‘SQUID GAME’ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடரா?

False சர்வதேசம் | International

INTRO

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி வெளியாகி Netflix இல் ஒளிபரப்பப்பட்ட வெப் தொடரான ஸ்க்விட் கேம் (Squid Game) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு வெப் தொடராகும்.

தற்போது இதன் இரண்டாவது பாகம் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில புகைப்படங்களுடனான பதிவுகள் இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கதை என பகிரப்பட்டு வருகின்றன.

எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook| Archived Link

 “உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது ஸ்க்விட் கேம்”

1986 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மையான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது ஸ்க்விட் கேம். 

தென் கொரியாவில் யாரும் இல்லாத ஒரு பதுங்கு குழியில் இது நடந்துள்ளது, அங்கு மக்கள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டு உயிர்வாழ பல விளையாட்டுகளை முடிக்க வேண்டியிருந்தது. மனிதாபிமானமற்ற எண்ணங்களைக் கொண்ட ஹோஸ்டை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை” என தெரிவிக்கப்பட்டு புகைப்படங்களுடனான பதிவு கடந்த 2025.01.06 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெப் சீரிஸானது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்ட இணையக்கட்டுரை ஒன்றையும் எம்மால் காணமுடிந்தது.

https://www.awesomescreenshot.com/image/52459903?key=79fbfcd4e2aaa35869d24f2548a97bd4

Iftamil Link | Archived Link

இதில் ஸ்க்விட் கேம் 70கள் மற்றும் 80களில் தென் கொரியாவில் நடந்த உண்மை நிகழ்வுகளை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான உண்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காண முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

உலகளாவிய ரீதியில் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் தென்கொரிய வெப் தொடர்களுக்கு பெரும் வரவேற்புள்ளது என்றே கூற வேண்டும்  BTS இசைக்குழு மற்றும் Black Pink போன்ற வெப் தொடர்கள் அதில் முக்கியமானவை. அந்த வரிசையில் வெப் தொடர் ரசிகர்களின் மத்தியில் தற்போது Squid Game பெரும் இடத்தினை பிடித்துள்ளது.

Squid Game

Squid Game என்பது தென்கொரியாவின் ஒரு வெப் தொடராகும். இந்த தொடரை கவாங் டோங்யுக் (Hwang Dong-hyuk) என்பவர் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். மேலும் லீ ஜங் ஜே,பார்க் கே சூ, வி கா ஜோன்,ஹோயோன் ஜங், ஓ யோங்சு, கியோ சங் டே, அனுபம் திரிபாதி, கிம் ஜோரியோங் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் முதலாம் பாகம் Netflix இல் கடந்த  2021 இல் ஒன்பது அத்தியாயங்களுடன் வெளியானது.

456 பில்லியன் பரிசுத் தொகைக்காக வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் இருந்து பங்குபெறும் 456 வீரர்கள், அங்கு கொடுக்கப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி மூலம் பல சவால்களை கடந்து வெற்றிப்பெறவேண்டும் என்ற ரீதியில் இந்த தொடரின் கதைக்களமானது அமைக்கப்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஸ்க்விட் கேம் வெப் தொடரின் இரண்டாவது பாகம் 7 அத்தியாயங்களுடன் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வெப் தொடரில் போட்டியில் பங்கேற்றவர்கள் அணிந்திருந்த சீருடை மற்றும் அந்த போட்டிகள் நடைபெறும் இடங்கள்  என்பன சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட  புகைப்படங்களுடன் ஒத்திருந்ததால், அது உண்மையில் இடம்பெற்ற சம்பவம் என்று பலரும் நம்பியுள்ளனர்.

Squid Game உண்மை சம்பவமா?

இந்த விளையாட்டு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது அல்ல. இது திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான ஹ்வாங் டோங்-ஹியூக்கால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையாகும். 2009 ஆம் ஆண்டு தான் எதிர்கொண்ட நிதி பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான ஒரு கதையை உருவாக்கலாம் என்ற யோசனை தனக்கு முதன்முதலில் வந்ததாகவும், இந்தத் தொடர் தனது தனிப்பட்ட அனுபவங்களாலும், முதலாளித்துவ சமூகங்களின் போட்டித் தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பொருளாதார சமத்துவமின்மை, வர்க்க வேறுபாடு மற்றும் சமூக அழுத்தங்கள் உள்ளிட்ட பல நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளை இந்த கதை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Link

மேலும் இந்த தொடர் குறித்து அவர் தெரிவிக்கையில் இந்த தொடரில் வரும் விடயங்கள் யதார்த்தமானவை அல்ல எனவும் நிஜவாழ்கையில் இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடைபெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Link 

இந்த வெப் தொடரின் இயக்குனரினால் இதுவொரு உண்மை சம்பவம் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த சமூக ஊடக பதிவுகளில் இருந்த புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.

இதன்போது இவை AI தொழிநுட்ப கலைஞரான Cityhermitai என்பவரால்  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது கண்டறியப்பட்டது.

குறித்த  AI தொழிநுட்ப கலைஞரால் Squid Game ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களை இங்கே காண்க  

மேலும் அவரின் Instagram பக்கத்தை ஆய்வு செய்த போது AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட பல புகைப்படங்களை எம்மால் காணமுடிந்தது.

அத்துடன் அவரின் Instagram பக்கதில் குறித்த  Squid Game தொடர்பான புகைப்படம் உண்மையான ஒன்றா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் அது AI  தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என பதிலளித்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் குறித்த புகைப்படங்களை Hive Moderation AI detection tools ஐ உபயோகப்படுத்தி ஆய்வு செய்த போதும் குறித்த புகைப்படங்கள் AI  தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டவை என்பது உறுதியானது.

Brothers’ Home (சகோதரர்கள் இல்லம்)

1975 முதல் 1986 வரையான காலப்பகுதியில் தென் கொரியாவில் செயல்பட்ட ஒரு நலன்புரி நிலையமான Brothers’ Home இல் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே  இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது என்றும், குறித்த  Brothers’ Home இன் புகைப்படங்களே இவை என தெரிவிக்கப்பட்டே சமூக ஊடகங்களி்ல் மேற்குறிப்பிட்ட படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தது.

சமூக சேவை என்ற போர்வையில் Brothers’ Home என்ற பெயரில் 40,000 பேர் இங்கு  சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன் வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டு கட்டம் கட்டமாக அவர்களை துன்புறுத்தி அதில் 657  பேர் கொல்லப்பட்டமை ஒரு உண்மை சம்பவமாக இருந்தாலும்  அங்கு அடைக்கப்பட்டவர்கள் விளையாட்டுக்கு உட்படுத்தப்பட்டு அதில் தோல்வியடைந்தவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் எந்த ஆதாரங்களும் இல்லை.

Brothers’ Home தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள Link | Link

Brothers’ Home இல் இடம்பெற்ற சம்பவங்களின் உண்மை புகைப்படங்கள் பின்வருமாறு

SQUID GAME’ தொடரில் உள்ள சில காட்சிகள்  Brothers’ Home இல் நடைபெற்ற சில சம்பவங்களை பிரதிபலிப்பவையாக அமைந்தாலும்  வரலாற்று சம்பவங்களினால் ஈர்க்கப்பட்டு தான் இந்த வெப் தொடரை உருவாக்கவில்லை என அதன் இயக்குனர் தெளிவாக கூறியுள்ளார்.Link

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் 1986 ஆம் ஆண்டு தென்கொரியாவில்  Brothers’ Home இல் இடம்பெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே SQUID GAME வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த Brothers’ Home இன் உண்மையான புகைப்படங்கள் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் போலியானது என்பதுடன் குறித்த புகைப்படங்கள் AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்பதுவும் தெளிவாகின்றது.

மேலும் Brothers’ Home சம்பவமானது விளையாட்டை மையப்படுத்திய ஒரு உண்மை சம்பவம் அல்ல எனவும் அரசாங்கத்தின் தலையீட்டில் சமூக சேவைகளை வழங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பேரில், சுமார் 40,000 பேரை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து, அவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவர்களில் 657 பேர் கொல்லப்பட்ட ஒரு உண்மை சம்பவம் என்பது புலனாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:‘SQUID GAME’ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடரா?

Fact Check By: suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *