கள் நிறுவனமும், கொழும்பு பல்கலைக்கழகமும் பொறுப்பேற்க மாட்டோம்.” எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு சிகிச்சையை “நிரூபிக்க” நம்பகமான சர்வதேச நிறுவனங்களுக்கு என்ன தேவை
உலக சுகாதார அமைப்பு (WHO), FDA மற்றும் பிற சர்வதேச ஒழுங்குமுறை அமைப்புகளின்படி, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதாக , குணப்படுத்துவதாக அல்லது தடுப்பதாகக் கூறும் எந்தவொரு தயாரிப்பும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அத்தகைய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கு முன் முறையான அனுமதியை பெற வேண்டும்.
WHO மற்றும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) நிரூபிக்கப்படாத கூடுதல் மூலங்களை ஏற்றுக்கொளவதில்லை, ஆதாரம் அடிப்படையிலான முறைகள் மூலம் தடுப்பதையே வலியுறுத்துகின்றன,.
சர்வதேச ஒழுங்குமுறை மற்றும் அறிவியல் தரநிலைகள் ( FDA, EMA, WHO, IARC) ஒரு தயாரிப்பு ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்க , தடுக்க அல்லது குணப்படுத்துவதாகக் கூறப்படுவதற்கு முன், முதலாம் கட்டம் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட சான்றுகள் தேவை.
பல அதிகார வரம்புகளில் உள்ள மருந்துகளிலிருந்து உணவு சப்ளிமெண்ட்ஸ் வித்தியாசமாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன. ஒரு கட்டமைப்பு/செயல்பாடு அல்லது சுகாதார நன்மை கொண்ட சப்ளிமெண்ட்ஸ் சந்தைப்படுத்தப்படலாம், ஆனால் மருந்து அனுமதி இல்லாமல் ஒரு நோயைக் குணப்படுத்துவதாக சட்டப்பூர்வமாகக் கூற முடியாது. சந்தைப்படுத்தப்படும் மூலிகை/சப்ளிமெண்ட் ஒழுங்குமுறை மற்றும் மருத்துவ வரம்புகளைக் கடந்தாலன்றி, அதை நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் மருந்து என்று அழைக்க முடியாது. இதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இங்கே
நோயாளர்களுக்குள்ள உண்மையான ஆபத்து
புற்றுநோயளர்கள் ஆபத்திற்கு முகங்கொடுக்கலாம் மற்றும் பாரம்பரிய , சான்றுகள் சார்ந்த சிகிச்சைகள் (அறுவை சிகிச்சை , கீமோதெரபி , கதிர்வீச்சு , அங்கீகரிக்கப்பட்ட நோயெதிர்ப்பு சிகிச்சை) என்பன பெரும்பாலும் நிரூபிக்கப்படாத துணை மருந்துகளால் தாமதப்படுத்தப்படுகின்றன. இவை ஆய்வக முடிவுகளை மிகைப்படுத்தி விளம்பரப்படுத்தப்படும் போது, அது தவறான நம்பிக்கையை மக்களுக்கு வழங்குகிறது மற்றும் நோயாளியின் பாதுகாப்பை ஆபத்தில் வைக்கிறது. அதனால்தான் புற்றுநோயியல் நிபுணர்கள் அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்புக்கு மாற்றாக இதுபோன்ற தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பகிரங்க எச்சரிக்கையை முன்னெடுக்கின்றனர்.
ஆதாரங்களால் நிரூபிக்கப்படுகின்றவை
‘வெர்னோலக்’ ஆய்வக சோதனைகளில் புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டைக் காட்டியுள்ளது மற்றும் விலங்கு ஆய்வுகள் , நச்சுயியல் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம் மனிதர்களில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தாலும், இது குறித்து பொதுமக்களுக்கு சரியான செய்தியை தெரிவிப்பதாயின், இது நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை அல்ல, மாறாக உட் பிரிபலன்களை கொண்ட ஒரு பரிசோதனை மட்டத்திலுள்ள ஊட்டச்சத்து மருந்தாகும். இதை எடுத்துக்கொள்வதன் மூலம் “இது மனிதர்களில் புற்றுநோயைக் அழிக்கும்” என்ற கருத்தை வழங்கி விளம்பரப்படுத்துவது தவறான செயலாகும்.“ வெர்னோலக் ” பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை இங்கே காணலாம் .
ஆயுர்வேத மருத்துவர்கள்
இயற்கை அல்லது மூலிகை என்பது தானாகவே பாதுகாப்பானது அல்லது பயனுள்ளது என்ற அர்த்தத்திற்கு வர இயலாது என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சில மூலிகைகள் புற்றுநோய் சிகிச்சைகள் அல்லது கல்லீரல் செயல்பாட்டில் உதவக்கூடும். எனவே , நோயாளிகள் எந்தவொரு மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு புற்றுநோயியல் நிபுணரை அணுகி அவர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்னரே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்களிடம் நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம், மேலும் அவர்களின் பதில்களுடன் இந்தக் கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:கொழும்பு பல்கலைக்கழகம் புற்றுநோய்க்கு எதிரான மருந்தை கண்டுபிடித்துள்ளதா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


