
சமூகத்தில் தறபோது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள ஒரு விடயம் ரஷ்யா புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது என்பதாகும். புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்குவதில் அங்குள்ள விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளதாகவும், அது பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையையும் காணமுடிகின்றது.
எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

கேன்சர் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா.. எல்லாருக்கும் Free!!
ரஷ்யா mRNA தொழிநுட்பத்தை பயன்படுத்தி, என்ட்ரோமிக்ஸ் எனப்படும் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி அனைத்து நோயளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று ரஷ்ய அரசாங்ம் அறிவித்துள்ளது. என தெரிவித்து கடந்த 2025.09.08 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு குறித்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளாரா?
இந்த புற்றுநோய் தடுப்பூசி தொடர்பான சோதனைகள் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இந்த தடுப்பூசிக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன், ரஷ்யாவில் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட ரஷ்ய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
மேலும் இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், அதே சந்தர்ப்பத்தில் ஒரு டோஸுக்கு 300,000 ரூபிள் (சுமார்2,870 அமெரிக்க டொலர்கள்) செலவாகும் என்றும், ரஷ்ய புற்று நோயாளிகளுக்கான செலவை ரஷ்ய அரசாங்கம் ஈடுசெய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Link
இருப்பினும், பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதாகக் கூறப்படும் இந்த புற்றுநோய் தடுப்பூசி, உலகம் முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம், ஆனால் உலகம் முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று எந்த நம்பகமான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், Enteromix புற்றுநோய் தடுப்பூசி குறித்து சமீபத்தில் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை, இருப்பினும் கடந்த ஆண்டு மொஸ்கோவில் நடந்த Future Technologies மாநாட்டில் உரையாற்றும் போது, புற்றுநோய் தடுப்பூசி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்குவதில் ரஷ்ய விஞ்ஞானிகள் மிகவும் சாதகமான கட்டத்தை அடைந்து விட்டதாகவும், அது விரைவில் நோயாளிகளுக்குக் கிடைக்கக்கூடும் என்றும் புடின் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இந்த விடயம் தொடரபில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலின் உண்மையை கண்டறிய நாம் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்ட போது, இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் என்பதனை அறியமுடிந்தது.
புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் Andrey Kaprin Rossiya தெரிவித்துள்ளார் என 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி ரஷ்ய ஊடகமொன்று தெரிவித்திருந்தது. Link
இருப்பினும் உலகில் உள்ள அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் இது இலவசமாக கிடைக்கும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.
என்டோரோமிக்ஸ் (Enteromix) புற்றுநோய் தடுப்பூசி என்றால் என்ன ?
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக இருப்பதாகவும், இது பாதுகாப்பு மற்றும் உயர் செயல்திறன் இரண்டையும் காட்டுவதாகவும் ரஷ்யா கடந்த வாரம் அறிவித்தது, இந்த செய்தி புற்றுநோயாளிகளுக்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் நற்செய்தியாக அமைந்தது.
அத்துடன் மேம்படுத்ப்பட்ட மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை நிரூபித்துள்ளதாக , கிழக்கு பொருளாதார மன்றத்தில் (EEF) உரையாற்றும் போது, நாட்டின் கூட்டாட்சி மருத்துவ மற்றும் உயிரியல் அமைப்பின் (FMBA) தலைவர் வெரோனிகா ஸ்க்வோர்ட்சோவா அறிவித்துள்ளார் என கடந்த 6 ஆம் திகதி ரஷ்ய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
பல ஆண்டுகளாக தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி நடந்து வருவதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் தடுப்பூசியின் மேம்பட்ட மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதிக்காக தனது நிறுவனம் காத்திருப்பதாகவும் FMBA தலைவர் வெரோனிகா மேலும் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியாகப் பயன்படுத்தப்படும் mRNA தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் புற்றுநோய் சிகிச்சை தடுப்பூசி , Enteromix புற்றுநோய் தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது.
என்டரோமிக்ஸ் என்பது mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு வரும் தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சையாகும். நோயாளியின் புற்றுநோய் கட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுப் பொருளைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அதை எதிர்த்துப் போராட நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிப்பதற்காக இந்த சிகிச்சை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளின் அளவைக் குறைத்து அவற்றின் வளர்ச்சி விகிதத்தை 60% முதல் 80% வரை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த தடுப்பூசியான பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், மூளையின் கிளியோபிளாஸ்டோமா (glioblastoma) மற்றும் கண் மெலனோமா(ocular melanoma) உள்ளிட்ட மெலனோமா(melanoma) வகை புற்றுநோய்களுக்கும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த புற்றுநோய் தடுப்பூசி 2025 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று 2024 முதல் தகவல்கள் வெளிவந்தன, மேலும் 2024 நவம்பர் 25 திகதி அன்று, ரஷ்ய செய்தி நிறுவனம் FMBA இன் தலைவரை மேற்கோள் காட்டி, இந்த புற்றுநோய் தடுப்பூசியின் பயன்பாடு 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கப்படலாம் என்று செய்தி வெளியிட்டது.
இந்த ஆண்டு புற்றுநோய் தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் என்று கூறிய FMBA தலைவர் வெரோனிகா, பெருங்குடல் புற்றுநோய்க்காக இந்த ஆண்டு முதல் இந்த தடுப்பூசியை பயன்படுத்தத் தயாராக இருப்பதாக Rossiya-24 TVதொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார் .
மருத்துவ பரிசோதனை ஆராய்ச்சிகளின் போது இந்த தடுப்பு மருந்தானது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடையாமல் தடுப்பதை வெளிக்காட்டுகின்றன என நுண்ணுயிரியல் ஆராய்ச்சிக்கான கேமேலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கிண்டர்ஸ்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதேவேளை AI தொழிநுட்பம் மூலம் இந்த மருந்தை மிகவும் குறைந்தளவான காலத்தில் ( சுமார் ஒரு மணித்தியாலத்தில்) தயாரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து ரஷ்யாவின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கதிரியக்க மையத்தால் இந்த திட்டம் வழிநடத்தப்படுகிறது. இது mRNA அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சைகள் குறித்த உலகளாவிய ஆராய்ச்சி முயற்சிகளை பிரதிபலிக்கிறது, மேலும் Enteromix இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதுடன், மருத்துவ பயன்பாட்டிற்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
முதல் கட்ட மருத்துவ பரிசோதனை, தடுப்பூசியின் மனித சோதனை தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கிறது, ஆனால் முதல் கட்டம் பொதுவாக பாதுகாப்பு, மருந்தளவு போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது மற்றும் இது ஒரு ஆரம்ப கட்டமாகும். வெற்றிகரமான முதல் கட்ட சோதனைக்குப் பிறகும், முழு ஒழுங்குமுறை ஒப்புதல் மற்றும் பரவலான மருத்துவ பயன்பாட்டிற்கு முன்னர் அதிக சோதனைகள் (இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம்) தேவைப்படுகின்றன என்பதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
மருத்துவ ஆதாரங்களுடனான சிக்கல்கள்
Enteromix இற்கான சான்றுகள் பெரிய வரம்புகளைக் கொண்டுள்ளன. இந்த சோதனையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 48 நோயாளிகள் மாத்திரமே உள்வாங்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது, அதே நேரத்தில் முறையான 2ஆம் கட்ட சோதனைகளுக்கு பொதுவாக பல்வேறு வகையான புற்றுநோய்களைக் கொண்ட 100-300 பேர் தேவைப்படுகிறார்கள். மேலும் இந்த ஆய்வு ஒப்பீட்டிற்காக ஒரு கட்டுப்பாட்டுக் குழுவைப் பயன்படுத்தியதா என்பது குறித்த கேள்விகளும் எழுவதுடன், இந்த ஆய்வு முடிவுகள் எந்தவொரு மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் அறிக்கைகளிலும் வெளியிடப்படவில்லை.
மேலும் பின்தொடர்தல் காலம் பொதுவாக சர்வதேச தரநிலைகளுக்கமைய தேவைப்படும் 2-5 ஆண்டுகளை விட மிகக் குறைவாக இருந்தது. இந்த குறிப்பிடத்தக்க குறைபாடுகள் அறிவியல் கண்ணோட்டத்தில் 100% செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.
முதல் கட்ட சோதனையில் “100 சதவீத செயல்திறன்” என்ற கூற்றுகளை எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் முன்னாள் ஆலோசகரும் மருத்துவ புற்றுநோயியல் நிபுணருமான வைத்தியர் திரேன் பாத்தியா இந்தியா டுடே இற்கு விளக்கமளித்திருந்தார்.
என்டோரோமிக்ஸ் சோதனையில் 48 நோயாளிகள் மாத்திரமே இருந்துள்ளனர் என்றும், இது பரந்த மக்கள் தொகை பற்றிய தீர்விற்கான போதுமான தொகை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கண்டுபிடிப்புகள் சக மதிப்பாய்வு செய்யப்படவில்லை எனவும் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருருந்தார்.
எனவே இந்த முக்கியமான தகவல்கள் இன்மையால், புற்றுநோய் சிகிச்சைக்கான இன்னும் நிரூபிக்கப்படாத தலையீடாகவே என்டோரோமிக்ஸ் கருதப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
mRNA புற்றுநோய் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் Enteromix இன் ஒப்பீடு
என்டோரோமிக்ஸை mRNA புற்றுநோய் தடுப்பூசி திட்டங்களுடன் ஒப்பிடுவது ஆராய்ச்சி தரத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை காட்டுகின்றது. BioNTech/Pfizer மற்றும் Moderna/Merck ஆகியவை பல்வேறு வகையான புற்றுநோய்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான நோயாளிகளுடன் பெரியளவிலான II ஆம் கட்ட சோதனைகளை நடத்தி வரும் நிலையில், ரஷ்ய திட்டம் 48 நோயாளிகளை மாத்திரமே பரிசோதித்துள்ளது.
BioNTech மற்றும் Pfizer ஆகியவை நூற்றுக்கணக்கான மாதிரி அளவுகளுடன் II ஆம் கட்ட சோதனைகளை நடத்தி வருகின்றன, மேலும் அதன் முடிவுகள் Nature போன்ற முன்னணி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன . Moderna, Merck இணைந்து, இரண்டாம் கட்ட மெலனோமா சோதனையில் மீண்டும் நிகழும் அபாயத்தில் 40-50% குறைவதாக அறிவித்தது. மேலும் இந்த கண்டுபிடிப்புகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்டு The Lancet இல் வெளியிடப்பட்டுள்ளன . இந்த நிறுவனங்கள் தங்கள் முன்னேற்றம் குறித்த வெளிப்படையான புதுப்பிப்புகளை வழங்குகின்றன.
இதற்கு நேர்மாறாக, ரஷ்யா அதன் சிறிய சோதனையிலிருந்து குறைந்தபட்ச தகவல்களைப் பகிர்ந்து, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட சரிபார்ப்பு இல்லாமல் கணிசமாக அதிக வெற்றி விகிதங்களை அடைந்ததாகக் கூறுகிறது.
புற்றுநோய் தடுப்பூசிகள் ஏன் COVID-19 தடுப்பூசிகளிலிருந்து வேறுபடுகின்றன?
என்டரோமிக்ஸ் மற்றும் COVID-19 mRNA தடுப்பூசிகளுக்கு இடையே ஒற்றுமை காணப்படுவதாக சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் வெற்றி, புற்றுநோய்க்கும் இதேபோன்ற முடிவுகளை உறுதி செய்கிறது என்பதை காட்டுகிறது. ஆனால் அவ்வாறான தகவல்கள் உண்மை என கருதமுடியாது. COVID-19 தடுப்பூசிகள் நம் உடலுக்கு அந்நியமான வைரஸ்களை குறிவைக்கின்றன,அதனால் நோயெதிர்ப்பு அமைப்பு அவற்றை எளிதாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.
இருப்பினும், புற்றுநோய் நமது சொந்த செல்களிலிருந்தே உருவாகிறது, இதனால் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான திசுக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அதை அடையாளம் கண்டு போராடுவது மிகவும் கடினம். புற்றுநோய் தடுப்பூசிகள் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றன, மேலும் அவை பயனுள்ள சிகிச்சைகளாகக் கருதப்படுவதற்கு முன்பு பரந்தளவிலான சோதனைகள, நீண்ட வளர்ச்சி காலங்கள் மற்றும் முழுமையான பாதுகாப்பு மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன. இது குறித்த மேலதிக தகவல்கள் இங்கே.
தடுப்பூசி குறித்து புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நம்பிக்கை ஆபத்தானது!
துல்லியமான சக மதிப்பாய்வுகள் இன்றி ஆரம்பகால ஆராய்ச்சி முடிவுகளைப் பகிர்வது, தற்போதைய சிகிச்சைகள் குறித்து நோயாளிகளைத் தவறாக வழிநடத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அறிவியல் கண்டுபிடிப்புகள் முழுமையாக சோதிக்கப்படாவிட்டால், நோயாளிகள் எதிர்பாராத முடிவுகளை சந்திக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய மருத்துவ சிகிச்சைகள் பற்றிய துல்லியமான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு, சரியான அறிவியல் நடைமுறைகளைப் பின்பற்றுவது, குறிப்பாக சக மதிப்பாய்வு அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒழுங்குமுறை நிலை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள்
ரஷ்யாவின், என்டரோமிக்ஸ் இன்னும் சுகாதார அமைச்சின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதனை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அல்லது உலக சுகாதார அமைப்புக்கு இது குறித்து எந்த சமர்ப்பிப்புகளும் செய்யப்படவில்லை. நீண்டகால பாதுகாப்பு, நோயெதிர்ப்பு தொடர்புகள் மற்றும் மருந்து தொடர்புகள் இன்றும் பரிசோதிக்கப்படாமல் உள்ளன, மேலும் தடுப்பூசி இதுவரை சிறிய நோயாளர் குழுவிற்கு மாத்திரமே சோதிக்கப்பட்டுள்ளது. விரிவான மற்றும் நீண்டகால ஆய்வுகள் இல்லாமல், இது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதாகக் கருத முடியாது.
மஹரகம் அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர
இலங்கையிலும் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் பதிவாகி வரும் நிலையில், ரஷ்யாவில் புற்று நோயாளிகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்காகக் காத்திருக்கும் Enteromix புற்றுநோய் தடுப்பூசி குறித்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவிடம் வினவினோம். இதன்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஊடகங்களில் வெளியான தகவல்கள் மூலமே தான் இந்த தடுப்பூசி பற்றி அறிந்து கொண்டதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Also Read: ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி உண்மையில் செய்வது என்ன?
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், ரஷ்யா உருவாக்கிய Enteromix புற்றுநோய் தடுப்பூசி உலகம் முழுவதும் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.
மேலும் 2024 ஆம் ஆண்டு இந்த தடுப்பூசி குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது, அதன் பின்னர் இந்த தடுப்பூசி குறித்து ஜனாதிபதி எந்த அறிக்கையும் வெளியிட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் இல்லை. இருப்பினும், நோயாளிகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அதிகாரிகள் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும், இவை இறுதி முடிவுகள் என்றோ அல்லது உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக விநியோகிக்கப்படும் என்றோ தெரிவிக்கப்பட்டமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading
