
பூமியை நோக்கிப் பயணிக்கும் மர்மமான விண்பொருள் 3I/ATLAS என தெரவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
மர்மமான விண்பொருள் 3I/ATLAS
2025-ல் மனித இனம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும்! – இதுதான் பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்கா கொடுத்த அதிர்ச்சித் தகவல்.
இப்போது, மணிக்கு 1.3 லட்சம் மைல் வேகத்தில் பூமியை நோக்கிப் பயணிக்கும் மர்மமான விண்பொருள் 3I/ATLAS-ஐ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது உண்மையில் ஒரு வால்மீனா? அல்லது ஹார்வர்ட் பேராசிரியர் கூறுவது போல், இது ஒரு வேற்றுகிரக விண்கலமா? என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது 2025.10.31 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஜூலை முதலாம் திகதி சிலியில் உள்ள ஒரு தொலைநோக்கி மூலம் முதன்முதலில் கண்டறியப்பட்ட வால் நட்சத்திரத்திற்கு 3I/ATLAS என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது நமது சூரிய மண்டலத்திற்கு வெளியிலிருந்து வந்த மூன்றாவது பொருள் என்பது 24 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் அளவு 10 முதல் 20 கிலோமீட்டர் அகலம் கொண்டதாகவும், மணிக்கு 1,30,000 மைல் (60 கி.மீ/வினாடி) வேகத்தில் பயணிப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆனால் தற்போது அந்த வால் நட்சத்திரம் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் நாம் ஆய்வு செய்த போது, 3I/ATLAS தொடர்பில் ஆய்வை மேற்கொள்ளும் எந்தவொரு வானியல் ஆய்வு நிறுவனம் அல்லது அரச விஞ்ஞான அமைப்பின் ஊடாகவும் இந்த காணொளி வெளியிடப்படவில்லை என்பது உறுதியானது.
எனவே நாம் இந்த காணொளியின் காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலின் ஊடாக ஆய்வு செய்த போது Lead Stories இணையதளத்தில் இந்த காணொளி தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியாகியிருத்தமையை காணமுடிந்தது.
அதில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் Scripps Institution of Oceanography அமைப்பைத் தொடர்புகொண்டு அவர்கள் இது குறித்து வினவியதாகவும், இதன்போது குறித்த அமைப்பின் பேராசிரியரும் கடல் நுண்ணுயிரியல் நிபுணருமான ஜாக் ஏ. கில்பர்ட் (Jack A. Gilbert) மின்னஞ்சல் மூலம் விளக்கம் அளித்தார் எனவும் கூறப்பட்டிருந்தது.
அவர் அனுப்பிய மின்னஞ்சலில் “இது ஒரு பேரமீசியம் (Paramecium) ஆக இருக்கலாம் எனவும் இது நன்னீரில் வாழும் ஒற்றைச் செல் உயிரினம். இதைத் துல்லியமாக அடையாளம் காண, மேலும் ஒளி மாறுபாட்டுப் படங்கள் (phase contrast) மற்றும் அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான தகவல்கள் தேவைப்படும்.” எனவும் குறிப்பிட்டிருந்தார்
Jack A. Gilbert தற்போது சான் டியேகோ பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் துணைவேந்தராகவும், Applied Microbiology International அமைப்பின் தலைவராகவும் உள்ளார் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேற்குறிப்பிட்ட விதத்தில் குறித்த காணொளியில் இருப்பது Paramecium ஆக இருக்கலாம் என பேராசிரியர் Jack A. Gilbert வழங்கிய விளக்கத்திற்கு அமைய நாம் Paramecium பற்றிய தேடுதலை மேற்கொண்டோம்.
பேரமீசியம் (Paramecium) என்பது ஓரணுவுயிர் தொகுதியில் சாறு வாழ் உயிர்கள் வகுப்பைச் சார்ந்தத ஓர் உயிரினமாகும. சேற்றில் தோன்றி வாழும் இவ்வகை உயிர்கள், Infusoria என அழைக்கப்படுகின்றன. இது மிதியடி வடிவச் சிற்றுயிர் ஆகும். பெரும்பாலான நீர் நிலைகளில் காணப்படும் இது பல மீன்களுக்கு உணவாகி அவற்றை வாழ வைக்கிறது. பேரமீசியம் ஒரு மாதிரி விலங்காக பல ஆய்வுகளுக்கு ஆய்வகத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் வடிவம் தொடர்பில் ஆராயும் போது, பேரமீசியம் திட்டவட்டமான வடிவமைப்பைக் கொண்டது. குதியற்ற மிதியடியின் வடிவத்தைக் கொண்டுள்ள இது 0.25 மி.மீ வரை நீளமுடையது. இதனை வெறுங்கண்ணால் கூடப் பார்க்க முடியும். மினுமினுப்பான எண்ணற்ற நுண்மயிர்கள் இதன் உடலின் மேல் வளர்ந்துள்ளன. இதன் உடலின் முன்பாகம் குறுகியும் பின் பாகம் அகன்றும் காணப்படும். முன்பக்க நுனி அகன்றும் பின்பக்க நுனி கூர்மையாகவும் இருக்கும். பின்பக்க நுனியில் வால் போன்ற நீண்ட நுண்மயிர்கள் தோற்றமளிக்கும்.பின்னால் பெருகிய பல்லுயிரணு உயிர்களின் வால் அமைப்பிற்கான அடிப்படை ஓரணு உயிரான பேரமீசியத்தில் கணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.Link
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் விண்பொருள் என பகிரப்படும் பொருளின் தோற்றம் மற்றும் இந்த பேரமீசியம் உயிரினத்தின் தோற்றம் சற்று ஒன்றாக தென்பட்டாலும் அந்த காணொளியில் இருப்பது பேரமீசியம் என்பதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை.
எனவே நாம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி குறித்து தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், பிரபல தொழிலதிபர் மற்றும் SpaceX நிறுவனத் தலைவர் எலன் மஸ்க், சமீபத்தில் “OR IS IT” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள 3I/ATLAS எனப்படும் இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) வால் நட்சத்திரத்தை பற்றி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் இதை விண்வெளியிலிருந்து வரும் இயற்கை பொருளாகவே தான் கருதுவதாகவும், ஆனால் சமூக ஊடகங்களில் இது “வேற்றுகிரகவாசிகளின் கப்பல்” (Alien mothership) என தவறாக பகிரப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எல்லாவற்றையும் அமானுஷ்யமாக கருத வேண்டாம் எனவும் விஞ்ஞான விளக்கங்களை நம்புமாறும் அவர் அதில் தெரிவித்துள்ளார். அதே சமயம், வானியலாளர்கள் இந்த பொருள் நமது சூரிய குடும்பத்தின் வெளியிலிருந்து வந்தது என உறுதி செய்துள்ளனர் என்றும் அதில் எந்த வேற்றுகிரகவாசிகளின் தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த நேர்காணலில் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பிலும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

NASA இணையதளம்
நாம் இது குறித்து NASAவின் Comet 3I/ATLAS தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆராய்ந்த போது,
அதில், சூரியக் குடும்பத்தின் வழியாகச் செல்லும் இந்த அரிதான விண்வெளி இடைக்கோளப் புழுதியை (interstellar comet) கண்காணித்து ஆய்வு செய்ய, நாசாவின் பல்வேறு பணிக்குழாம் (missions) ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் NASA வெளியிட்ட 3I/ATLAS இன் புகைப்படங்களில், இந்த காணொளியில் காணப்படும் காட்சிகளை ஒத்த எந்தப் படங்களும் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
உண்மையான 3I/ATLAS படங்கள் எப்படி இருக்கின்றன?
NOIRLab (National Optical-Infrared Astronomy Research Laboratory) 2025 செப்டம்பர் 4 அன்று வெளியிட்ட புகைப்படம், உண்மையான 3I/ATLAS வால்நட்சத்திரத்தை தெளிவாகக் காட்டுகிறது.
அந்தப் படம் சிலியில் அமைந்துள்ள Gemini South Telescope மூலம் எடுக்கப்பட்டது. இதில் சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் அல்ட்ரா வைலட் வடிகட்டிகள் வழியாக எடுத்த நான்கு எக்ஸ்போஷர்களின் இணைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வால்நட்சத்திரம் தொலைநோக்கியின் பார்வை மையத்தில் நிலையாக இருக்கும் போது, பின்னணியில் உள்ள நட்சத்திரங்கள் நகர்வதால் அவை நீண்ட நிறமுள்ள கோடுகளாக (streaks) தோன்றுகின்றன என்று விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பூமியை நோக்கிப் பயணிக்கும் 3I/ATLAS விண்பொருள் என பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
குறிப்பு – நாசா இதுவரை வெளியிட்டுள்ள 3I/ATLAS இன் புகைப்படங்களில் மேற்குறிப்பிட்ட காணொளியில் காட்டப்பட்ட காட்சியுடன் ஒத்த புகைப்படங்கள் எதுவும் இல்லை என்பதுவும் உறுதியானது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:3I/ATLAS வால் நட்சத்திரத்தின் காணொளியா இது?
Fact Check By: Suji ShabeedhranResult: Misleading


