
கடந்த நாட்களில் இலங்கையை தாக்கிய தித்வா புயல் காரணமாக அதிகளவான மக்கள் உயிரிழந்ததுடன் பலர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர். அதேபோன்று பல பிரதேசங்களில் வீதிகள், பாலங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் இவ்வாறு சேதமடைந்த பாலங்களை மீண்டும் நிறுவுவதற்காக 110 அடி நீளமுள்ள பாலங்கள் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு காணொளி மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படும் 110 அடி நீளமுள்ள 10 பாலங்கள்..! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது இன்று (2025.12.05) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அனர்த்தத்திற்குப் பின்னர் நாடு முழுவதும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்காக இந்தியாவில் இருந்து பேலி பாலத்தின் (Bailey Bridge) பாகங்கங்ள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன என பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன, ஆனால் மேற்குறிப்பிட்டதன் படி அந்த பாலங்கள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதனை காட்டும் காணொளிகள் எதையும் இதுவரை பிரதான ஊடகங்களில் காணமுடியவில்லை.
அனர்த்தத்திற்குப் பின்னரான நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக அரசு ஆரம்பித்துள்ள திட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக, பேலி பாலத்தின் பாகங்களை ஏற்றிய, சிறப்பு நிபுணர் குழுவுடன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-17 விமானம் நேற்று (04) மதியம் இலங்கையை வந்தடைந்தது.
மேலும், இந்த விமானம் கொண்டு வந்த பேலி பாலத்தின் பாகங்கள் செயற்பாட்டு தேவைகளுக்கேற்ப பயன்படுத்தக்கூடியவை என்றும், பாலங்கள் அமைப்பதற்குத் தேவையான பொருட்கள் மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அமைக்கக்கூடிய 110 அடி நீளமுள்ள இரு வழி பேலி பால அமைப்பும் இதில் அடங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விமானம் மூலம் பேலி பாலத்தின் பாகங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், மேலே உள்ள காணொளயில் காட்டப்பட்ட விதத்தில் பாலங்கள் கொண்டுவரப்படவில்லை. மாறாக C-17 விமானத்தின் உள்ளே பாலங்களை அமைப்பதற்கு தேவையான பொருட்களே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்பதனை அறியமுடிகின்றது.
விமானத்திற்குள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பாலங்களின் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த விதத்தை காட்டும் படங்கள் பின்வருமாறு

இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் படங்களுடனான பதிவொன்றை தமது பேஸ்புக் பக்கதில் வெளியிட்டிருந்தது. அதன் மூலம் இந்த தகவலானது மேலும் உறுதியாகின்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்
இது தொடர்பில் நாம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொண்டு வினவியபோது, தற்போது இரண்டு C-17 விமானங்களின் மூலம் சுமார் 130 டன் பேலி பாலத்திற்கான பாகங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு விமானம் வருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தற்போது நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள பாலத்தின் பாகங்கள் 230 அடி நீளம் அளவிலான பாலத்தை உருவாக்கும் அளவுக்கு உள்ளன என்றும், அவை அதிகளவில் நாட்டில் சேதமடைந்த பாலங்களைச் சீரமைப்பதற்குப் பயன்படுத்தப்படுமெனவும் தெளிவுப்படுத்தினர்.
அதாவது, செயல்பாட்டு தேவைகளுக்கு ஏற்ப 10 அடி நீளப் பாலங்களை அமைக்க வேண்டுமெனில், இதுவரை வந்துள்ள பாகங்களால் 10-ஐ விட கூடுதல் பாலங்கள் அமைக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், 65 டன் எடையுடைய இதேபோன்ற பேலி பாலத்திற்கான பாகங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
விமானப் படையின் ஊடகப் பணிப்பாளர்
இது குறித்த மேலதிக தகவல்களை உறுதிப்படுத்த விமானப்படை ஊடக பணிப்பாளர் குரூப் கேப்டன் எரந்த கீகனகேவை நாம் தொடர்புகொண்டு வினவினோம், இதன்போது இந்தியாவிலிருந்து பாலங்கள் பெறப்பட்டுள்ளன என்பது உண்மைதான் என்றாலும், மேலே உள்ள புகைப்படம் தவறானது என்று அவர் கூறினார். இந்திய இராணுவத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு ஏற்கனவே இரணவில பாலம் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை நடத்தியுள்ளதாகவும், இவ்வாறு கொண்டு வரப்பட்ட பாகங்களை கொண்டு பாலங்களை புதுப்பிப்பதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர்
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் உண்மை எனினும், அதில் வெளியிடப்பட்டுள்ள காணொளி தவறானது என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் எஸ். ஜோசப் தெரிவித்தார்.
Boeing CH-47 Chinook
மேலே சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டுள்ள புகைப்படத்தில் Boeing CH-47 Chinook ஹெலிகாப்டர் காட்டப்பட்டுள்ளது. இந்த Chinook ஹெலிகாப்டர், அதன் வெளிப்புற sling-load அமைப்பைப் பயன்படுத்தி, 10 – 12 டன் வரை பொருட்களை தாங்கி கொண்டு செல்லக் கூடியதாக வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதிரி பாலத்தின் பாகங்கள் போன்ற பொருட்களை ஹெலிகாப்டர்கள் மூலம் ஏற்றிப் போக முடியும், மேலும் Chinook ஹெலிகாப்டரின் இரட்டை ரொட்டர் வடிவமைப்பும், மூன்று சக்கர நிலைத்தன்மை அமைப்பும் பெரிய நீளமான அல்லது கனமான பொருட்களை பாதுகாப்புடன் ஏற்றிச் செல்ல அனுமதிக்கிறது.
எனினும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தது C-17 Globemaster விமானம் என்பதானல், இது 77 டன் வரை பொருட்களை ஏற்றிச் செல்லக் கூடிய தாங்கும் திறன் கொண்ட பெரிய சரக்கு விமானமாகும். C-17 மூலம் பயணிப்பது வெளிநாட்டிற்கு இன்ஜினியரிங் உபகரணங்களை அனுப்புவதற்கான நிலையான மற்றும் வேகமான முறையாகும்.
போக்குவரத்து அமைச்சு
இது தொடர்பில் நாம் போக்குவரத்து அமைச்சை தொடர்புகொண்டு வினவியபோது, நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களினால் நாடு முழுவதும் சேதமடைந்துள்ள பாலங்களை மீண்டும் புனரமைப்பதற்காக மொத்தமாக 1500 அடி நீள Bailey பாலங்களின் அமைப்பு தேவைப்படுகின்றது எனவும் அதில் தற்போது அரசாங்கத்தின் வசம் 400 அடி நீள பால அமைப்பு இருப்பதாகவும் மிகுதியை வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்கு எதிர்பார்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அதன் முதற்கட்டமாக இந்தியாவிலிருந்து தற்போது 110 அடி நீள Bailey பாலங்களின் அமைப்பு கிடைத்துள்ளதாகவும் மிகுதி அமைப்புகள் பாகிஸ்தான், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதுமட்டுமன்றி இந்த பாலங்கள் தற்காலிகமானவை எனவும் நிரந்தரமான பாலங்களை அமைக்கும் வரை போக்குவரத்தை மேற்கொள்வதற்காக இந்த பாலங்கள் தற்காலிகமாகவே பயன்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
அதேபோன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்கள் உண்மை எனினும் அதுதொடர்பில் தற்போது பகிரப்படும் குறித்த காணொளி போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த காணொளியை நன்கு அவதானிக்கு போது அதில் veo என்ற செயற்கை நுண்ணறிவு செயலியின் water mark காணப்படுவதனை அவதானிக்க முடிந்தது.

எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இயற்கை அனர்த்தத்தினால் இலங்கையில் சேதமைடைந்த பாலங்களை புனரமைப்பு செய்வதற்காக இந்தியாவில் இருந்து பேலி பாலங்களுக்கான பாகங்கள் கொண்டுவரப்பட்டமை உண்மை எனினும் அது குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் பாலம் கொண்டுவரப்பட்ட காணொளியா இது?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


