
சந்தையில் அரிசித் தடடுப்பாடு தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது QR முறையில் அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது.
எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)

குறித்த பதிவில் QR முறையில் அரிசி வழங்க திட்டம் குறிப்பிட்ட கடைகளில் மாத்திரம் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிழமைக்கு 5kg மட்டும் அரிசி வழங்குவதன் மூலம் அரசி தட்டுப்பாட்டை நிபர்த்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.01.25 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இந்த தகவலை பகிர்ந்துள்ளமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
![]() | ![]() |
![]() | ![]() |
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட QR முறையில் அரிசி வழங்க திட்டமிட்டுள்ளமை தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் முதலில் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவித செய்திகளும் ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.
நுகர்வோர் விவகார அதிகார சபை
மேற்குறிப்பிட்ட தகவல்களின் உண்மை அறியும் நோக்கில் நாம் இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது QR முறையில் அரிசி வழங்க திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானது என்பதுடன் அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
மேலும் இது தொடர்பில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க அவர்களிடம் வினவிய போது, அரிசி வழங்குவதற்கு எந்தவித QR முறைமையும் அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அவ்வாறான தீர்மானங்களை எடுப்பது குறித்தும் அரசாங்கத்தினால் கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் எமக்கு தெரிவித்தார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் வினவியபோது, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது எனவும் அரிசி வழங்குவதற்கு எந்விதமான QR முறைகளும் அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
சதொச விற்பனை நிலையம்
மேலும் நாம் இது குறித்து சதொச விற்பனை நிலையத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அரிசி விற்பனைக்கு எந்தவித QR முறைகளும் அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் நாடளாவிய ரீதியிலுள்ள சதோச விற்பனை நிலையங்களில் அனைத்து விதமான அரிசிகளையும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
அத்துடன் ஒருவருக்கு 5 கிலோ அரிசியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அரிசித் தட்டுபாடு தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி ஹொரணையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்
பெரும்போகத்துக்காக அரிசியின் கையிருப்புக்களை பராமரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், மீண்டும் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாதென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரிசி பிரச்சினை உள்ளதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும். தரவுகள் இன்மையே அரிசித் தடடுப்பாட்டிற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் எவ்வளவு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வளவு நுகரப்படுகிறது, எவ்வளவு பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது தொடர்பில் தரவுகள் இல்லை எனவும் நாட்டில் இனி ஒருபோதும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது என தான் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இந்த பெரும்போகத்தில் அரசாங்கத்திடமும் நெல் கையிருப்பை வைத்திருப்பதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நிர்ணய விலையை விட ஒரு ரூபாய் அதிகரித்து அரிசியை விற்பனை செய்ய இனி இடமளிக்க மாட்டோம் எனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்வையிட Link | Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் QR முறையில் அரிசி விநியோகிப்பதற்கு அரசாங்கத்தினால் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் சமூக ஊடகங்களில் அது தொடர்பில் பகிரப்பட்ட தகவல்கள் போலியானது என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:QR முறையில் அரிசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதா?
Fact Check By: Suji ShabeedharanResult: False
