அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா சமயத்தில் மசூதியில் காவிக் கொடி கட்டி வலதுசாரி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மசூதி ஒன்றின் மீது காவிக் கொடியை ஒருவர் கட்டுவதைக் கீழே நின்று ஏராளமானவர்கள் கொண்டாடும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23 அன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "எத்தனை கோடியில் கோயில் கட்டி கொடுத்தாலும் 2024 இவனுங்க மசூதியில் தான் வழிபாடு செய்வானுங்க" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று மசூதியின் முன்பாக ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் செல்லும் வீடியோவை பகிர்ந்து, "எத்தனை கோடியில் கோயில் கட்டி கொடுத்தாலும் இவனுங்க மசூதியில் தான் வழிபாடு செய்வானுங்க" என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்து முடிந்துள்ள சூழலில் பல கோடிகள் செலவு செய்து கோவில் கட்டினாலும் மசூதியில்தான் வலதுசாரி இந்துத்துவா ஆதரவாளர்கள் வழிபாடு நடத்துவார்கள் என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் உண்மைதான். ஆனால், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்த போது இந்த புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை இந்த பதிவுகள் ஏற்படுத்துகின்றன.

மசூதி முன்பு ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்ற வீடியோ தொடர்பாக நாம் ஏற்கனவே ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் முகரம் ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதாகவும் பதிலுக்கு அடுத்த நாளே இந்துக்கள் ஒன்று கூடி மசூதிக்கு முன்பாக போராட்டம் நடத்தியதாகவும் முன்பு வதந்தி பரவியது.

இது உஜ்ஜயினியில் நடந்த போராட்டத்தின் வீடியோ அல்ல, கர்நாடக மாநிலம் குல்பர்காவில் 2018ம் ஆண்டு நடந்த ராமநவமி ஊர்வலத்தின் வீடியோ என்று ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்திருந்தோம். அந்த விடியோவை இப்போது பகிர்ந்த வருகின்றனர். இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோவில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive 1 I thewire.in I Archive 2

அடுத்ததாக மசூதியின் மீது காவி கொடியைக் கட்டும் புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். அந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பீகாரில் உள்ள முசாஃபர்பூரில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. 2022ம் ஆண்டு ராம நவமி கொண்டாட்டத்தின் போது மசூதியின் மீது காவி கொடியை ஏற்றி சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக செய்திகள், வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன.

இதன் மூலம் இந்த இரண்டு பதிவுகளில் இடம் பெற்றுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்த 2023 ஜனவரி 22 அன்று எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. 2018ல் எடுக்கப்பட்ட வீடியோ, 2022ல் நடந்த நிகழ்வின் புகைப்படத்தை இப்போது பகிர்ந்து, "பல கோடி செலவு செய்து கோவில் கட்டிக் கொடுத்தாலும் வலதுசாரி ஆதரவாளர்கள் மசூதியில் தான் வழிபாடு நடத்துவார்கள்" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இப்போது நடந்த நிகழ்வு போன்ற தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த சம்பவம் நடந்த வருடத்தைக் குறிப்பிட்டிருந்தால் தவறான புரிதலை ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்!

முடிவு:

"எத்தனை கோடியில் ராமர் கோயில் கட்டி கொடுத்தாலும் தீவிர இந்துத்துவா ஆதரவாளர்கள் மசூதியில் தான் வழிபாடு செய்வார்கள்" என்று பரவும் வீடியோ, புகைப்படம் ஆகியவை அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா சமயத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமர் கோவில் திறப்பின் போது மசூதியில் காவிக் கொடியேற்றி ரகளையில் ஈடுபட்டதாக பரவும் படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Missing Context