சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்த படங்கள்!

அறிவியல் இந்தியா சமூக ஊடகம்

நிலவில் சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி மற்றும் பெர்சிவரன்ஸ் ரோவர்கள் மற்றும் அவை தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்று சந்திரயான் 3 எடுத்த முதல் வீடியோ என்று பதிவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Karthikeyan Kuppuraj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 27ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மூலம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இஸ்ரோ தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. ஆனால், பழைய வீடியோக்கள் புகைப்படங்களை எல்லாம் சந்திரயான் 3 எடுத்தது என்று சமூக ஊடகங்களில் பதிவிடுவது தொடர்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தை ஆராய பெர்சிவரன்ஸ் என்ற ரோவரை நாசா அனுப்பியிருந்தது. அந்த நேரத்தில் அதற்கு முன்பு செவ்வாயை ஆராய அனுப்பப்பட்ட க்யூரியாசிட்டி ரோவர் எடுத்த வீடியோக்களை எல்லாம் பெர்சிவரன்ஸ் எடுத்தது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. அது தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது, அந்த வீடியோ உள்ளிட்ட சிலவற்றை சேர்த்த சந்திரயான் 3 எடுத்த வீடியோ என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள ரோவருக்கும் பிரக்யான் ரோவருக்கும் தொடர்பே இல்லை. இதை சமீபத்தில் இஸ்ரோ வெளியிட்டிருந்த பிரக்யான் ரோவர் வீடியோவை பார்ப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த வீடியோக்கள் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோக்கள் என்பது உண்மையில் புகைப்படங்கள்தான். நாசா வெளியிட்ட மிகப் பெரிய புகைப்படத்தை வீடியோவாக மாற்றி வெளியிட்டுள்ளனர். எனவே, உண்மையாக நாசா வெளியிட்ட புகைப்படங்களை தேடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோக்களின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: news.com.au I Archive

கடைசி வீடியோவானது பெர்சீவரன்ஸ் ரோவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் என்று 2022ம் ஆண்டில் செய்தி ஊடகங்கள் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: phys.org I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவில் கடைசியில் நாசா எடுத்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோக்கள் சந்திரயான் 3 எடுத்தது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் வீடியோக்கள் செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கியூரியாசிட்டி மற்றும் பெர்சிவரன்ஸ் எடுத்தவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்த படங்கள்!

Written By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *