
INTRO
வரலாற்று சிறப்புமிக்க சிகிரியாவை இரவில் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை முன்னிட்டு கடந்த பௌர்ணமி தினம் முதல் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அன்றைய தினம் ஒளியேற்றப்பட்ட சிகிரியா குன்று என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை எம்மால் காண முடிந்தது.
எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
ஒளியேற்றப்பட்டது சிகிரியாவுக்கு
சிகிரியா, இலங்கை இப்போது நீங்கள் இரவிலும் சிகிரியாவை பார்த்து மகிழலாம் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.01.15 ஆம் திகதி குறித்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ளன.
மேலும் இது குறித்து உண்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த பெளர்ணமி தினத்திலிருந்து இரவில் சிகிரியாவைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஏதேனும் செய்திகள் அல்லது அது குறித்த புகைப்படங்கள் எதுவும் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவித செய்திகளும் வெளியாகவில்லை என உறுதியானது.
மேலும் தற்காலத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பெரும்பாலான புகைப்படங்கள், காணொளிகள் AI தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டு வெளியாகின்றமையால், இந்த ஒளியேற்றப்பட்ட சிகிரியா குன்றின் புகைப்படமும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவையா என்பது குறித்து நாம் ஆராய்ந்தோம்.
இதன் போது இந்த புகைப்படங்கள் உண்மையானவை அல்ல எனவும் இவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என எமக்கு உறுதியானது.
மேலும், இந்த புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியவர் தனது பேஸ்புக் கணக்கில் தான் இதனை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கியதாக தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தமையும் எமது ஆய்வில் கண்டறியப்பட்டது.
குறித்த நபரின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று ஆராய்ந்த போது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரால் உருவாக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களை எம்மால் காணமுடிந்தது. Link
இதேவேளை சிகிரியாவிற்கு அருகிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் அங்குள்ள பிரதேசவாசிகளிடம் இது குறித்து விசாரித்த போது குறித்த புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ளவாறு சிகிரியா குன்று இரவு நேரங்களில் ஒளியேற்றப்படவில்லை என்பதனை அவர்கள் எமக்கு உறுதி செய்தனர்.
மேலும் இரவில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிகிரியாவை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட செய்தியுடன் தொடர்புபடுத்தியே இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையினால் நாம் அந்த செய்திகள் குறித்த ஆராய்ந்தோம்.
பெளர்ணமி தினங்களை அண்மித்து சுற்றுலாப் பயணிகள் இரவில் சிகிரியாவைப் பார்வையிடலாமா?
வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குன்றை பௌர்ணமி இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்கள் ‘நிலவில் சிகிரியா’ என்ற வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது எனவும் அதன்படி, சுற்றுலாப் பயணிகள் பௌர்ணமி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், பௌர்ணமி தினத்தன்று மற்றும் அதற்கு 2 நாட்களுக்குப் பின் என சிகிரியாவை இரவு நேரத்தில் பார்வையிட முடியும் உனவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. Link1 | Link2
மத்திய கலாச்சார நிதியத்தின் மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளரிடன் இது குறித்து நாம் வினவினோம், இதன்போது அது தவறான தகவல் என்றும், அத்தகைய திட்டம் எதுவும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்றும் அதற்கான எந்தவிதமான ஆய்வுகளும் நடத்தப்படவில்லை எனவும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.
இதேவேளை சிகிரியாவை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து வைப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என தெரிவித்து புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தவறான புரிதலை ஏற்படுத்தும் பதிவுகளுக்கு அடிப்படையாக அமைந்த செய்திகள்
சுற்றுலா அமைச்சினால் வரலாற்று சிறப்பு மிக்க சிகிரியாவை நிலவு ஒளியில் பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்கள் ‘நிலவில் சிகிரியா’ என்ற வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது எனவும் அதன்படி, சுற்றுலாப் பயணிகள் பௌர்ணமி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், பௌர்ணமி தினத்தன்று மற்றும் அதற்கு 2 நாட்களுக்குப் பின் என சிகிரியாவை இரவு நேரத்தில் பார்வையிட முடியும் என்றும் சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவால் உலக பாரம்பரிய தளமாக நியமிக்கப்பட்ட சிகிரியா, இந்த நோக்கத்திற்காக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் குறித்த செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
இது குறித்த மேலதிக தெளிவினை பெறும் நோக்கில் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பௌர்ணமி தின நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு சிகிரியாவை இரவு வேளையில் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒளியேற்றப்பட்ட சிகிரியா குன்று என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் போலியானவை என்பதுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த புகைப்படங்கள் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகின்றது.
அத்துடன் பௌர்ணமி தினங்களில் இரவு வேளையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சிகிரியாவை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பான செய்திகள் தவறானவை என்பதுடன் அவ்வாறான எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின் மூலம் புலனாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பெளர்ணமி இரவில் ஒளிரும் சிகிரியா என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: suji shabeedharanResult: Misleading
