நுகேகொடை பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்களின் புகைப்படங்களா இவை?

Misleading அரசியல்

அரசியல் ரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை வழங்கும் நோக்கில் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவது தற்போது பொதுவான ஒரு செயலாகவே மாறிவருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.

அந்தவகையில் தற்போது 21 ஆம் திகதி  நுகேகொடையில் எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள் என தெரிவிக்கப்பட்டு சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.

எனவே அது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archive Link

குறித்த பதிவில் இலங்கையில்  இன்றைய அரச  நுகேகொட பேரணி! என தெரிவிக்கப்பட்டு 2025.11.21 ஆம் திகதி இந்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலரும் இந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் 21 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற பேரணியின் போது எடுப்பட்டவை என தெரிவித்து பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பாடு செய்திருந்த   முதல் பொதுப் பேரணி நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணி, ‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் தற்போதைய அரசுக்கு எதிராக நடைபெற்றது.

மேற்குறிப்பிட்ட புகைப்படங்களை நாம் ஆராயும் போது அதில்  புற்கட்டொன்று காணப்படும் புகைப்படமானது 21 ஆம் திகதி பேரணியை எதிர்த்து நாட்டின் சில இடங்களில் இவ்வாறான புற்கட்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தமையை ஊடக செய்திகளிலும் காணமுடிந்தது. எனவே அந்த புகைப்படமும் அவ்வாறான ஒரு புகைப்படம் என்பதனை அறிய முடிந்தது.

இருப்பினும் 21 ஆம் திகதி இடம்பெற்ற பேரணியை குறிப்பிட்டு பகிரப்படும் மேற்கண்ட மதுபான போத்தல்களின் புகைப்படங்கள், பிரதான ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்படவில்லை .

எனவே நாம் இந்த புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

இதன்போது இந்த புகைப்படங்கள் 2022 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என கூறப்படும் வெள்ளை நிற ப்ராடோ ஜீப் ஒன்றை போராட்டக்காரர்கள் நிறுத்தி சேதப்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும். அதில் குறித்த வாகனத்தில் உள்ளே மதுபான போத்தல் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் பின்வருமாறு


X

Facebook | Archived Link

அதற்கமைய இந்த புகைப்படங்கள் நுகேகொடை பேரணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற அரசிற்கு எதிரான பேரணி
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம்  நடத்தப்படுகின்றது என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், அரசின் ஜனநாயக விரோதச் செயல், அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டணைந்து ‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் அரசுக்கு எதிராகப் பேரணியை நடத்தினாலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.

மலையகத்திலுள்ள பிரதான இரு கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் இந்தப் பேரணியில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

விமல் வீரசன்ச, சம்பிக்க ரணவக்க, திலீத் ஜயவீர உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்கமாட்டார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளும், அவற்றுக்குச் சார்பான அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மாத்திரமே இதில் பங்கேற்கவுள்ளன. 

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற பேரணியின் புகைப்படங்கள் என பகிரப்படும் மதுபான போத்தல்களின் புகைப்படங்கள் 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:நுகேகொடை பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்களின் புகைப்படங்களா இவை?

Fact Check By: Suji shabeedharan  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *