
துருக்கியில் மாத்திரம் இயற்கையாக வளரும் கருப்பு ரோஜா என தெரிவித்து புகைப்படத்துடனான தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் துருக்கி மட்டுமே யூப்ரடீஸ் நதியின் நீரால் வளர்க்கப்படும் இயற்கையான கருப்பு ரோஜாக்கள் வளரும் ஒரே இடமாகும்.
இது மிகவும் அரிதான வகை மலர், உருஃபா மாகாணத்திற்கு அருகில் உள்ள தென்கிழக்கு சான்லியுர்ஃபா மாகாணத்தின் ஹால்ஃபெட்டி கிராமத்தில் மட்டுமே காணப்படுகிறது.
கோடையில் கருப்பாகத் தோன்றும் இவை, மற்ற பருவங்களில் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மண்ணின் அடர்த்தி மற்றும் ஆந்தோசயனின் (நீரில் கரையக்கூடிய நிறமிகள்) கலவையால் இந்த மாறுபாடு ஏற்படுகிறது; மண்ணின் pH-க்கு மிகவும் உணர்திறன் கொண்டதால், இந்த வகை நிறமியில் மண் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.03.24 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் இதே தகவல் பகிரப்பட்டிருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் பகிரப்பட்ட புகைப்படமானது இயற்கைக்கு மாறாக தோற்றமளிப்பதனால் நாம் குறித்த புகைப்படத்தினை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியானது.
மேலும் குறித்த சமூக ஊடகப்பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று துருக்கியில் மாத்திரம் இயற்கையாகவே வளரும் கருப்பு ரோஜாக்கள் தொடர்பில் நாம் ஆய்வு செய்த போது, snopes இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு இது குறித்து வெளியிடப்பட்டிருந்த உண்மைக் கண்டறியும் ஆய்வுக் கட்டுரையை எம்மால் காண முடிந்தது.
குறித்த ஆய்வுக் கட்டுரையில் 2013 முதல் கருப்பு ரோஜா தொடர்பான பல கதைகள் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
SoraNews24 இணையதளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு கருப்பு ரோஜா தொடர்பில் வெளியான கதையை தொடர்ந்தே இந்த வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் snopes கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பில் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் துருக்கியிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ கருப்பு ரோஜாக்கள் இயற்கையாக வளர்வதற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் காணமுடியவில்லை.
குறிப்பாக இயற்கையா வளரும் ரோஜாக்கள் அடர் சிவப்பு நிறத்தில் (கிட்டத்தட்ட கருப்பு நிறத்தில்) காணப்படலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
கருப்பு நிறமாக தோற்றமளிக்கும் அடர் சிவப்பு நிற ரோஜாக்கள்
மேலும் தண்ணீரில் உள்ள PH இயற்கையாகவே பூக்களின் நிறத்தை கருமையாக்கக் கூடிய தன்மையை கொண்டிருந்தாலும், ரோஜாக்களை முழுமையாக கருப்பாக மாற்றுவதற்கான திறன் அதில் இல்லை எனவும் சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. Link
அத்துடன் இந்த வகையான ரோஜாக்கள் துருக்கியில் மாத்திரமே காணப்படுகின்றது என்பதற்கான ஆதாரங்களும் இல்லை.
உண்மையில் கருப்பு ரோஜாக்கள் இருக்கின்றனவா?
“கருப்பு ரோஜா” என்ற சொல் முற்றிலும் கருப்பு நிற பூவின் பிம்பத்தை குறித்து நின்றாலும், உண்மையில் கருப்பு ரோஜாக்கள் இயற்கையில் இல்லை. மாறாக, அவை அடர் சிவப்பு, பர்கண்டி அல்லது ஊதா நிறங்களிலேயே காணப்படுகின்றன.
மேலும் இந்த ரோஜாக்கள் சில ஒளி நிலைகள் காரணமாக கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.
மேலும் இந்த அடர் நிற ரோஜாக்களை தோட்டக்கலை வல்லுநர்கள் பயிரிடுகிறார்கள், அவர்கள் அடர் நிற ரோஜாக்களை கையால் மகரந்தச் சேர்க்கை செய்து இந்த தனித்துவமான ரோஜாக்களை உருவாக்குகிறார்கள்.
கருப்பு ரோஜாக்களை செயற்கை பூக்கள், பாதுகாக்கப்பட்ட பூக்கள் போன்ற பல்வேறு வடிவங்களிலும், கலை மற்றும் இலக்கியத்தில் ஒரு மையக்கருவாகவும் பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.Link | Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் உண்மையில் இயற்கையாகவே கருப்பு ரோஜாக்கள் வளர்வதில்லை என்பதுடன் அடர் சிவப்பு, பர்கண்டி அல்லது ஊதா நிறங்களில் காணப்பபடும் ரோஜாக்கள் சில ஒளி நிலைகள் காரணமாக கருப்பு நிறமாக தோற்றமளிக்கின்றன என்பதுவும் தெளிவாகின்றது.
மேலும் குறித்த சமூக ஊடகப்பதிவில் பகிரப்பட்ட கருப்பு ரோஜாக்களின் புகைப்படம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பதுவும் புலானாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:துருக்கியில் மாத்திரம் இயற்கையாக வளரும் கருப்பு ரோஜா உண்மை என்ன?
Written By: Suji ShabeedhranResult: Missing Context
