
கருப்பு நிற பூஞ்சை படிந்திருக்கும் வெங்காயத்தை உட்கொள்வது ஆபத்தானது என தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் கருப்பு_பூஞ்சை படர்ந்த #வெங்காயம்….
கருப்பு லேயர் படித்த வெங்காயத்தை சாப்பிடலாமா? இதில் இவ்வளவு விஷயம் இருக்கா??
நம் அன்றாட சமையலில் உபயோகிக்கும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். நமது உணவின் சுவையை கூட்டுவதில் வெங்காயத்திற்கு முக்கிய பங்கிருக்கின்றது. வெங்காயம் இல்லாத உணவு சுவையாக இருக்காது.. உணவின் ருசியை கூட்டும் வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கின்றது.
நம் நாட்டில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம்,
பெல்லாரி வெங்காயம்,மலை வெங்காயம் என்று பல வகை வெங்காயங்கள் விளைகிறது.வெங்காயத்தை பச்சை வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
#வெங்காயத்தில் நிறைந்திருக்கும் சத்துக்கள்
1)பொட்டாசியம்
2)கார்போஹை
ட்ரேட்
3)சோடியம்
4)வைட்டமின் சி,பி6 மற்றும் டி
5)கால்சியம்
6)மெக்னீசியம்
7)இரும்புச்சத்து
வெங்காயத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.உடலில் படிந்து கிடக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வரலாம்.
இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வெங்காயத்தில் சில ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது.ஒரு சில வெங்காயத்தை உரிக்கும் பொழுது அதன் மேல் ஒரு கருப்பு படலம் பரவி இருப்பதை கவனித்திருப்பீர். சிலர் அதை சுத்தம் செய்யாமல் நறுக்கி சமையலில் சேர்ப்பார்கள்.ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம்.
வெங்காயத்தில் காணப்படும் இந்த கருப்பு படலம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவையாகும்.
இந்த வெங்காயத்தை சாப்பிட்டால் பூஞ்சை நோயான மியூகோர்மைகோசிஸ் ஏற்படக் கூடும்.இது நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு பூஞ்சையாகும்.வெங்காயத்தின் மேல் இந்த கருப்பு புள்ளிகள் தென்பட்டால் அதை நன்கு சுத்தம் செய்துவிட்டு சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அதுவே வெங்காயத்
திற்குள் இதுபோன்று கருப்பு பூஞ்சை தென்பட்டால் அதை பயன்படுத்துவதை தவிரக்க வேண்டும்.
கருப்பு பூஞ்சை படர்ந்த வெங்காயத்தை உட்கொள்வதால் குமட்டல்,தலைவலி,வாந்தி,வயிற்று வலி,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்… என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.01.20 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக ஊடகப் பதிவில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு ஆதாரமான நம்பகமான எந்த மூலங்களும் குறிப்பிடப்படவில்லை. எனவே, அந்த சமூக ஊடகப் பதிவில் உள்ள தகவல்கள் உண்மையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் உண்மை கண்டறிதல் ஆய்வை மேற்கொண்டோம்.
வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள்
அமெரிக்க விவசாய திணைக்களத்தின் (USDA) தகவலின்படி, 110 கிராம் எடையுள்ள நடுத்தர அளவிலான ஒரு வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் பின்வருமாறு


U.S. Department of Agriculture
சமூக ஊடகங்களில் பகிரப்படும்விதத்தில் கருப்பு படலத்தால் மூடப்பட்டுள்ள வெங்காயங்களை உணவாக உட்கொள்வதால் ‘மியூகோர்மைகோசிஸ்’ (Mucormycosis) எனப்படும் பூஞ்சைத் தொற்று ஏற்படுமா?
மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis)
மியூகோமைகோசிஸ் (Mucormycosis) என்பது Mucorales எனப்படும் பூஞ்சை வகையால் ஏற்படும், மிகவும் அரிதானதும் உயிருக்கு ஆபத்தானதுமான ஒரு பூஞ்சைத் தொற்றாகும். Black Fungus எனவும் அழைக்கப்படும் இந்த நோய், 2021 ஆம் ஆண்டில் COVID-19 இலிருந்து குணமடைந்தவர்களிடையே வேகமாகப் பரவியது.
எனினும், வெங்காயங்களில் காணப்படும் பூஞ்சைத் தொற்றினால் மியூகோமைகோசிஸ் (Mucormycosis) நோய் ஏற்படுகிறது என்பதைக் உறுதிப்படுத்தும் எந்த மருத்துவ அறிவியல் ஆதாரங்களும் இல்லை.
மியூகோமைகோசிஸை ஏற்படுத்தும் பூஞ்சைகள் Rhizopus, Mucor, Lichtheimia போன்றவை உட்பட Mucorales எனப்படும் தனிப்பட்ட பூஞ்சை குழுவைச் சேர்ந்தவை. இவ்வகை பூஞ்சைகள், பொதுவாக அழுகிய உணவுகளில் காணப்படும் பூஞ்சைகள் அல்ல என்பதைக் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
StatPearls (NCBI மூலம்) வெளியான ஒரு மதிப்பாய்வில் (Review), இந்த வெப்பத்தைத் தாங்கும் Mucorales வகை பூஞ்சைகள் பொதுவாக மண் மற்றும் அழுகும் கரிமப் பொருட்களில் காணப்படுகின்றன என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களில் மட்டுமே கடுமையாகவும் வேகமாகவும் வளரக்கூடிய தொற்றை ஏற்படுத்துகின்றன என்றும் விளக்கப்பட்டுள்ளது.
India Today Fact Check குழுவும், குளிர்சாதனப் பெட்டிகளில் காணப்படும் பூஞ்சைகள் (உதா: Stachybotrys chartarum) மற்றும் வெங்காயத்தின் மேற்பரப்பில் காணப்படும் பூஞ்சைகள் (உதா: Aspergillus niger) ஆகியவை, மியூகோமைகோசிஸ் ஏற்படுத்தும் Mucormycetes பூஞ்சைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதைக் இந்திய மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை இங்கே வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், குளிர்சாதனப் பெட்டி அல்லது வெங்காயத்தின் மேற்பரப்பில் உருவாகும் பூஞ்சைகளால் மூக்கின் உள்படலம் (mucosal membrane) பாதிக்கப்படும் என்ற கருத்து ஒரு தவறான நம்பிக்கை என Times of India இணையதளத்தில் வெளியான உண்மைச் சரிபார்ப்பு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேலும் தெளிவுபடுத்தினால்,
- குளிர்சாதனப் பெட்டியில் உள்ள பூஞ்சைகள் மியூகோமைகோசிஸை ஏற்படுத்தும் என்ற கூற்று பொய்யானது. அவை, வீட்டு சூழலில் காணப்படும் மியூகோமைகோசிஸ் ஏற்படுத்தும் Mucorales பூஞ்சைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் உள்ள பூஞ்சைகள் மியூகோமைகோசிஸை ஏற்படுத்தும் என்ற கூற்றும் தவறானது.
வெங்காயத்தின் மேற்பரப்பில் காணப்படும் Aspergillus போன்ற பூஞ்சைகள் சரியாகக் கழுவினால் அகற்றப்படக்கூடியவை மற்றும் பொதுவாக தீங்கிழைக்காதவை. - மியூகோமைகோசிஸ் என்பது சுற்றுச்சூழல் பூஞ்சைகளால் ஏற்படுகிறது. குறிப்பாக மண், தூசி மற்றும் அழுகும் பொருட்களில் உள்ள Mucormycetes பூஞ்சைகள், அதிக ஆபத்துக்கு உட்பட்ட நபர்களில் இந்த நோயை ஏற்படுத்தக்கூடும்.
ஆகையால், மியூகோமைகோசிஸ் வெங்காயங்களில் அல்லது குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே உள்ள பூஞ்சைகளால் ஏற்படுவதில்லை, மாறாக குறிப்பிட்ட சுற்றுச்சூழல் பூஞ்சைகள் (Mucorales) காரணமாகவே ஏற்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் வலுவான, நம்பகமான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.
மியூகோமைகோசிஸ் பரவும் வழிகள்
- முக்கியமாக, வானில் பரவி இருக்கும் பூஞ்சை விதைகள் (spores) சுவாசிப்பதன் மூலம் இந்தத் தொற்று ஏற்படுகிறது.
- தோலில் ஏற்பட்ட காயங்கள், வெட்டுகள் அல்லது தீக்காயங்கள் வழியாகவும் பூஞ்சை உடலுக்குள் நுழையலாம்.
- அரிதாக, மாசுபட்ட உணவு அல்லது பானங்கள் மூலம் கூட இந்தத் தொற்று ஏற்படக்கூடும்.
- எனினும், மியூகோமைகோசிஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை.
ஆராய்ச்சி பேராசிரியர் இல்மி ஹேவாஜுலிகேவின் கருத்து
சமூக ஊடகப் பதிவுகளில் காட்டப்படுவது போல, கருப்பு படலத்துடன் காணப்படும் வெங்காயங்களை உணவாக உட்கொள்வது உடலுக்கு தீங்கானதா, மேலும் வெங்காயங்களில் இவ்வாறான பூஞ்சை நிலை உருவாகக் காரணம் என்ன என்பது ஆராய்ச்சி பேராசிரியர் இல்மி ஹேவாஜுலிகேவிடம் வினவினோம்.
இதன்போது, வெங்காயங்களில் இவ்வாறு காணப்படுவது Aspergillus niger எனப்படும் பூஞ்சை வகை என தெரிவித்தார். முன்னதாக இந்தப் பூஞ்சை உடலுக்கு தீங்கற்றது எனக் கருதப்பட்டிருந்தாலும், சமீப காலங்களில் இதில் நச்சுத்தன்மை இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இது Aflatoxin போன்ற அளவிற்கு மிகவும் ஆபத்தானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விடயம் தொடர்பாக தாம் நேரடியாக எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு வகை டாக்சின் (toxin) இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதனால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து போதுமான, நீண்டகால ஆய்வுகள் இதுவரை நடைபெறவில்லை என்றும் பேராசிரியர் விளக்கினார்.
இவ்வாறான பூஞ்சையால் மாசுபட்ட வெங்காயங்களை உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், பழுதடைந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டி அகற்றிய பின் மீதியை உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.
அமெரிக்கா ஒன்றியத்தின் விவசாய திணைக்களத்தின் (USDA) தரவுகளின்படி, வெங்காயங்களில் காணப்படும் கருப்பு பூஞ்சை Aspergillus niger எனும் பொதுவான பூஞ்சை வகையால் உருவாகும் என்பது மேலும் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜபல்வூர் நகரில் உள்ள மருத்துவ மைகாலஜி பூஞ்சை நோய் கண்டறிதல் மற்றும் ஆய்வு மையத்தில் (Center for Medical Mycology Fungal Disease Diagnostic and Research Center) பணிபுரியும் விஞ்ஞானி வைத்தியர் ஷேஷ் ஆர் நவாங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவரின் விளக்கம் பின்வருமாறு
“இத்தகைய வகை பூஞ்சைகள் அரிதான சூழல்களில் மட்டுமே தொற்றை ஏற்படுத்தும். இருப்பினும், வெங்காயங்களை உணவாக பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் நன்கு கழுவ வேண்டும்.”
விவசாயத் திணைக்களர்த்தின் உணவு ஆராய்ச்சி பிரிவு, பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பெர்னாண்டோ
விவசாயத் திணைக்களர்த்தின் உணவு ஆராய்ச்சி பிரிவு, பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பெர்னாண்டோவிடம் இதுகுறித்து நாம் வினவினோம்.
இதன்போது, வெங்காயத்தை அறுவடை செய்து சேமிக்கும் போது சரியான முறைகளை பின்பற்றாததால், வெங்காயங்களில் இத்தகைய பூஞ்சைகள் ஏற்படுகின்றன. சில வெங்காயத் தோட்டக்காரர்கள், நன்மைகள் மிகுந்த சூழல்கள் மற்றும் வேகமாக வணிக சந்தைக்கு அறுவடை செய்ய வேண்டிய தேவையின் காரணமாக, அறுவடை மற்றும் பின்னர் வெங்காயத்தை தயாரிக்கும் போது சரியான முறைகளை பின்பற்றுவதில்லை. இதனால், பாவனைக்கு பொருத்தமற்ற வெங்காயங்கள் சந்தைக்கு விற்பனைக்காக விடப்படுவதும், வெங்காயத்தில் ஈரப்பதம் இருக்கும்போது பூஞ்சை வளரக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய வெங்காயம் விஷமிக்கதா, மரணத்தை ஏற்படுத்துமளவில் ஆபத்தானதா என்பதை நேரடியாகச் சொல்ல முடியாது, அது பூஞ்சையின் தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் ஆனால் அந்த பூஞ்சை உடலில் சேருவது விரும்பத்தக்கது அல்ல எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பூஞ்சை வளராத முறையில் வெங்காயத்தை அறுவடை செய்து சந்தைக்கு வெளியிட்டால் இத்தகைய பிரச்சினை ஏற்படாது எனவும்
இதற்காக விவசாயிகள் மற்றும் பொறுப்பான அனைத்து துறைகளும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வெங்காயம் வளர்ப்பது முதல் அறுவடை செய்யும் வரை சரியான முறைகளை பின்பற்றுவது எப்படி என்பது தொடர்பான தகவல்களை இங்கே காணலாம்.
Aspergillus niger பூஞ்சை மற்றும் அதன் உடல் ஆரோக்கியத்திற்கான ஆபத்துக்கள் மருத்துவ வல்லுநர்களின் கருத்துகள்
உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் FAO/WHO விசேட குழு கூறுவது:
- Aspergillus niger என்பது உணவுகளில் பொதுவாக காணப்படும் பூஞ்சை.
- தற்போதைய தகவல்கள் அடிப்படையில், இது மனிதர்களுக்கு நோய்க்காரணமாக இல்லை எனக் காட்டப்படுகிறது.
Institut national de santé publique du Québec நிறுவனம் கூறுவது:
- உட்கொள்ளப்பட்ட Aspergillus niger பூஞ்சை சில பாதிப்புக்களை உண்டாக்கலாம், இதில் சைட்டோடோசிசிட்டி (Cytotoxicity), நரம்பு பாதிப்பு (Neurotoxicity), சிறுநீரக பாதிப்பு (Nephrotoxicity) போன்றவை அடங்கும்.
- இருப்பினும், இது மிகவும் விஷமிக்க பூஞ்சை எனக் கருதப்படவில்லை.
Mayo Clinic தெரிவிக்கிறது:
- பொதுவாக, Aspergillus niger பெரும்பாலானவர்களுக்கு தீங்கு விளைவிக்காது.
- ஆனால் தீவிர நோய் எதிர்ப்பு சக்தியின்மை, நுரையீரல் பிரச்சினைகள் அல்லது ஒவ்வாமைபோன்ற நிலைகள் உள்ளவர்கள், இந்த பூஞ்சை விதைகளை சுவாசித்தால் கடுமையான நோய்களுக்கு உள்ளாகக்கூடும்.
CDC (Centers for Disease Control and Prevention) கூறுவதாவது:
- பெரும்பாலான நபர்கள் Aspergillus பூஞ்சை காரணமாக நோய்வாய்ப்படவில்லை.
- இருப்பினும், தீவிர நோய் எதிர்ப்பு சக்தியின்மை அல்லது நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோய்கள் ஏற்படக்கூடும்.
- சில மென்மையான தன்மை கொண்ட நபர்களில் ஒவ்வாமை பிரச்சினைகள், மற்றும் நரம்பு அல்லது நுரையீரல் பிரச்சினைகள் தீவிரப்படுத்தப்படலாம்.மேலதிக தகவல்கள் இங்கே காணலாம்.
அறிவியல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
- Aspergillus பூஞ்சை உள்ள வெங்காயத்தை பயன்படுத்தும்போது கையுறைகள் அணிவது.
- இத்தகைய வெங்காயத்தை பெரிய அளவில் கையாளும் போது வாயை மூடி அல்லது முகக்கவசம் பயன்படுத்துவது.
- Aspergillus விதைகள் சுவாசிக்கப்படாதவாறு, நன்கு காற்றோட்டம் உள்ள இடங்களில் வேலை செய்வது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:வெங்காயத்தில் காணப்படும் கருப்பு பூஞ்சை மியூகோமைகோசிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான பூஞ்சையா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


