INTRO :
உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுவதாக சில தகவல்கள் அடங்கிய பதிவொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ Please share 🙏 🙏 🙏
அன்பர்களே,‼️‼️‼️
தயவுசெய்து கவனமாக இருங்கள்.
📌👉தற்போது, சிம் ஸ்வாப் மோசடி எனப்படும் ஒரு உயர் தொழில்நுட்ப மோசடி செயலில் உள்ளது. பலர் ஏற்கனவே இதற்கு பலியாகிவிட்டதாகவும், அவர்களின் வங்கிக் கணக்குகள் காலியாகிவிட்டதை திடீரென்று கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எப்படி வேலை செய்கிறது?
1.
சிம் ஸ்வாப் எனப்படும் இந்தப் புதிய மோசடி இப்படித் தொடங்குகிறது: உங்கள் தொலைபேசி திடீரென்று சிக்னலை முற்றிலுமாக இழக்கிறது (சிக்னல் இல்லை / பூஜ்ஜிய பார்கள்) அதன் பிறகு, உங்களுக்கு அழைப்பு வருகிறது.
2.
அழைப்பவர் உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநரிடமிருந்து வந்தவர் போல் நடித்து, உங்கள் மொபைல் நெட்வொர்க்கில் சிக்கல் இருப்பதாகக் கூறுகிறார்.
3.
உங்கள் நெட்வொர்க்கை மீட்டெடுக்க, உங்கள் தொலைபேசியில் 1 ஐ அழுத்துமாறு அவர்கள் உங்களுக்கு அறிவுறுத்துவார்கள். தயவுசெய்து… இந்த கட்டத்தில் எதையும் அழுத்த வேண்டாம். அழைப்பை புறக்கணிக்கவும் அல்லது துண்டிக்கவும். நீங்கள் 1 ஐ அழுத்தினால், சிக்னல் திடீரென்று ஒரு கணம் திரும்பும், ஆனால் விரைவில் உங்கள் தொலைபேசி மீண்டும் காலியாகிவிடும் (பூஜ்ய பார்கள்), அந்த செயலால், உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டிருக்கும்.
4.
சில நொடிகளில், அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடுவார்கள் – எந்த எச்சரிக்கைகளும் அல்லது அறிவிப்புகளும் உங்களுக்கு அனுப்பப்படாமல். உங்கள் தொலைபேசி சிக்னலை இழந்தது போல் தோன்றும், ஆனால் உங்கள் சிம் மாற்றப்பட்டிருக்கும்.
இங்கே மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், நீங்கள் எந்த பரிவர்த்தனை எச்சரிக்கைகளையும் பெற மாட்டீர்கள்.
நாம் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையாக இருப்போம்.
இந்தத் தகவலை உங்கள் தொடர்புகள், அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த மோசடி ஒவ்வொரு நாளும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தப் பதிவு சைபர் செக்யூரிட்டி குரூப்பிலிருந்து பெறப்பட்டது. தயவுசெய்து இதைப் பகிர மறக்காதீர்கள். பலர் ஏற்கனவே பலியாகிவிட்டனர். இந்த மோசடியிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்ற உடனடியாகப் பகிரவும்! “என கடந்த மாதம் 28 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (28.07.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இதுஉண்மையெனநினைத்துபலர்பகிர்ந்திருந்தமையும்காணக்கிடைத்தது.
Fact Check (உண்மைஅறிவோம்)
முதலில், இந்த நாட்களில் சிம்-ஸ்வாப் (SIM SWAP) மோசடி நடப்பதாக ஏதேனும் செய்திகள் வந்துள்ளனவா என்று நாங்கள் ஆராய்ந்தோம். இலங்கை ஊடகங்கள் இதுபோன்ற எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பதைக் கண்டறிந்தோம்.
மேலும் இது குறித்து, சர்வதேச ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப வலைத்தளங்களில் செய்திகள் வந்துள்ளனவா என்று ஆராய்ந்தவேளையில், இந்த சிம்-ஸ்வாப் (SIM SWAP) மோசடி தொடர்பான அறிக்கைகளைக் கண்டறிந்தோம்.
சமூகவலைத்தளத்தில் பகிரப்படுகின்ற பதிவில் உள்ள தகவல்கள் சில காலமாக ஆங்கிலத்தில் சர்வதேச அளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் கண்டறிந்தோம். சிம்-ஸ்வாப் (SIM SWAP) மோசடி உண்மையிலேயே உலகளாவியதாக இருந்தாலும், இந்த சமூக ஊடகப் பதிவில் உள்ள தகவல்கள் தவறானவை என்று கூறும் பல ஆய்வறிக்கைகளும் எம்மால் காண முடிந்தது.
சிம்-ஸ்வாப்பைப் புரிந்து கொள்ள, உங்கள் மொபைல் போனில் சிம் கார்டு என்றால் என்ன என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
Subscriber Identification Module (SIM) என்பதன் சுருக்கம் தான் சிம். சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு என சிம் கார்டுக்கு தமிழ் அகராதி அர்த்தம் சொல்கிறது. சந்தாதாரர் அடையாள தொகுதி என்றும் அழைக்கப்படும் சிம் கார்டு என்பது ஒரு சிப்பைக் கொண்ட ஒரு சிறிய அட்டை. உங்கள் ஸ்மார்ட்போன் வேலை செய்ய, அதில் ஒரு சிம் கார்டைச் செருக வேண்டும். இது அழைப்புகளை மேற்கொள்ள அல்லது பெற மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்ப உங்களை அனுமதிக்கிறது.
உங்கள் தொலைபேசியில் உள்ள சிம் கார்டில் நிறைய தகவல்கள் உள்ளன. இதில் அழைப்புகளைச் செய்யவும் குறுஞ்செய்திகளை அனுப்பவும் உங்களுக்கு அனுமதி உள்ளதைக் காட்டும் தரவும் அடங்கும். சிம் கார்டு இல்லாமல், wifi நெட்வொர்க்குடன் இணைப்பதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தலாம், ஆனால் நீங்கள் தொலைபேசி அழைப்புகளைச் செய்ய முடியாது.
சிம்-ஸ்வாப் (SIM SWAP) மோசடி நடைப்பெறும் முறை
உங்கள் “கைப்பேசி சேவை வழங்குநர்” அல்லது “செல்லுலார் சேவை வழங்குநர்” நிறுவனத்தினை ஏமாற்றி, உங்கள் தொலைபேசி எண்ணை தங்கள் வசம் உள்ள சிம் கார்டுடன் இணைக்கச் சொல்லி, அதன் மூலம் உங்கள் தொலைபேசி எண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்போது சிம் ஸ்வாப் (SIM SWAP) மோசடி நிகழ்கிறது. குறித்த மோசடி நிகழ்வின் போது, மோசடி செய்பவர்கள் அடிப்படையில் உங்கள் மொபைல் எண்ணைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
உங்கள் எண்ணைத் திருட, மோசடி செய்பவர்கள் உங்களைப் பற்றி முடிந்தவரை தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, பின்னர் உங்கள் கைப்பேசி சேவை வழங்குநரை தொடர்புக்கொண்டு, உங்களைப் போல நடித்து, உங்கள் சிம் கார்டு தொலைந்துவிட்டதாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ கூறுகின்றனர். பின்னர் அவர்கள் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியிடம் தங்கள் வசம் உள்ள புதிய சிம் கார்டைச் செயல்படுத்தச் சொல்கிறார்கள். இது உங்கள் தொலைபேசி எண்ணை குற்றவாளியின் அல்லது மோசடி செய்பவரிடம் உள்ள சாதனத்தில் சேர்க்கிறது. அவர்கள் தங்கள் கோரிக்கையை முடித்தவுடன், உங்களுக்காக விதிக்கப்பட்ட அனைத்து தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் மோசடி செய்பவர் பயன்படுத்தும் சாதனத்திற்குச் செல்கின்றன. இதில், மோசடி செய்பவர் Two Fact Authentication (2FA) புறக்கணிக்கலாம் அல்லது உங்கள் சமூக ஊடக கணக்குகளை அணுகலாம் மற்றும் உங்கள் கடவுச்சொல்லை மாற்றலாம்.
2021 ஆம் ஆண்டில் சிம் ஸ்வாப் செய்ததாக 1,611 முறைப்பாடுகள் பெற்றதாக அமெரிக்காவில் உள்ள FBI நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் குற்றங்களால் ஏற்பட்ட இழப்புகள் $68 மில்லியனைத் தாண்டியுள்ளன. ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2020 வரை, FBI க்கு 320 சிம் பரிமாற்ற புகார்கள் மட்டுமே கிடைத்தன, மேலும் இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் $12 மில்லியன் இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Link
தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள், இந்த மோசடி மேற்கொள்ளப்படும் விதத்திலிருந்து வேறுபட்டுள்ளமை எம்மால் அவதானிக்க கிடைத்தது.
இது குறித்து இணைய பாதுகாப்பு நிபுணரான அசேல வைத்தியலங்காரவை நாம் தொடர்புக்கொண்டு பேசினோம்.
இலங்கையில் சிம் ஸ்வாப் மோசடி செய்வது மிககடினம் என்று அவர் கூறினார். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக (அப்போது போரின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக) செயல்படுத்தி வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த மோசடி செய்வது கடினம் என்று அவர் கூறினார்.
ஏனெனில் இலங்கையில் தொலைந்து போன அல்லது சேதமடைந்த சிம் கார்டுக்கு பதிலாக புதிய சிம் கார்டைப் பெற, தொலைபேசி சேவை வழங்குநரின் பிரதிநிதியிடம் சென்று குறித்த நபரின் அடையாளத்தினை உறுதி செய்யக்கூடிய ஆவணமாகிய தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரச அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து சிம் கார்டுகளும் ஏதேனும் ஒரு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் இந்த மோசடி குறித்து தனக்கு எந்த தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
e-Sim இல் சிம்-ஸ்வாப் மோசடியைச் செய்வதற்கான வாய்ப்புகள் ஏன் குறைவு?
eSIM என்பது உட்பொதிக்கப்பட்ட சிம் (Embedded SIM) என்பதன் சுருக்கமாகும். இது இயற்பியல் சிம் கார்டுக்கு பதிலாக, சாதனத்தில் உள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் டிஜிட்டல் சிம் ஆகும். இதன் மூலம், சிம் கார்டுகளை மாற்றாமலேயே வெவ்வேறு செல்லுலார் நெட்வொர்க்குகளுக்கு மாற முடியும்.
பொதுவாக, eSIM வழியாக எந்த மொபைல் நெட்வொர்க்கையும் செயல்படுத்த, நீங்கள் தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவலுடன் (Personal Identifiable Information (PII) ) பதிவு செய்ய வேண்டும். eSIM ஐப் பயன்படுத்தும் போது இயற்பியல் சிம் கார்டு இல்லாததால், சிம் கார்டு தொலைந்துவிட்டதாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ கூறி SIM-SWAP முறையை மோசடியாகப் பயன்படுத்த வாய்ப்பில்லை.
இதுபோன்ற SIM-SWAP மோசடிகளைத் தவிர்க்க பின்பற்றக்கூடிய பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தென்னாப்பிரிக்க பொலிஸ் பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தளும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுகின்றது என தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் பதிவானது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுவதாக என பகிரப்படும் தகவல் உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team