சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழைபெய்து வருகிறது. அந்தவகையில் தற்போது கொத்மலை – பூண்டுலோயா வீதியில், கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
கொத்மலை – பூண்டுலோயா வீதியில் கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படம் இன்று 2025.06.11 சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
மேலும் இந்த புகைப்படமானது கல்கொரிய பகுதியில் மண்சரிவு இடமபெற்ற போது எடுக்கப்பட்ட படம் என எண்ணி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே நாம் முதலில் இது குறித்த செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது கொத்மலை – பூண்டுலோயா வீதியில் கல்கொரிய பகுதியில் மண்சரிவு இடம்பெற்றமை தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது. Link | Link
எனினும் குறித்த செய்திகளில் வெளியாகியிருந்த மண்சரிவு இடம்பெற்ற இடத்தின் புகைப்படமும், சமூக ஊடகப்பதிவில் பகிரப்பட்ட புகைப்படமும் இருவேறு புகைப்படங்கள் என்பதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
சமூக ஊடகப்பதிவில் பகிரப்பட்ட புகைப்படம் | ஊடக செய்திகளில் வெளியான புகைப்படம் |
மேலும் நாம் இது குறித்து ஆய்வு செய்த போது மலையகம்.lk பேஸ்புக் பக்கத்தில் மண்சரிவு இடம்பெற்ற இடத்தின் தற்போதைய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எனவே நாம் குறித்த சமூக ஊடகப்பதிவில் பகிரப்பட்டிருந்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தியபோது, 2022 ஆம் ஆண்டு ஒஸ்டோரியா நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவை தொடர்ந்து அந்த பகுதியின் போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படம் வெளியாகியிருந்தது. Link | Link
பிராந்திய ஊடகவியலாளர்கள்
இது தொடர்பில் கொத்மலை பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, பூண்டுலோயா – கண்டி பிரதான வீதியில் கல்கொரிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அவ்வழி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியின் போக்குவரத்தை சீர்செய்யும் வரையில் சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
மேலும் விபத்து இடம்பெற்ற பகுதியின் புகைப்படம் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படமானது மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பூண்டுலோயா பொலிஸ் நிலையம்
நாம் விபத்து தொடர்பில் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு வினவியபோது, கண்டி – பூண்டுலோயா பிரதான வீதியில் கல்கொரிய எனும் பகுதியில் சீரற்ற காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வீதியில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதுவரை சாரதிகள் மாற்று வழியில் பயணிக்குமாறு கேட்டுககொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கண்டி – பூண்டுலோயா பிரதான வீதியில், கல்கொரிய பகுதியில் மண்சரிவு இடம்பெற்றமை உண்மை எனினும் அது தொடர்பில் பகிரப்படும் புகைப்படமானது 2022 ஆம் ஆண்டு ஒஸ்டோரியாவில் இடம்பெற்ற மண்சரிவின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கொத்மலை – பூண்டுலோயா வீதியில் இடம்பெற்ற மண்சரிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?
Fact Check By: suji shabeedharanResult: Missing Context
