இலங்கையில் உருவான முதல் சூறாவளியா இது?

Misleading இலங்கை | Sri Lanka

INTRO

கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட வானிலை மாற்றங்களினால் பாரியளவிலான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட அதன் பின்னணியில் பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் இலங்கையில் உருவான முதல் சூறாவளி என குறிப்பிட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனவே குறித்த பதிவின் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விபரம் (what is the claim)

TikTok | Archived Link

குறித்த பதிவு, “இலங்கையில் முதன்முறையாக டொரன்டோ“ என்ற தலைப்பில் குறித்த காணொளி கடந்த 2024.11.26 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதன் உண்மைத் தன்மை அறியாது பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

Facebook Link | Archived Link

Fact Check (உண்மை அறிவோம்)

மேலும் குறித்த காணொளியின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில், இது குறித்த செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவித செய்திகளும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதனை உறுதி செய்தோம்.

இதேவேளை குறித்த காணொளியின் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலில் உட்படுத்திய போது 2022 ஆம் ஆண்டு யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த முகில் நீர்த்தாரைகளின் (Waterspout) காணொளி என்பதனை அறிந்துகொள்ள முடிந்தது.

மேலும் இந்த நிகழ்வை ஊடவியலாளர்கள் சிலர் அவர்களது  உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருந்தனர். எனினும் குறித்த காணொளியில் அவர்கள் இதனை டொரன்டோ என தவறாக குறிப்பிட்டிருந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

மேலும் 2022 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் சத்தங்கள் எதுவும் இருக்கவில்லை எனினும் தற்போது சமூக ஊடகங்களில் பரவும் கணொளியானது சத்தங்கள் உட்புகுத்தப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட காணொளியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமையையும் காணமுடிந்தது.

2022 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி

முகில் நீர்த்தாரை (waterspout) என்றால் என்ன? 

முகில் நீர்த்தாரை என்பது சுழல் காற்றின் போது கடல் அல்லது பரந்த நீர்ப்பரப்பின் மேற்பரப்பிலிருந்து செங்குத்தான ஆழ்ந்த தூண் போன்ற வடிவத்தில் வானை நோக்கி நீர் மேலெழும்பும் நிகழ்வு ஆகும். இந்த நீர்த்தாரைகளில் சில திரள்நெருக்க முகிலுடனும், சில திரள்வடிவ மேகத்துடனும், மேலும் சில திரள் கார்முகிலுடனும் தொடர்பு கொண்டிருக்கக்கூடும். 

பொதுவாக இவற்றை நீரின் மேல் சுழன்று மேலெழும்பும் சுழல் காற்று என வரையறுக்கலாம். மேலும் இதனை மேகத்தால் கடல் நீர் உறிஞ்சப்படுதல் என்று எளிதாகக் கூறலாம். Link

சூறாவளி என்றால் என்ன?

பூமியைப் போல் ஒரே திசையில் சுற்றும் அடர்த்தியான, உருண்டையான நிலையற்ற இயக்கத்தைக் கொண்ட பரப்பு என்று வானிலையியல் கூறுகிறது. மேலும் வானிலையியலானது சூறாவளியின் போது வட துருவத்தில் சுருண்டு ஏறுகின்ற காற்று இடஞ்சுழியிலும் தென் துருவத்தில் ஏறுகின்ற காற்று வலஞ்சுழியிலும் வீசும் என்று கூறுகிறது. Link 

இலங்கையின் வானிலை நிலைமையகள்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, நவம்பர் 28, 2024 அன்று இலங்கை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.

திருகோணமலைக்கு வடகிழக்கு மற்றும் முல்லைத்தீவிற்கு கிழக்கே அமைந்துள்ள இந்த அமைப்பு, இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகர்வதால் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளியாக மாறக்கூடும் என ஊகங்கள் இருந்தபோதிலும் அது குறித்த எந்தவொரு அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மேற்குறிப்பிட்ட காணொளியில் உள்ள நிகழ்வு முகில் நீர்த்தாரை என்பதுடன் அது சூறாவளி அல்ல என்பதுவும் உறுதியாகின்றது.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி பம்பலப்பிட்டியிலும் இது போன்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது. Link

மேலும் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற சூறாவளி தொடர்பில் வெளியான செய்தியை பார்வையிட

அத்துடன் இலங்கையில் இது போன்ற முகில் நீர்த்தாரைகள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன என்பதுவும் புலனாகின்றது.

வளிமண்டலவியல் நிபுணர்

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் வளிமண்டலவியல் நிபுணர் ஜானக குமாரகமகேயிடம் இது தொடர்பில் வினவியபோது, இலங்கை வரலாற்றில் சூறாவளிகள் ஏற்பட்டுள்ள போதிலும், அவை அரிதாகவே இடம்பெற்றுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார். அதேபோன்று கடலில் உருவாகும் சில சூறாவளி நிலைமைகள் முகில் நீர்த்தாரைகளாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் இது சூறாவளி அல்ல என தெரிவித்த அவர் இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருவதனையும் உறுதிப்படுத்தினார்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion:முடிவு

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த காணொயில் இடம்பெற்ற நிகழ்வு இலங்கையில் உருவான முதல் சூறாவளி அல்ல எனவும், அது 2022 ஆம் ஆண்டு யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் ஏற்பட்ட முகில் நீர்த்தாரை  என்பதுவும் தெளிவாகின்றது.

மேலும் 2022 ஆம் இடம்பெற்ற முகில் நீர்த்தாரை கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வானிலை மாற்றங்களுடன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளமையும் புலனாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கையில் உருவான முதல் சூறாவளியா இது?

Fact Check By: Suji Shabeedhran 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *