
மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே உண்மையில் இலங்கையில் அது குறித்த எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்பட்டுள்ளனவா என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் கொரோனா மீண்டும் தனது தாண்டவத்தை தொடங்கியுள்ளது. எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.19 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அதில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா வைரஸ் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
COVID-19
ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதனால் இலங்கை மக்கள் முக கவசம் அணிவது சிறந்தது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் இலங்கையில் கொவிட் – 19 நிலைமை உள்ளதாக, நாட்டின் சுகாதாரத் துறை அந்த நிலைமை தொடர்பில் ஏதேனும் அறிவித்தல்களை வெளியிட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்தபோது, அவ்வாறான எந்த அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை என்பது உறுதியானது.
எனவே மேற்குறிப்பிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று மீண்டும் கொரோனா இலங்கையில் பரவ ஆரம்பித்துவிட்டதாக ஏதேனும் செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த தகவல்களும் பிரதான ஊடகங்களிலும் வெளியாகியிருக்கவில்லை.
ஆனால் சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
இருப்பினும் இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் பரவுவதாகவோ, இதனால் இலங்கை மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாகவோ அந்த செய்திகளில் எந்த தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
மேலும் சர்வதேச ஊடகங்களிலும் கொரோனா தொற்று இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹொங்கொங் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகின்றமை தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Link | Link | Link
வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ
கடந்த ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் பரவிய கொவிட் – 19 வைரஸின் சமீபத்திய திரிபு மிகவும் பாரதூரமானது அல்ல எனவும், உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியில் அதிக கவனம் செலுத்தியதால் கொவிட் – 19 வைரஸின் வீரியம் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்தார்.
மேலும் சீனா, சிங்கப்பூர், இந்தியா போன்ற சில நாடுகளில் தீவிரமற்ற கொவிட் வைரஸின் மாறுபாடுகள் அவ்வப்போது பரவி வருவதாகவும், ஆனால் இலங்கையில் தற்போது அத்தகைய நிலைமை இல்லை என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்நாட்களில் மழையுடனான வானிலை காரணமாக, இலங்கையில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகில் சில நாடுகளில் தற்போது பரவிவரும் கொவிட் வைரஸ்
தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து முழுவதும் கொவிட்-19 இன் புதிய அலை பரவி வருகிறது, மேலும் அந்த நாடுகளில் தொற்றுநோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. Link
மேலும் இந்த நாடுகளில் தற்போது பரவும் கொவிட் வைரஸானது துணை வகைகளான JN.1 கொவிட் மாறுபாட்டிலிருந்து உருவானவை என அந்த நாடுகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் நோயர்களின் எண்ணிக்கை 28 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது, மே 3 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 14,200 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்ட, தடுப்பூசி போடப்பட்ட, அதிக ஆபத்தான சுகாதார நிலைமைகள் இல்லாதவர்களுக்கு, தற்போதைய COVID-19 அலை பருவகால காய்ச்சல் நிலையைப் போன்றது எனவும் அது கடுமையான நிலை அல்ல எனவும் சர்வதேச ஊடக செய்திகளில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த செய்தி அறிக்கைகளில், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் அடிப்படை உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இது சில ஆபத்தான நிலைகளை தோற்றுவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.Link | Link
இந்தியாவில் தற்போது பரவிவரும் கொவிட் – 19 தொற்று
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. 257 பேரும் சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Link
இலங்கையில் தற்போது காணப்படும் சுகாதார அபாய நிலைகள்
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மே மாதத்தின் கடந்த பதினைந்து நாட்களில் மாத்திரம் கிட்டத்தட்ட 2,355 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் மேல் மாகாணத்தில் 48% சதவீதத்தினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மே 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை, அபாயகரமான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட 15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
மேலும், டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்கள் இரண்டும் நுளம்புகளால் ஏற்படுவதாகவும், சிறிதளவு தண்ணீர் தேங்கும் இடங்களிலிருந்து கூட இந்த நுளம்புகள் பரவக்கூடும் என்றும், அத்தகைய இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோய்களில் அறிகுறிகளாக, கடுமையான தலைவலி, கண்களுக்குக் கீழே வலி, உடலில் வலி மற்றும் தோலில் சிவப்பு புள்ளிகள் ஆகியவற்றுடன் அதிக காய்ச்சல் இருக்கும் எனவும்,சிக்கன்குனியாவைப் பொறுத்தவரை, மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் வீக்கத்துடன் கூடிய அதிக காய்ச்சல் இருக்கும் என்றும் வயதானவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே மருத்துவ உதவியை நாடுமாறும் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பெய்துவரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்கன்குனியா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா தெரிவித்துள்ளார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் தற்போது கொவிட் – 19 தொற்று தொடர்பில் எந்தவித எச்சரிக்கை அறிவிப்புகளும் சுகாதாரத்துறையினால் வெளியிடப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் கொவிட் – 19 தொற்று காரணமான இலங்கை மக்கள் முகக் கவசங்களை அணிவது சிறந்தது என்ற வித்தத்திலான அறிவிப்புகளும் சுகாதாரத்துறையினால் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கொவிட் வைரஸ் தொடர்பில் பகிரப்படும் தகவல்கள் உண்மையா?
Fact Check By: suji shabeedharanResult: Missing Context
