சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பான உண்மை நிலை என்ன?

Insight சர்வதேசம் | International

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் தற்போது சமூகத்தில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது. 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் சீனாவில் தோற்றம் பெற்ற கொவிட் – 19 வைரஸ் போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் என்ற விதத்திலான பல தகவல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அடுத்தே இலங்கையிலும் இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 

இதன் பின்னணியில் சீனாவில் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ் என்ற தலைப்பில் குறித்த பதிவு கடந்த 2025.01.03 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததனை  எம்மால் அவதானிக்க முடிந்தது.

மேலும் குறித்த வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகளில் சில பின்வருமாறு\

மேற்குறிப்பிட்ட பதிவுகளில் இந்த வைரஸ் தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் பகிரப்பட்டுள்ளதுடன், அதன் காரணமாக கொரோனா தொற்றை போன்ற தாக்கங்கள் இந்த வைரஸ் மூலமும் ஏற்படும் என்ற அச்சத்தில் பலர் உள்ளதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

தெளிவுபடுத்தல் (Explanation)

சீனாவில் புதிதாக பரவும் இந்த வைரஸ் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. Link | Link 

குறித்த செய்திகளில் கொவிட் – 19 தொற்று ஏற்பட்டு 5 வருடங்களின் பின்னர் தற்போது சீனாவில் மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாகவும் Human metapneumovirus (HMVP) எனப்படும் குறித்த வைரஸ் பரவலை அடுத்து சீனாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் வைரஸ் பரவலால் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்துள்ளதாகவும் HMPV, இன்ஃப்ளூயன்ஸா A, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொவிட்-19 போன்ற பல வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாகவும் சில செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Link

இதேவேளை உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, சீனாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கொரோனா உள்ளிட்ட பல வைரஸ்களைக் கலந்து உருவாக்கப்பட்ட புதிய வைரஸ்  இது என்ற அச்சம் நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ள சில அறிக்கையிடல்களையும் காணமுடிந்தது. Link

சீனாவில் பரவும் இந்த வைரஸின் தற்போதைய நிலை என்ன?

சீனாவில் தற்போது Human metapneumovirus (HMPV) தொற்று அதிகரித்து வருவதாக சர்வதேச  ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இந்த வைரஸ் தாக்கத்தினால் சீனாவின் வைத்தியசாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், இதனோடு இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட்- 19 வைரஸ்கள் பரவுவதாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டாலும், HMPV காரணமாக  குறிப்பாக 40 முதல் 80 வயதுடையவர்களிடையே இறப்புகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

எனினும் இந்த வைரஸ் பரவலை அடுத்து இதுவரை சீன சுகாதார அதிகாரிகளோ அல்லது உலக சுகாதார ஸ்தாபனமோ (WHO) இது ஒரு தொற்றுநோய் என்றோ அல்லது இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கவில்லை என்று சில சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. Link 

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் மாவோ நிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர் காலநிலையுடன் இந்த வகையான வைரஸ் பரவுவது இயல்பானது என்றும்,  இதன்படி, சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும், எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டினரின் சுகாதார நிலை குறித்து உறுதியளிக்க முடியும் எனவும், சீனாவிற்கு பயணம் செய்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான தேசிய நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு  சீனாவின் வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் மாவோ நிங்,  சீன பிரஜைகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். Link | Link 

சீனாவில் தற்போது பரவிவரும் HMPV வைரஸ் உலகளாவிய ரீதியில் ஆபத்தை ஏற்படுத்துமா?

HMPV வைரஸ் நிலைமை சீனாவில் மட்டும் உருவான ஒன்றல்ல. Creative Diagnostics இனால்  வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளிலும் இந்த வைரஸ் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமைப்பு (CDC) HMPV வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் 11% அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹோலன்ட் விஞ்ஞானிகள் இதனை  20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்திருந்தாலும் தற்போதைய ஆராய்ச்சியில் இந்த HMPV வைரஸானது  50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளவில் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு முதன்மைக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்த வைரஸ் தொடர்பான அவசரநிலையை அறிவிக்கவில்லை அத்துடன் சீனாவில் இந்த வைரஸ் நிலைமை  ஒரு தொற்றுநோயாக அதிகரித்துள்ளது என்பதற்கான எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், தொற்றுநோய்களின் அதிகரிப்பு உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ​​HMPV வைரஸின் பரவலானது COVID-19 தொற்று போன்ற சூழ்நிலையை பிரதிபலிக்கவில்லை எனினும் இது உலகளாவிய சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒன்றாகவே அமைந்துள்ளது. Link

Human Metapneumovirus (HMPV) என்றால் என்ன? – அதன் நோய் அறிகுறிகள்

Human Metapneumovirus என்பது சுவாசக்கோளாறை தூண்டும் ஒருவகை வைரஸ் ஆகும். இது பெரும்பாலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்ட நபர்களை பாதிக்கிறது.

முதன்முதல் இந்த வைரஸ் 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது. கொரோனா போன்றே இதுவும் ஒரு RNA வகையை சார்ந்த வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கலாம். இதன் காரணமாக, நோயாளிக்கு காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

நோய் பாதிப்பு அதிகரித்தால், இந்த வைரஸால் மூச்சுக்குழாய் பாதிப்பு அல்லது நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

இந்த வைரஸ் பொதுவாக மூன்று முதல் ஆறு நாட்கள் வரை உடலில் இருக்கும். அத்துடன் இதன் நோய் தாக்கத்தை பொறுத்தே இந்த வைரஸ் உடலில் தங்கியிருக்கும் நாட்களின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் ஏற்படலாம்.

Human Metapneumovirus மற்றும் கொவிட்-19 இரண்டும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்ட சுவாச நோய்கள். HMPV ஐ தடுப்பதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை, மேலும் HMPV ஒரு பருவகால வைரஸ் ஆகும்.

HMPV ஒரு ஆபத்தான வைரஸா?

HMPV வைரஸானது ஒரு சாதாரண வைரஸாகவே அடையாளப்படுத்தப்பட்டாலும், அதன் ஆரம்பகால அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் சளி ஆகும். மேலும் தொடர்ந்து இருமல், தும்மல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் இருந்து கொண்டே இருக்கும். கொவிட் தொற்றை போலவே ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டுள்ளது. 

HMPV வைரஸால் இளம் குழந்தைகள், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டால் ஒரு சிலருக்கு உடனே கடுமையான நோய் பாதிப்பு ஏற்படலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

HMPV வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

இந்த வைரஸ் இருமல் மற்றும் தும்மலின்போது வெளியாகும் சளி மூலம் பரவி மக்களிடம் நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கை குலுக்குவதன் மூலமோ, கட்டிப் பிடிப்பதன் மூலமோ அல்லது ஒருவருக்கொருவர் தொடுவதன் மூலமாகவோ இந்த வைரஸ் பரவலாம்.

HMPV வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள்?

  • உங்களுக்கு சளி இருந்தால், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுக்க வேண்டும்.
  • உங்கள் கைகளைக் குறைந்தது 20 விநாடிகள் சவர்க்காரம் மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
  • நீங்கள் பயன்படுத்திய பாத்திரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்த வேண்டாம்.

இதுவரை, இந்த வைரஸிற்கான எந்தத் தடுப்பூசியும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பதுடன் இந்த நோய் பாதிப்புக்கு காய்ச்சலுக்கான மருந்துகளே வழங்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஆனால் ஏற்கெனவே சுவாச பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு, இந்த வைரஸ் அதிகளவான பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்பதனால் அத்தகைய சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இது தெடர்பான முழுமையான அறிக்கையை பார்வையிட

இலங்கையில் HMPV வைரஸ் தொடர்பான ஆபத்துக்கள் உள்ளனவா?

சீனாவில் பரவி வரும் Human Metapneumonia (HMPV ) வைரஸ் தொடர்பில் இலங்கையர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் பொதுவானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட HMPV வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்றும் பொதுவாக சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதாகவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

இருப்பினும், HMPV வைரஸ் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வைரஸ் நிலை பொதுவாக ஒரு வாரத்திற்குள் குறையும் என்று பேராசிரியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான பிரச்சினையான சூழ்நிலை இலங்கையில் பதிவாகவில்லை என இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் Human Metapneumovirus (HMPV) என்பது சீனாவில் பரவும் வைரஸ் எனவும் இந்த வைரஸ் நிலையானது சீனாவில் குளிர்காலத்தில் ஏற்பட்ட இயல்பான நிலை என்றும், சீனாவில் இந்த வைரஸ் தொடர்பில் அவசரகாலநிலை எதுவும் பிரகடனப்படுத்தப்படவில்லை  என்றும், வெளிநாட்டவர்கள் சீனாவுக்கு செல்வதற்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சீன அரசு உறுதி செய்துள்ளது.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்த வைரஸ் தொடர்பான எந்தவிதமான உலகளாவிய அவசரநிலையை அறிவிக்கவில்லை என்பதுடன் சீனாவில் இந்த வைரஸ், தொற்றுநோயாக பரவிவருவதற்கான எவ்வித உத்தியோகபூர்வ  ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை.

அத்துடன் இலங்கை தொற்று நோயியல் பிரிவு, இலங்கையில் இந்த வைரஸ் தொடர்பில் அபாய நிலை இருப்பதாக அறிவிக்கவில்லை என்பதுடன், இது ஒரு புதிய வைரஸ் அல்ல எனவும் இதனால்  தொற்றுநோய் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை எனவும்  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எமது சாதாரண வாழ்க்கை முறையில் சுவாசம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது அவசியமான ஒன்றாகவே கருதப்படுகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பான உண்மை நிலை என்ன?

Written By: Suji Shabeedharan 

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *