
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பங்காற்றிய அவர், பதவி துறந்து நாட்டைவிட்டு வெளியேறிய முதல் ஜனாதிபதியாகவும் பதிவானார்.
தற்போது தகவல்களுக்கமைய, கோட்டாபய பௌத்த தத்துவத்தில் அதிக நாட்டம் கொண்டு தனது நேரத்தைச் செலவிடுவதாகக் கூறப்படுகிறது. வெளிநபர்களுடன் தனது தொடர்பை முடிந்தவரை குறைத்துக்கொண்ட அவர், தியானத்தில் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த தத்துவம், ஆழ்ந்த தியான முறைகள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களைப் படிப்பதிலும், அவற்றில் உள்ள தர்மத்தைப் படிப்பதிலும் அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார். அவர் துறவறம் பூணும் முடிவை எடுத்தால், இலங்கை வரலாற்றில் இல்லறத்தைத் துறந்து துறவத்தில் இணையும் முதலாவது ஜனாதிபதியாக பதிவாகுவார். என தெரிவிக்கப்பட்டு நேற்று (2026.02.01) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை காணமுடிந்தது.




Fact Check (உண்மை அறிவோம்)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட ஏதேனும் செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது எமது ஆய்வின் மூலம் உறுதியானது.
மேலும் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் அது தொடர்பில் ஏதேனும் தகவல்களை தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் அல்லது x தள பக்கங்களில் வெளியிட்டுள்ளாரா என்பது தொடர்பில் நாம் ஆய்வை மேற்கொண்ட போது, அவற்றில் அவ்வாறான எந்த பதிவுகளையும் அவர் வெளியிட்டிருக்கவில்லை என்பதனையும் அறிய முடிந்தது.
அது மட்டுமன்றி அவர் கடந்த வருடம் ஒக்டோபர் 14 ஆம் திகதியே இறுதியாக கதிர்காமம் கட்டிட விகாரம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார.
அதே போன்று அவரது x தளமானது கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு பின்னர் புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
மேலும், கடந்த ஜனவரி 26 ஆம் திகதி இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன், ஜே.வி.பி. தலைவர்களான டில்வின் சில்வா மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்திருந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தன.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் அந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அவற்றில் கோட்டாபய ராஜபக்ஷ அவரையும் காண முடிகிறது.


கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னாள் ஊடகப் பிரிவு
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னாள் ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம் நாம் வினவியபோது, கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் தொடர்பில் தமக்கும் அறியக்கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ சாதாரணமாகவே கடவுள் பக்தி கொண்டவர் எனவும் வழமைப்போல அன்றாடம் கடவுள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் அவர் பௌத்த மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர் அதனால் அன்றாடம் அவர் புத்தருக்கு மலர் வைத்து வழிபாடுகளில் ஈடுபடுவார். மேலும் கடந்த காலங்களில் சில பௌத்த மதத் தலைவர்களிடமிருந்து அவருக்கு பௌத்த தர்மம் சார்ந்த புத்தகங்கள் பரிசாக கிடைத்துள்ளன எனவும் தற்போது அவர் ஓய்வில் இருப்பதனால் அவர் படிக்கும் புத்தகங்களுடன் சேர்த்து பௌத்த தர்மம் சார்ந்த அந்த புத்தகங்களையும் படிப்பதனை அவர் வழக்கமாக கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இந்த காரணங்களை வைத்தே அவர் துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுவருவதாக தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் அவர் தற்போது தமது ஓய்வு காலத்தில் பௌத்த தர்மம் சார்ந்த புத்தகங்களை வாசித்து வருவதனால் சமூகத்தில் இவ்வாறான தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:கோட்டாபய ராஜபக்ஷ துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளாரா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


