
எஹலியகொட பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒரு வீதி தொடர்பாக சமீப நாட்களில் சமூகத்தில் கடும் விவாதம் உருவாகியுள்ளது. அந்தச் வீதியின் வடிகால் (கால்வாய்) அமைப்பு, வீதியை விட உயரமான மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் அபிவிருத்தி என்பது கண்ணுக்கு தெரியக்கூடிய கான்கிரீட் கட்டுமானம் அல்ல.
அது மக்கள் பாதுகாப்பு, நீண்டகால நிலைத்தன்மை, சரியான தொழில்நுட்ப வடிவமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
வடிகால் அமைப்பு வீதியின் பாதுகாப்பை பாதிக்கும் விதமாக அல்லது எதிர்காலத்தில் நிலச்சரிவு, நீர் தேக்கம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும் விதத்தில் அமைக்கப்பட்டால், அது அபிவிருத்தி அல்ல.
அது பொது நிதியின் தவறான பயன்பாடே.
உண்மையான அபிவிருத்தி என்றால், தொழில்நுட்ப நிபுணர்களின் மேற்பார்வையுடன், நில அமைப்பை கருத்தில் கொண்டு, மக்கள் நலனையும் பாதுகாப்பையும் முதன்மைப்படுத்தி செய்யப்படும் பணியே ஆகும்.
இதற்கு யார் பொறுப்பு?
இந்த வடிகால் வடிவமைப்பை ஒப்புதல் அளித்த தொழில்நுட்ப அதிகாரி யார்?
மண் தன்மை, நீர் ஓட்டம், நிலச்சரிவு அபாயம் குறித்து முன் ஆய்வு செய்யப்பட்டதா?
இந்தத் திட்டத்திற்கான தொழில்நுட்ப வரைபடங்கள் (Drawings) மற்றும் BOQ எங்கு?
இது பொது வேலைகள் திணைக்களத்தின் தர நெறிமுறைகளுக்கு உட்பட்டதா?
தொழில்நுட்ப மேற்பார்வை இல்லாமல் பணிகள் நடைபெற அனுமதி அளித்தது யார்?
ஒப்பந்தக்காரர் திட்டப்படி வேலை செய்தாரா, அல்லது மாற்றம் செய்தாரா?
மாற்றம் செய்திருந்தால் அதற்கு எழுத்துப்பூர்வ அனுமதி கொடுத்தது யார்?
பணி நிறைவு சான்றிதழ் (Completion Certificate) யார் வழங்கினார்?
பொது நிதி செலவீனத்தின் மதிப்பு பெறப்பட்ட விளைவு பொருந்துகிறதா?
எதிர்காலத்தில் இந்தப் பாதை சேதமடைந்தால் அதன் பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்?
மக்கள் பாதுகாப்பு பாதிக்கப்படும்போது, பொறுப்பை தள்ளிவிடப் போவது யார்?
இந்தப் பணியில் அரசியல் தலையீடு இருந்ததா? இருந்தால் யார் செய்தது?
கிராம மக்கள் கருத்து கேட்கப்பட்டதா, அல்லது மேலிருந்து திணிக்கப்பட்டதா?
இதுபோன்ற பணிகள் முன்பும் நடந்துள்ளனவா?
அவற்றின் நிலை என்ன?
இது அபிவிருத்தியா, அல்லது புகைப்படத்திற்கான ஒரு ‘ஷோ’ திட்டமா?
என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.01.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட புகைப்படம் தொடர்பில் நாம் ஆராயும் போது, சிங்கள மொழியில் பேஸ்புக்கில் பரவி வரும் அந்தப் புகைப்படம், அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக தெளிவாகக் காட்டப்படுவதனை அவதானிக்க முடிந்தது.

எனவே முதற்கட்டமாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கை நாம் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அதன்படி, சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தப் புகைப்படம் உட்பட, தொடர்புடைய வீதி அபிவிருத்தி குறித்து விளக்கமளிக்கும் மேலும் சில புகைப்படங்கள், கடந்த ஜனவரி 12ஆம் திகதி அமைச்சரின் கணக்கில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அமைச்சரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், “தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் எஹலியகொட – கீனகஹவெல – கனுக்கல்ல வீதியை ஆய்வு செய்வதற்காக, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, கடந்த 10ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.Facebook | Archived
எனினும், அந்தப் பதிவின் Edit History-யை ஆய்வு செய்தபோது, அபிவிருத்திசெய்யப்பட்ட குறித்த வீதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதில் குறிப்பாக ஒரு புகைப்படத்தை,பார்த்தவுடனேயே வடிகால் (கால்வாய்) அமைப்பு வீதியின் மட்டத்தை விட உயரமாக அமைந்துள்ளதைக் காண முடிந்தது.
இதன் காரணமாக, வீதியின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வடிகால் அமைப்புகள் வழியாக நீர் வெளியேறுவதற்குப் பதிலாக, அதே வழியாக மீண்டும் வீதிக்குள் நீர் திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் தெரிவித்து, அந்த நிர்மாணப் பணியை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பல பதிவுகள் பகிரப்பட்டிருந்தன.
இருப்பினும், தொடர்புடைய புகைப்படங்களை ஆய்வு செய்தபோது, அந்தச் வீதியின் அபிவிருத்திப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகக் காண முடியவில்லை. மாறாக, சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதை அவற்றில் இருந்து உறுதிப்படுத்த முடிகிறது.
கீழே காட்டப்படுவது, சம்பந்தப்பட்ட புகைப்படங்களை மீண்டும் திருத்தி, “தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் வீதி” என குறிப்பிடும் வகையில், அமைச்சரின் பேஸ்புக் பதிவை புதுப்பித்திருந்த விதமாகும்.

பொதுவாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த வடிகால் (கால்வாய்) அமைப்புகள் நிறுவப்படும் போது, பொறியாளர்களின் திட்டமிடலின் அடிப்படையில் இத்தகைய நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, உண்மையில் இந்தச் வீதி வடிவமைப்பில் ஏதேனும் தொழில்நுட்பப் பிழை ஏற்பட்டதா, அல்லது சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படப் பதிவுகள் உருவாகக் காரணமான விடயம் என்ன என்பதைக் கண்டறிவதற்காக, சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நுணுக்கமாகவும் பெரிதாக்கியும் ஆய்வு செய்தோம்.
வைரலாக பரவி வரும் புகைப்படத்தை பெரிதாக்கி நுணுக்கமாக ஆய்வு செய்த போது,
ஆய்வின் போது, அந்த வளைவு பகுதியின் அருகே, வீதி மட்டத்துடன் இணையாகவும், வீதியை விடக் கீழ்மட்டத்திலும் வடிகால் (கால்வாய்) அமைக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.

மேலும், அந்த புகைப்படத்தை கூடுதல் நுணுக்கத்துடன் Zoom செய்து ஆய்வு செய்த போது, வீதி மற்றும் வடிகால் (கால்வாய்) ஒரே மட்டத்தில் அமைந்திருப்பதை காண முடிந்தது. கீழே, வைரலான புகைப்படத்தை 300% பெரிதாக்கி எடுத்த பகுதி காட்டப்பட்டுள்ளது.

எனினும், புகைப்படத்தில் தெளிவாகக் காணப்படும் வகையில், வீதியின் முடிவு பகுதிக்கும், வடிகால் (கால்வாய்) ஆரம்பிக்கும் இடத்திற்கும் இடையில் குறிப்பிடத்தக்க உயர வேறுபாடு காணப்படுகிறது. எனவே, இந்தச் வீதியின் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முடிக்கப்படாத நிலையில் இருப்பதால், இதைப் பற்றி நாம் தொடர்ந்தும் ஆய்வு செய்தோம்.
எஹலியகொட, கீனகஹவெல பிராந்திய ஊடகவியலாளர்
எஹலியகொட, கீனகஹவெல, கனுக்கல்லச் வீதியின் உண்மையான நிலை தொடர்பில் ஆராய, எமது பிராந்திய ஊடகவியலாளர், ஜனவரி 16 ஆம் திகதி அந்த இடத்திற்கு சென்று வீடியோ ஆதாரங்களை பதிவுசெய்திருந்தார்.
அந்த ஆய்வில், வீதியின் இருபுறங்களிலும் உள்ள வடிகால் (கால்வாய்) அமைப்புகள் இன்னும் அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதும், வீதியின் முடிவு பகுதியும், வடிகால் ஆரம்பிக்கும் இடத்திற்கும் இடையே மணல் நிரப்பப்பட்ட பகுதிகள் உள்ளமையும் கண்டறியப்பட்டது.
மணல் நிரப்பப்பட்ட பகுதிகளில், வீதி மட்டமும் வடிகால் (கால்வாய்) உயரமும் பெரும்பாலும் ஒரே மட்டத்தில் இருப்பதை காண முடிந்தது.

சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படத்தில் காணப்படும் இடத்தின் காட்சி மற்றும் எமது ஆய்வு
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் வீதி மற்றும் வடிகால் (கால்வாய்) அமைக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையில் உள்ள இடைவெளியானது, ஜனவரி 16 ஆம் திகதி ஆய்வின் போது மணல் நிரப்பி மூடிய நிலையில் காணப்பட்டது.

பிரதேச மக்களின் கருத்து
நாம் இது குறித்து பிரதேச மக்களிடம் வினவியபோது, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் வடிகால் (கால்வாய்) வீதி மட்டத்திற்கு மேல் இருப்பதாக தெரிந்திருந்தாலும், உண்மையில் வீதியின் இருபுறங்களிலும் வடிகால் கீழ்மட்டத்தில் அமைந்துள்ளது எனவும், முன்பு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த வீதி இப்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் வருகை தந்த போது வீதி பணிகள் முடிக்கப்பட்டிருந்தாலும், வடிகால் அமைக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இரத்தினபுரி வீதி அபிவிருத்தி அதிகார சபை – பொறியியலாளர்
சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்களில், வடிகால் (கால்வாய்) அமைப்புகள் வீதிக்கு மேல் இருப்பதாகத் தெரிந்தாலும், இது புகைப்படம் எடுக்கப்பட்ட கோணத்தால் ஏற்பட்ட காட்சியோயாகும். உண்மையில், வடிகால்கள் வீதியின் மட்டத்திற்கு கீழ்மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இது வீதி அபிவிருத்தி அதிகாரா சபையின் பொறியியலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் கண்காணிப்பில் நடக்கின்ற பணியாகும்.
வீதி நிர்மாணம் மழைநீர் வேகமாக வீதியில் இருந்து வெளியேறும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, புகைப்படத்தில் தோன்றும் கோணத்தின் காரணமாக தவறான கருத்து உருவாகியுள்ளது. இப்படி பணி தவறாக செய்யப்படவில்லை என்பதும், அமைச்சர் வருகைக்கு முன்னர் வீதியின் பணிகள் நிறைவடைந்திருந்தாலும், வடிகால் அமைக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
கீனகஹவெல–கனுக்கல்ல வீதிக்கு, கொங்கிரீட் இடும் பணி தித்வா சூறாவளிக்கு முன் முடிக்கப்பட்டிருந்தது. பின்னர், சூறாவளியால் பெரும் வெள்ள நீர் அந்த வீதிக்குள் வந்தது. இதற்கிடையில் வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து ஒரு பகுதியை எடுத்து வடிகால் அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுவாக, வீதி மற்றும் வடிகால் அமைப்புகளை நிர்மாணிக்கும் போது முதலில் வடிகால் அமைப்பை நிறுவிய பின்னர் வீதியை அமைப்பதுவே வழக்கம். ஆனால் இம்முறை, வடிகால் அமைப்பிற்கான திட்டமிடல் இல்லாமலிருந்ததால், வெள்ளப்பெருக்கு சாலைக்கு சேதம் ஏற்படாதபடி பாதுகாப்பு நடவடிக்கையாக வடிகால் அதன் பின்னர் நிறுவப்பட்டது.
இந்த வீதி, வடிகால் அமைப்புடன் சேர்த்து, சுமார் இரண்டு வாரங்களில் முழுமையாக நிறைவடையும் என்றும், இது ஒரு வழி வீதியாக முக்கியமான வீதி என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், பொறியாளர்கள் உறுதிப்படுத்தியதாவது, வீதியில் தற்செயலாக மணல் நிரப்பும் நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை; வடிகால் கீழ்மட்டத்தில் அமைந்திருப்பதால் இதற்கான அவசியமே இல்லை. சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் தவறாக உருவாக்கப்பட்டவை, எனவும் இந்த பாதையை நேரில் வந்து பார்த்தால் அதனை அறிந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டனர்.
சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்கள் பரவுவதால், இந்த வீதி மற்றும் வடிகால் அமைப்புகளைப் பற்றி அவர்கள் வழங்கிய விளக்கம்.
அதில் மேலும் குறிப்பிடப்படுவது, வீதி மற்றும் வடிகால் (கால்வாய்) இடையிலுள்ள பக்கப்பகுதிகள் (shoulders) மணல் நிரப்பி மூடியிருந்தால், தவறான கருத்து உருவாகுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், வடிகால் வீதியின் மட்டத்தைவிட கீழ்மட்டத்தில் அமைந்துள்ளது என்பதும் ஆகும்.
இந்தச் வீதி தொடங்கும் இடம் Google Maps மூலம் இங்கே காணலாம்
இந்தச் வீதி அபிவிருத்திக்கு முன்காணப்பட்ட நிலை குறித்து, சில புகைப்படங்களை பொறியாளர்கள் எங்களுக்கு வழங்கியிருந்தனர்.

வடிகால் (கால்வாய்) அமைப்புடன் கூடிய வீதி புகைப்படம் எடுக்கும் போது காணப்படும் விதம்
இவர் எங்களுக்கு வழங்கிய மற்றொரு புகைப்படம், இலங்கையில் வேறு ஒரு வீதி நிர்மாண பணியின் போது எடுக்கப்பட்டதாகும். அந்த புகைப்படத்திலும், எடுத்த கோணத்தின் காரணமாக, சாலை மற்றும் வடிகால் (கால்வாய்) இடையிலுள்ள பகுதியை மணல் நிரப்புவதற்கு முன், வடிகால் மேல்மட்டத்தில் இருப்பதாக தோன்றுகிறது.

எஹலியகொட் பிரதேச சபை தலைவர்
சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறிய கீனகஹவெல சாலை குறித்து புகைப்படத்துடன் விளக்கமளித்த எஹெலியகொட பிரதேச சபையின் தலைவர் பந்துசேன துனுவில, அந்த வீதியின் நிர்மானப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று கூறினார்.
இது இடைநிறுத்தப்பட்ட ஒரு திட்டம் எனவும், வீதி கட்டுமானங்களின் போது பெரிய கல் ஒன்றை அகற்ற வேண்டியிருந்தது எனவும், அந்தக் கல்லை அகற்றுவதற்கு பிரதேச மக்கள் தன்னார்வமாக உதவியதால், அதற்காக ஒதுக்கிய 50 இலட்சம் ரூபா அளவிலான தொகை எஞ்சியதாகவும் பிரதேச சபை தலைவர் குறிப்பிட்டார்.
இதன்படி ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு பகுதி மீதமுள்ளதாகவும், அதனை பயன்படுத்தி வடிகால் அமைப்பை கட்டலாம் என ஒப்பந்ததாரர் பரிந்துரைத்துள்ளதாகவும், அதன்படி இந்த வடிகால் அமைப்பின் கட்டுமான பணிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.
வீதியின் நடுப்பகுதியில் இருந்து பார்க்கும் போது, வடிகால் அமைப்பு சுமார் 1½ அடி கீழ்மட்டத்தில் அமைந்துள்ளது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
ஒரு வாரத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன், வீதி மற்றும் வடிகால் அமைப்பின் அமைப்பு தெளிவாகத் தெரியும் என்றும் பிரதேச சபைத் தலைவர் கூறினார்.
ருவன்சிறி விமலரத்ன – எஹலியகொட பிரதேச சபை உறுப்பினர்
வீதியின் நிலையை ஆய்வு செய்வதற்காக நாம் அந்த இடத்திற்குச் சென்றபோது, அந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர், கட்டுமானம் குறித்து தனது கருத்துக்களை எமக்கு தெரிவித்தார். பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் இன்னும் கட்டுமானத்தில் உள்ள வீதியின் மட்டத்தை விட வடிகால் அமைப்பு உயரமாக இருப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை என குறிப்பிட்டார்.
மேலும், வீதியின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த வீதி அபிவிருத்திக்கான மதிப்பீட்டில் வடிகால் அமைப்பை நிர்மாணிப்பது சேர்க்கப்படவில்லை என்றாலும், நிதியில் சேமிப்பு காரணமாக வடிகால் அமைப்பை நிர்மாணிப்பது கூடுதல் பணியாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் எஹலியகொட பகுதியில் தற்போது அபிவிருத்திசெய்யப்பட்டு வரும் வீதியை விட வடிகால் அமைப்பு உயரமாக இருப்பதாக தெரிவித்து பகிரப்படும் புகைப்படம் தவறானது என்பதுடன், மேலும் குறித்த வீதியின் கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கு முன்பே அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதுடன், புகைப்படம் எடுக்கப்பட்ட கோணத்தின் அடிப்படையிலேயே, வீதியின் இருபுறமும் வடிகால்களின் தோற்றம் உயர்வாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது.
வீதி மற்றும் வடிகால் ஆகியவற்றை நெருக்கமாக காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும், கட்டுமானப் பணிகளுக்கு பொறுப்பான பொறியியலாளர் அளித்த விளக்கத்தையும் ஆராய்ந்ததில், வடிகால் அமைப்பு வீதியின் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் இந்த வகையில் கட்டுமானத்தில் உள்ள வேறு வீதிகளின் நிலையை ஆராயும்போதும் இது உறுதிப்படுத்தப்படுகின்றது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
xa
Title:வீதியை விட உயர்வாக அமைக்கப்பட்ட கால்வாய் – எஹலியகொடா, கீனகஹவெல வீதியின் உண்மை நிலை!
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


