
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக தேவையான உணவுகளை வழங்கியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே இதன் உண்மை தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினான் பாரதியார்.
இஸ்ரேல் ஏவுகணை வீசி அப்பாவி மக்களை காஸாவில் கொன்று குவிப்பதோடு மட்டும் இல்லாமல் பாலஸ்தீனிய மக்களுக்கு வரக்கூடிய உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை சியோனிச படை தடைசெய்து வைத்திருக்கிறது.
இந்நிலையில் துணிச்சல் கொண்டு சீனா பாராசூட் மூலம் காஸா மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய செயல் உலகமே நன்றி பாராட்டக்கூடிய செயலாகும். என தெரிவித்து குறித்த காணொளி கடந்த 2025.05.18 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Fact Check (உண்மை அறிவோம்)
அண்மையில் போரினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக உணவு வழங்கியமை தொடர்பில் ஏதேனும் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் முதலில் ஆராய்ந்தபோது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
எனவே குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போரினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா வான்வழியாக உணவு வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட செய்தியை எம்மால் காணமுடிந்தது. Link
அந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா வான்வழியாக காஸா மக்களுக்கு உணவு வழங்கியதை காட்டும் காணொளி பின்வருமாறு
https://www.youtube.com/watch?v=URwWY1tOUMw
மேலும் கடந்த ஆண்டு china daily இணையதளத்திலும் காஸா மக்களுக்கு அமெரிக்கா வான்வழி மூலம் உணவு வழங்கியமை தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதில் அமெரிக்க மற்றும் ஜோர்தான் விமானப்படைகளின் விமானங்கள் கடற்கரையோரத்தில் 38,000 க்கும் மேற்பட்ட உணவுப் பொதிகளை வீசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இரு நாடுகளும் தொடர்ந்து வான்வழி உதவி விநியோகப் பணிகளுக்கான திட்டமிடலை மேற்கொண்டு வருவதாகவும், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சீனாவினால் வான்வழி மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக தற்போது பகிரப்படும் காணொளி தொடர்பில் சர்வதேச உண்மைக் கண்டறியும் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளையும் காணமுடிந்தது. Link | Link
காஸாவிற்கு சீனா வழங்கிய உதவிகள்
கடந்த பெப்ரவரி மாதம் (2025.02.18) காஸா பகுதிக்கு அவசர உதவியாக சீன அரசாங்கம் 60,000 உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.
இந்தப் பொதிகள் ஜோர்தானில் இருந்து தரைவழியாக கொண்டு செல்லப்பட்டு ஜோர்தான் ஹாஷிமைட் தொண்டு நிறுவனத்தால் (Jordan Hashemite Charity Organization) ஆறு தொகுதிகளாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
12,000 பொதி கொண்ட முதல் தொகுதி கடந்த பெப்ரவரி மாதம் ஜோர்தானில் இருந்து புறப்பட்டு, உலக உணவுத் திட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பிறகு அந்த பொதிகள் பாலஸ்தீன Red Crescent Society ஆல் காஸா மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. Link
எனினும் இந்த அறிக்கைளின்படி காஸா மக்களுக்கு சீனா தரைவழியாக மாத்திரமே உதவிகளை வழங்கியுள்ளமை தெரியவந்தது. இருப்பினும் இந்த உதவிகள் வான்வழியாக வழங்கப்பட்டமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா வான்வழியாக உணவுப் பொதிகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் காணொளியானது, கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் அமெரிக்கா வான்வழியாக காஸா மக்களுக்கு உணவுப்பொதிகளை வழங்கியபோது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
மேலும் போரினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு சீனா கடந்த பெப்ரவரி மாதம் உணவுப்பொதிகளை வழங்கிய போதிலும் அவை தரை வழியாகவே கொண்டு செல்லப்பட்டு விநிகோகிக்கப்பட்டுள்ளன. தவிர சீனாவின் உதவிகள் வான்வழியாக காஸா மக்களுக்கு வழங்கப்பட்டமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
