
நாடு பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிவாரணப்பொருட்களை வழங்குவதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

AKD யும் களத்திலாம்!!! இலங்கையில் எந்த ஜனாதிபதியும் இதுவரை இப்படி இறங்கியதில்லையாம் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் 2025.11.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன் உண்மை அறியாத பலர் கமென்ட செய்திருந்ததுடன் இந்த புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நுவரெலியா, பதுளை, மாத்தளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்ததுடன் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிப்படைந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இது தொடர்பான செய்திகள் அனைத்து பிரதான ஊடகங்களிலும் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது. Link | Link | Link
எனினும் ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் காணொளியோ அல்லது புகைப்படங்களோ எந்த பிரதான ஊடகங்களிலும் வெளியாகவில்லை என்பதனை எமது ஆய்வுகளின் மூலம் அறிய முடிந்தது.
எனவே நாம் குறித்த புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தபோது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் கடந்த 2016 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததனை காணமுடிந்தது.
அந்த பதிவில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடுவலை மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கிய சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலத்திலேயே மக்கள் விடுதலை முன்னணியினர் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரண உதவிகளை வழங்கியுள்ளமை தெளிவாகின்றது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
எனினும் இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் குறித்த புகைப்படங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு வினவியிருந்தோம் இதன்போது, இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கடுவலை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக ஜனாதிபதி, பல பிரதேசங்களுக்கு தற்போது கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு வந்தாலும் எந்த பகுதிகளிலும் அவரினால் மேற்குறிப்பிட்ட விதத்திலான நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் தற்போது நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நிவாரணப் பொருட்களை வழங்குவதாக பகிரப்பட்ட புகைப்படங்கள் தவறானது என்பதுடன் அவை ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக பகிரப்படும் பழைய புகைப்படங்கள்!
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


