குருணாகல் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியிலிருந்து கடந்த 17 ஆம் திகதி மீட்கப்பட்ட சிசுவின் தற்போதைய நிலை என தெரிவித்த மேலும் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
பரகஹதெனிய கைவிடப்பட்ட குழைந்தையின் அழகிய தோற்றம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.07.22) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாய் தூக்கி எறிந்து விட்டு சென்ற நிலையில் தாதியர்கள் தாயைப்போல் பராமரிக்கும் குழந்தை பரகஹதெனிய
சிங்கபுர வீதி வயல் வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளியானது கடந்த 2025.07.21 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அந்த காணொளிகள் தொடர்பான உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் இந்த காணொளிகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் காணொளிகளின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது முதலாவது காணொளியானது the child doc என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் கடந்த 2025.05.11 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
மேலும் குறித்த காணொளியில் குழந்தைக்கு பால் கொடுக்கும் வைத்தியரின், இன்ஸ்டகிராம் பக்கத்திலேயே இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று மேற்குறிப்பிட்ட வைத்தியரின் காணொளி இந்தியாவில் இடம்பெற்றம் சம்பவம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எனவே குருணாகலில் வயல் வெளியில் கடந்த 2025.07.17 ஆம் திகதியே சிசு கண்டெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது தொடர்பில் பகிரப்படும் இந்த காணொளி இணையத்தில் கடந்த 2025.05.11 பதிவேற்றம் செய்யப்பட்ட ஒன்றாகும். ஆகவே இந்த காணொளி குருணாகலில் மீட்கப்பட்ட சிசுவின் காணொளி அல்ல என்பது தெளிவாகின்றது.
அத்துடன் இரண்டாவது காணொளியானது இரு வெவ்வேறு சம்பவங்கின் காட்சிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட காணொளி என்பதனை அறிய முடிந்தது.
அதில் முதலாவது காணொளி தொடர்பில் ஆராய்ந்த போது அது இலங்கை வைத்தியசாலை ஒன்றில் எடுக்கப்பட்ட காணொளி என்பதுடன் அதில் குடும்ப நல உத்தியோகத்தர் ஒருவர் குழந்தைக்கான பணிவிடைகளை செய்வதனையே காட்டியது. மேலும் அந்த காணொளியில் சிங்களத்தில் இருந்த கமென்ட்டில்“ 6ஆம் இலக்க வார்ட்டில் உள்ள இந்த மிஸ் மிகவும் நல்லவர்“ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் எந்த வைத்தியசாலை என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
எனவே நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது பேஸ்புக் பக்கமொன்றில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் எந்த விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே குறித்த காணொளியில் இருந்த கமெண்ட்களை பார்த்த போது அதில் குறித்த சம்பவம் கொழும்பு காசல் வைத்தியசாலையில் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்ட கமென்ட்களையும் காணமுடிந்து.
ஆனாலும் குறித்த காணொளியில் முதலில் இருந்த காட்சியின் சம்பவம் குருணாகல் வைத்தியசாலையில் இடம்பெற்றமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
நாம் மேலும் குறித்த காணொளி தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் போது, கடந்த 12 ஆம் திகதி Jayani Edirisinghe என்ற டிக்டொக் கணக்கில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் அந்த காணொளியில் இரண்டாவதாக இணைக்கப்பட்ட காட்சி தொடர்பில் ஆராய்ந்த போது, born cute babies என்ற யூடியுப் பக்கத்தில் இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
அந்த பக்கத்தில் இவ்வாறான பல காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த குழந்தை குருணாகல் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது எனவே நாம் குறித்த காணொளியில் உள்ள வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் தொடர்பில் ஆராய்ந்த போது அது ஒரு தனியார் வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அறிமுடிந்தது.
குருணாகல் போதனா வைத்தியசாலை
எனவே இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்வதற்காக நாம் குருணாகல் வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவியபோது, அந்த குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும், குழந்தை தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குவதற்கு தமக்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டனர்.
அதேநேரம் வைத்தியசாலையினால் குழந்தை தொடர்பில் எந்த காணொளிகளையும் எடுப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும், சமூக ஊடகங்களில் குழந்தையின் காணொளி என பகிரப்படுபவை போலியானவை எனவும் குறிப்பிட்டனர்.
மாவத்தகம பொலிஸார்
வயல் வெளியிலிருந்து சிசுவை மீட்ட மாவத்தகம் பொலிஸாரிடம் நாம் இது குறித்து வினவிய போது, குறித்த குழந்தை என தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகளை நாமும் அவதானித்தோம் எனினும் அவை குறித்த குழந்தையினுடையது அல்ல எனவும் அவை போலியானவை எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் குழந்தையின் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுப்பதற்கு அனுமதி மறுகப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் குழந்தையின் தாய் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அந்த குழந்தை கைவிடப்பட்டப்பட்ட வயல் வெளிக்கு அருகிலுள்ள சிசிடிவிகளை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் மாவத்தகம பொலிஸார் குறிப்பிட்டனர்.எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok | YouTube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் குருணாகலில் வயல் வெளியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தற்போதைய காணொளி என பகிரப்படும் காணொளிகள் அந்த சிசுவின் காணொளிகள் அல்ல என்பது கண்டறிப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:குருணாகல் வயலில் கண்டெடுக்கப்பட்ட சிசு என பகிரப்படும் மேலும் சில காணொளிகள்!
Fact Check By: Suji ShabeedharanResult: False
