அயோத்தி ராமர் கோவிலின் முதல் நாள் வசூல் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா சமூக ஊடகம் சமூகம் | Society

அயோத்தி ராமர் கோவிலில் முதல் நாள் வசூல் ஆன உண்டியல் பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உண்டியலிலிருந்து ரூபாய் நோட்டுக்களை பக்கெட்டில் எடுத்து போடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல் நாளே நன்கொடைப்பெட்டியில் நன்கொடை கிடைத்ததால் பாதி நாளில் நன்கொடைப்பெட்டி நிரம்பியது…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

இதே வீடியோவை “ஆன்மீக வியாபாரக் கடையில் முதல்நாள் வசூல்” என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக அய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

அயோத்தி ராமர் கோவிலில் முதல் நாளிலேயே மக்கள் அளித்த காணிக்கையைப் பாருங்கள் என்று ஒரு தரப்பினரும், ஆன்மிக வியாபார வசூல் என்று விமர்சித்து மற்றொரு தரப்பினரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவ்வளவு விரைவாக உண்டியல் வசூல் வீடியோவை எல்லாம் வெளியிடுவார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஜனவரி 19ம் தேதி யூடியூபில் பதிவிடப்பட்ட இதே வீடியோ நமக்குக் கிடைத்தது. அதாவது, அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது. 

அதில், ஶ்ரீ சன்வாலியா சேத் கோவில், ராஜஸ்தான் (Shri Sanwaliya Seth temple) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்த ஜனவரி 22, 2024 அன்றோ, அல்லது அதற்குப் பிறகோ எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.

இந்த கோவிலின் உண்டியல் வசூல் தொடர்பாக கூகுளில் தேடிய போது பல செய்திகள் நமக்கு கிடைத்தன. நமக்கு கிடைத்த யூடியூப் வீடியோவில் உள்ள இந்தி வார்த்தைகளை கூகுளில் டிரான்ஸ்லேட் செய்து பார்த்த போது 12 கோடி அளவுக்கு காணிக்கை வசூல் ஆனது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2023 டிசம்பரில் உண்டியல் திறக்கப்பட்ட போது 17 கோடி அளவுக்கு வசூலானது என்றும், இதற்கு முன்பு உண்டியல் திறந்த போது 12 கோடி அளவுக்கு வசூல் இருந்தது என்றும் வெளியான செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: newsflare.com I Archive 1 I txtreport.com I Archive 2

ராஜஸ்தானில் சன்வாலியா கோவிலில் உண்டியல் திறப்பு வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். 2023-ல் newsflare.com என்ற இணையதளத்தில் இதே போன்று வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதிலும், உண்டியல் பெட்டியிலிருந்து பணத்தை எடுக்கின்றனர். இரண்டு வீடியோவில் இருக்கும் இடமும் ஒன்றாக இருப்பதைக் காண முடிந்தது. 11.37 கோடி ரூபாய் அளவுக்கு காணிக்கையாக பெறப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கோவிலின் வீடியோவை அயோத்தியில் முதல் நாள் உண்டியல் வசூல் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

அயோத்தி ராமர் கோவிலின் முதல் நாள் வசூல் என்று பரவும் வீடியோ ராஜஸ்தானைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயோத்தி ராமர் கோவிலின் முதல் நாள் வசூல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *