
கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை இலங்கை கடைப்படையினர் மீட்டதாக தெரிவிக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகளை வெற்றிகரமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படையினர் என தெரிவித்து குறித்த காணொளியானது 2025.11.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே காணொளி இன்ஸ்டகிராமிலும் பகிரப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட விடயமானது கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்ட அந்த சந்தர்ப்பத்திலேயே மக்களை காப்பாற்றுவதனைப் போல இலங்கை இராணுவமானது விலங்குகளையும் காப்பாற்றுகின்றது என அந்த அனர்த்தங்களுடன் தொடர்புபடுத்தியே இந்த காணொளியானது பெரும்பாலும் பகிரப்பட்டிருந்தது.
எனவே நாம் அன்மையில் அனர்த்தங்களின் போது இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகளை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியதாக தெரிவித்து ஏதேனும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருகோணமலை கடலில் இரண்டு யானைகள் அடித்துச் செல்லப்பட்ட போது அவற்றை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்ட செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தன.Link
குறித்த செய்தியில் திருகோணமலை, கெவுலியாதுடுவ பகுதியில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு காட்டு யானைகளை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீட்டுள்ளனர் என்றும் கடற்படையினரின் தீவிர முயற்சியால், யானைகள் கடற்கரைக்குத் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது The Hindu பத்திரிகையின் Youtube பக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் திகதி குறித்த காணொளி வெளியாகியிருந்தமையையும் காணமுடிந்தது.
மேலும் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகளை கடற்படையினர் மீட்ட, குறித்த காணொளியானது இலங்கை கடற்படையின் Youtube பக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர்
மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் சம்பத் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம.
இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறித்த சம்பவமானது 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றது எனவும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது இவ்வாறாறு கடலில் இடித்துச்செல்லப்பட்ட யானைகளை மீட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை கடற்படையினர் மீட்கும் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், ஒன்று திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடற்பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகள் மீட்கப்பட்டதாகவும், மற்றையது நாயாறு பகுதியில் கடலில் அடித்துச்செல்லப்பட்ட யானையொன்று மீட்கப்பட்ட சம்பவம் எனவும் குறிப்பிட்டார்.
அந்த சம்பவங்களின் பின்னர் கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை இலங்கை கடற்படையினர் மீட்ட சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
மேலும் நாம் இது தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு கேட்டறிந்த போது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறித்த காணொளி அண்மையில் இடம்பெற்ற சம்பவம் அல்ல எனவும் அது 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் என்பதனையும் அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
திருகோணமலை கடற்பரப்பில் யானைகள் அடித்துச் செல்லப்படுவதற்கான காரணம் என்ன?
இவ்வாறு திருகோணமலை கடற்பகுதியில் யானைகள் அடித்துச் செல்லப்படுவதற்கான காரணம் தொடர்பிலும் நாம் இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் சம்பத் அவர்களிடம் கேட்டறிந்தோம். இதன்போது திருகோணமலை துறைமுக பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்குள் “Elephant Point” என்ற ஒரு பிரதேசம் காணப்படுவதாகவும் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் யானை தீவு என்ற பிரதேசமும் காணப்படுகின்றது, எனவும் இந்த பகுதிகளின் ஊடாக யானைகள் பயணிப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் குறிப்பாக யானைகள் எவ்வாறு கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது என்பதற்கான காரணம் சரியாக தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த “Elephant Point” என்ற இடம் கடற்படை முகாமிற்குள் அமைந்திருந்தாலும் முகாமிற்குள் யானைகள் இல்லை எனவும் அது முகாமை சுற்றிய பகுதி என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் யானைகள் கூடுதலாக இருக்கும் குறித்த பகுதிகளுக்கிடையில் யானை நடமாட்டங்கள் அதிகளவில் காணப்பட்டாலும், அடித்துச் செல்லப்பட்டமைக்கான சரியான காரணங்கள் என்ன என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின் தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகளை இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக மீட்டதாக பகிரப்படும் காணொளியானது அண்மையில் இடம்பெற்ற சம்பவம் அல்ல என்பதுடன் அது 2017 ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுக கடற்பகுதியில் யானைகள் அடித்துச் செல்லப்பட்ட போது கடற்படையினரால் குறித்த யானைகள் மீட்டகப்பட்டப் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
மேலும் இதுபோன்று கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள் மீட்கப்பட்ட சம்பவங்கள் எதுவும் அண்மையில் பதிவாகவில்லை என்பதனை இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை கடற்படை மீட்டதாக பகிரப்படும் பழைய காணொளி!
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


