
நாயை தூக்கிட்டு கொல்வதற்கு ஒட்டுச்சுட்டான் இணணக்க சபை உத்தரவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் நாயை தூக்கிலிட்டு கொலை செய்த புகைப்படத்துடனான தகவல் ஒன்று பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது.
எனவே குறித்த தகவலின் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் இன்று ஒரு விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,,,,
சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார், இது இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,,,
இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் (ஓய்வு)
சின்னத்தம்பி பாடசாலை அதிபர் நித்தியகலா (ஓய்வு)
தபால் உத்தியொகத்தர் மனைவி, கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவரும் வழங்கிய தீர்ப்பு விசித்திரமாக உள்ளது,,,
அதாவது குறித்த நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைபடத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளனர்,,,
என்ன கொடுமையான தண்டனை பாருங்கள்,,,,
ஐந்தறிவு உயிரை எப்படி கொன்றுள்ளனர்,,,,
கண் சத்திரசிகிச்சைக்கு கடப்பாறையா தீர்வு?????
இந்த அடிமுட்டாள்களை யார் இணக்கசபைக்கு நீதிவழங்க அனுமதித்தது???
இவர்கள் மனிதர்களா தானா
இந்த நபர்கள் நாசமாகத்தான் போவார்கள்
மக்களே நீதி கிடைக்கும் வரை பகிருங்கள்,,,, என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.01.25 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பதிவிட்டிருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படம் தொடர்பில் பல பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.Link | Link
குறித்த செய்திகளில் மாங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள ஒட்டுசுட்டானில் ஆட்டைகடித்து கொன்ற நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு ஒரு விசித்திர தீர்ப்பு ஒன்றை கடந்த 2025.01.26 ஆம் திகதி வழங்கியதையடுத்து நாயை தூக்கிலிட்டு கொன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றிய 49 வயது பெண் ஒருவரை மிருகவதை சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கபட்டிருந்தது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரின் நாய் கடித்து விட்டதாக பொலிஸில் முறையிட்டுள்ளார், இது தொடர்பான விசாரணையை ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு பொலிஸார் மாற்றியுள்ளனர். இதன் போது இணக்க சபையினால் ஆட்டிற்கான நட்ட ஈட்டை வழங்குமாறு கோரிய நிலையில் நாய் உரிமையாளர் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார் அதனையடுத்து நட்டஈட்டுக்கு பதிலாக நாயை தருமாறு ஆட்டின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதையடுத்து நாயை ஒப்படைக்க நாய் உரிமையாளர் உடன்பாடு தெரிவித்து நாயை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து நாயை கொண்டு சென்ற ஆட்டின் உரிமையாளர் குறித்த நாயை தூக்கிலிட்டு கொன்று அதன் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்ததுடன் அதனை இணக்கச்சபை நீதவான்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நாயை தூக்கிலிட்டு கொன்ற பெண்ணை மிருகவதை சட்டத்தின் கீழ் கடந்த 2025.01.27 ஆம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்த கருத்து பின்வருமாறு
கொலை செய்யப்பட்ட நாயின் உரிமையாளர்
மேலும் இது தொடர்பில் தூக்கிலிடப்பட்டு கொள்ளப்பட்ட நாயின் உரிமையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கொல்லப்பட்ட நாய் வீட்டு வளாகத்தை காவல் காத்ததாகவும் இவ்வாறு அதை கொலை செய்யப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஆட்டிற்கான நட்டஈட்டை எப்படியாவது தான் வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாங்குளம் பொலிஸார்
மேலும் இது குறித்து நாம் மாங்குளம் பொலிஸில் வினவியபோது, இந்த சம்பவம் தொடர்பில் இணக்க சபை ஆட்டின் உரிமையாளருக்கு நட்டஈட்டை வழங்குமாறு நாயின் உரிமையாளரிடம் கோரிய போது அதனை வழங்குவதற்கு தனக்கு போதியளவு பணம் இல்லை என நாயின் உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து ஆட்டின் உரிமையாளருக்கு நாயை கையளிக்குமாறு தெரிவித்தே இணக்க சபையினால் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
எனினும் ஆட்டின் உரிமையாளர் இணக்க சபையின் உத்தரவை மீறி நாயை கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன் இணக்க சபையினால் வழங்கப்பட்ட இணக்கப்பாட்டு பத்திரத்தை அவதானித்த போது அதில் ஆட்டின் உரிமையாளருக்கு நாயை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தே கையொப்பம் இடப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்தது.
தீர்ப்பு வழங்கிய ஒட்டுசுட்டான் இணக்க சபை
அத்துடன் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் இணக்க சபையிடம் வினவியபோது, ‘நாயை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என உரிமையாளர் கூறினார். இரண்டு தரப்பும் தங்களுக்குள் கதைத்துள்ளனர். நாயை வழங்க அதன் இணங்கியுள்ளதாகவும் அப்போது நாயை தான் வாங்கிக் கொள்வதாக ஆட்டின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார் நாங்கள் இணக்கப்பாட்டிற்கு வருகின்றோம் என்ற பின்னரே இணக்க சபை அதற்கான சான்றிதழை வழங்கியதாகவும்
இணக்க சபையினால் நாயை கொலை செய்து படத்தை அனுப்புமாறோ அல்லது தூக்கில் போடுமாறோ எந்தவொரு ஆலோசனையும் வழங்கவில்லை என இணைக்க சபையின் தலைவர் கனகலிங்கம் ஜெயதீபன் குறிப்பிட்டதாக bbc தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் நாயை தூக்கிலிட்டு கொல்வதற்கு ஒட்டுச்சுட்டான் இணக்க சபையினால் உத்தரவிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலானது தவறானது என்பதுடன், ஆட்டின் உரிமையாளரான 48 வயதுடைய பெண் நட்டஈட்டுக்கு பதிலாக நாயை அமைத்துச் சென்று அதை தூக்கிலிட்டு கொலைசெய்து பின்னர் அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளதுடன் இணக்க சபையின் நீதவான்களுக்கும் குறித்த புகைப்படங்களை அனுப்பியுள்ளமை தெளிவாகின்றது.
அத்துடன் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெண் மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 2025.02.03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டதுடன் புதைக்கப்பட்ட நாயை தோண்டியெடுத்து உடற்கூற்று பரிசோதனை அனுப்புமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இணக்க சபையின் உத்தரவிற்கமைய நாய் தூக்கிட்டு கொல்லப்பட்டமை உண்மையா?
Written By: Suji ShabeedhranResult: Misleading
