
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று (2025.02.04) இடம்பெற்றது. அதனை முன்னிட்டு பல்வேறு விதமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
அந்தவகையில் இலங்கையில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவருக்கு அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு மாத்திரமே அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக குறித்த யூடியூபரினால் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காணொளியில் அவர் தெரிவித்த விடயம் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த காணொளியில் தான் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை வைத்திருந்த போதிலும் தனக்கு சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும், எந்த தனியார் ஊடகங்களுக்கும் இங்கே வீடியோ எடுக்க அனுமதி இல்லை எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவிற்கு மாத்திரமே சுதந்திர தின நிகழ்வை வீடியோ எடுப்பதற்கான அனுமதி உள்ளதாக தன்னிடம் கூறப்பட்டதாக தெரிவித்து நேற்று (2025.02.04) ஆம் திகதி குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் நாம் ஆய்வில் ஈடுபட்டபோது பல ஊடகவியலாளர்கள் இது தவறான தகவல் என தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதுடன் பலர் அவரின் காணொளியில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தவறு என தெரிவித்து கமெண்ட் செய்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் குறித்த நிகழ்வில் பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவர் இன்றைய சுதந்திர தின நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தமை மகிழ்ச்சி என தெரிவித்து சில புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
மேலும் இது குறித்து நேற்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் சிலரிடம் வினவியபோது, அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு முன்கூட்டியே பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து ஊடகவியலாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் இதன்போது ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து அவர்களின் செயற்பாடுகளை மேற்கொவதற்கான பூரண அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை 77 ஆவது சுதந்திர நிகழ்வின் ஊடக அறிக்கையிடலானது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஒருங்கிணைப்பு செய்யப்படுவதாகவும்இ சுதந்திர தின நிகழ்வின் ஊடக அறிக்கையிடலை மேற்கொள்ளும் ஊடக நிறுவனங்கள் அதில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள்இ ஒளிப்பதிவாளர்கள்இ புகைப்படக் கலைஞர்களின் பெயர்களை 2025.01.30 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவித்து அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடக நிறுவனங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க தகவல் திணைக்களம்
மேலும் இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோதுஇ இம்முறை 77 ஆவது சுதந்திர தின நிகழ்வின் அறிக்கையிடலை மேற்கொள்ள அரச மற்றும் தனியார் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் சுதந்திர தின நிகழ்வின் அறிக்கையிடலை மேற்கொள்ளும் ஊடக நிறுவனங்கள் அதற்காக தங்கள் நிறுவனத்தில் இருந்து அனுப்பும் ஊடகவியலாளர்கள்இ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் பெயர் விபரங்களை முன்கூட்டியே தகவல் திணைக்களத்திற்கு அறிவித்து அதற்கான அனுமதியை பெற வேண்டும் எனவும் அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்ற கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த யூடியூபர் அதற்கான அனுமதியை அரசாங்க தகவல் திணைக்களத்திடம் முன்கூட்டியே பெற்றாரா என நாம் வினவிய போது, அவ்வாறான எந்தவொரு கோரிக்கைகளும் தமக்கு வரவில்லை எனவும் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்கூட்டியு அனுமதி பெற்ற ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலில் அவரின் பெயர் இல்லை என்பதனையும் அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
அத்துடன் சுதந்திர தின நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு மாத்திரமே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தகவல் தவறானது என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஜனாதிபதி ஊடக பிரிவு
இதேவேளை குறித்த தகவல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு தொடர்பு கொண்டு நாம் வினவினோம், இதன்போது குறித்த யூடியூபர் தெரிவித்த விடயம் தவறானது எனவும் முன்கூட்டியே அனுமதி பெற்ற ஊடகவியலாளர்களுக்கு இந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு மாத்திரமே சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தகவல் தவறானது எனவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
மேலும் இம்முறை சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அமைச்சர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் நேற்று (2025.02.04) 77ஆவது சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கு தனியார் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை எனவும் அதற்கான அனுமதி ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக குறித்த யூடியூபர் தெரிவித்த விடயம் தவறானது என்பதுடன் இம்முறை சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய முன்கூட்டியே பெயர் விபரங்களை அறிவித்து அனுமதிப்பெற்ற அனைத்து ஊடகவியலாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமையும் தெளிவாகின்றது.
அத்துடன் குறித்த யூடியூபர் சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதியை முன்கூட்டியே பெறவில்லை என்பது அரசாங்க தகவல் திணைக்களத்தின் கூற்றின் படி புலனாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:77ஆவது சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?
Fact Check By: Suji ShabeedharanResult: Misleading
