கடந்த 15 ஆம் திகதி பாகிஸ்தானில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் உயிழந்ததோடு அதிகளவான பொருட் சேதங்களும் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
(#இறைவன்) #இயற்கை அதன் சக்தியில் ஈடு இணையற்றது. மனிதன் எவ்வளவு #அறிவைப் பெற்றிருந்தாலும், எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தாலும், இயற்கையின் ஒரு சிறிய தளம்பலுக்கு முன்னால் அவன் இன்னும் உதவியற்றவனாகவே இருக்கிறான். ஒரு புயலின் ஒரு பார்வை, ஒரு பூகம்பத்தின் ஒரு அதிர்வு, ஒரு சில மழைத்துளிகள் அல்லது
சூரிய ஒளியின் ஒரு கதிர் மனிதனின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.08.17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த காணொளியின் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
உண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்த காணொளி எடுக்கப்பட்டிருக்குமாயின் அது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
மேலும் இந்த காணொளியை நன்கு அவதானித்த போது, அது வெவ்வேறு காட்சிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான காணொளி என்பதனை காணமுடிந்தது.
எனவே நாம் அதில் இணைக்கப்பட்ட காணொளிகளின் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன் போது அதன் முதலாவது காணொளியானது ஆகஸ்ட் முதலாம் திகதி ரஷ்யாவின் டைர்னியாஸ் பகுதியில் பயங்கர மண்சரிவின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.Link
அத்துடன் அந்த காணொளியில் இணைக்கப்பட்டிருந்த இரண்டாவது காணொளியானது 2023 ஆம் வடக்கு ஆர்ஜென்டினாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒரு பெரிய சேற்று அலை ஒரு பாலத்தை முழுவதுமாக அடித்துச் செல்லும் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது. Link
அதில் இணைக்கப்பட்ட மூன்றாவது காணொளியானது இந்த வருடம் ஆகஸ்ட் 12 ஆம் திகதி அமெரிக்காவின் சட்டனூகா பகுதியில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் நீரில் அடித்துச்செல்லும் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அறியமுடிந்தது.
இதேவேளை குறித்த காணொளியில் நான்காவதாக இணைக்கப்பட்டுள்ள காட்சி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது இந்த காணொளியானது ஜுன் மாதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் உண்மையில் எங்கு இடமபெற்றது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
எவ்வாறாயினும் இது பாகிஸ்தானில் இடம்பெற்ற வெள்ளத்தின போது எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பது கண்டறியப்பட்டது. காரணம் பாகிஸ்தானில் இம்மாதம் 15 ஆம் திகதியே வெள்ள ஏற்பட்டது ஆனால் குறித்த காணொளியானது ஜுன் மாதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜுன் மாதம் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை எனவே குறித்த காணொளி பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பது உறுதியானது.
மேலும் குறித்த காணொளியில் இணைக்கப்பட்டுள்ள அடுத்த காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அந்த காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது கண்டறியப்பட்டது.
அத்துடன் குறித்த காணொளியானது மே மாதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது. Link
அடுத்த காணொளியானது நேபாள் நாட்டின் தமகோஷி நதியில் 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது. Link
மற்ற காணொளி தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது கடந்த 2021 ஆம் ஆண்டுஆகஸ்ட் 7 ஆம் திகதியன்று வெப்பமண்டல புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் தைவானின் காஹ்சியுங் நகரில் உள்ள ஒரு பாலம் இடிந்து வீழ்ந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.Link
அடுத்தாக இணைக்கப்பட்டிருந்த காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இடம்பெற்ற பாரிய வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது உறுதியானது. Link
மற்ற காணொளியானது 2021 ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் திகதி மத்திய ஜப்பானில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
பல சர்வதேச ஊடகங்களிலும் இந்த காணொளியானது அந்த காலப்பகுதியில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இணைக்கப்பட்ட காணொளியும் 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது உறுதியானது.Link
மற்றைய காணொளி தொடர்பில் ஆராயும் போது அந்த காணொளியானது 2023 ஆம் ஆண்டு நோர்வேயில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் வீடொன்று அடித்துச்செல்லும் காட்சி என்பது கண்டறியப்பட்டது.
மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் இறுதியாக இணைக்கப்பட்ட காணொளி தொடர்பில் நாம் ஆய்வு செய்த போது, அந்த காணொளியானது கடந்த மே மாதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது எனினும் இந்த அனர்த்தம் எங்கு இடம்பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. Link
எவ்வாறாயினும் அந்த காணொளியானது பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பது தெளிவாகின்றது. காரணம் பாகிஸ்தானில் கடந்த 15 ஆம் திகதியே வெள்ளம் எற்பட்டது ஆனால் இந்த காணொளி அதற்கு முன்னர் இணையத்தில் பதிவேற்றம் வெய்யப்பட்டுள்ளது.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த 15 ஆம் திகதி பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளியானது போலியானது என்பதுடன் அது வெவ்வேறு காலப்பகுதிகளின் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
