கனேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர் குறித்து பரவும் பதிவுகளின் உண்மை என்ன?

Misleading சமூகம் | Society

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று (2025.02.19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை மேற்கொள்ளும் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினாரால் நேற்று மாலை சந்தேகநபர்  கைது செய்யப்பட்டதனை அடுத்து அது தொடர்பில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. 

எனவே அது தொடர்பில் தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில்  ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

மேலும் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து கைதான சந்தேகநபர் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் நட்புறவாடி சிரித்து பேசுவது போல் தோன்றும் வகையில் குறித்த காணொளி  சித்தரிக்கப்பட்டு பதிவேற்றப் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையான காணொளி அல்லவென பலரால் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தாலும் சந்தேகநபர் கைதான வேளையில் ஊடகங்களில் வெளியான புகைப்படங்களுடன் அதனை பார்க்கும் போது இது உண்மை என எண்ணி பலர் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

அதேபோல் கணேமுல்ல  சஞ்ஜீவ கொலையின் சந்தேகநபர் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் முகசாயலில் இருப்பதாக நகைச்சுவையாக தெரிவித்து பகிரப்பட்ட பல சமூக ஊடக பதிவுகளையும் எம்மால் காண முடிந்தது.

Fb|Archive

மேலும் குறித்த சந்தேகநபர் கைது செய்வதற்கு  முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எனவும் கைது செய்யப்பட்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எனவும் நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்ட பல பதிவுகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

Facebook | Archived Link 

Fact Check (உண்மை அறிவோம்)

சந்தேகநபர் என சித்தரிக்கும் காணொளி

குறித்த கொலையை செய்ததாக சந்தேகிக்கபபட்ட நபர் நேற்று (19) மாலை புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் அவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது.Link

அவற்றை அடிப்படையாகக் கொண்டே பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் குறித்த சந்தேகநபர் சிரித்து பேசிக்கொண்டிருப்பதனைப் போன்று அந்த காணொளி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமையை எம்மால் அறிய முடிந்தது.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த காணொளியானது  செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பது உறுதியானது. 

மேலும் நாம் அது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு வினவியபோது மேற்குறிப்பிட்ட காணொளி போலியானது எனவும் உண்மையில் அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும் அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் பகிரப்படும் தகவல்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவே குறித்த கொலையின்  சந்தேகநபர் என்று பலர் சமூக ஊடகங்களில் நகைச்சுவையாக பகிர்ந்து வந்தனர், எனினும் நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் நீதிமன்றத்திற்குள் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் பல செய்திகள் வெளிவந்த நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இந்தக் கொலை செய்யப்பட்டது என்று குறிப்பிடுவது ஒரு நபரின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் ஒரு செயலாகும்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று (19) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருந்ததுடன், கொலைச் சந்தேகநபருடன் தன்னை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டிருந்த பதிவு பின்வருமாறு

Archived Link

Archived Link

அதேபோன்று, இந்தக் கொலைக்குப் பிறகு, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று (19) பாராளுமன்றத்தில், பொது அமர்வுகளின் போது குறைந்தபட்சம் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அல்ல என்பதுவும் தெளிவாகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் பகிரப்பட்ட தகவல் 

குறித்த பதிவில் காலையில் இராமநாதன் அர்ச்சுனா எனவும் மாலையில் சஜித் பிரேமதாச என தெரிவிக்கப்பட்டு அந்த புகைப்படம் பதிவேற்றப்பட்டிருந்தது.

இவ்வாறான விடயங்கள் நகைச்சுவையாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல தொழிநுட்பங்களை பயன்படுத்தி செய்யப்படுபவையாக இருந்தாலும் ஒருவரின் அனுமதியின்றி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சந்தேகநபருடன் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தவறான செயல்களாகும்.

மேலும் குறித்த புகைப்படத்தினையும் நாம்  AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது அது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட் ஒன்று என்பது உறுதியானது.

கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (19) இடம்பெற்ற கொலைச் சம்பவம்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று (19) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கனேமுல்லே சஞ்சீவ என்றழைக்கப்படுகின்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதன் பிரதான சந்தேகநபர் கொலை சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டார்.

புத்தளம் – பாலாவி பகுதியில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவொன்றின் தலைவரான கனேமுல்லே சஞ்சீவ பூசா சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பாதுகாப்பின் கீழ் அழைத்துவரப்பட்டார்.

பின்னர் அவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தின் 5ஆம் இலக்க அறையில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்தார்.

சம்பவம் இடம்பெற்றபோது ஏற்பட்ட நெரிசலால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பெண்ணொருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானார்.

சந்தேகநபர் துப்பாக்கியை மறைத்து கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் புத்தகமொன்று சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புத்தகம் சட்டத்தரணிகள் அதிகம் பயன்படுத்தும் குற்றவியல் சட்டக்கோவை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. Link | Link | Link

சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் நேற்று (19) கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கனேமுல்ல சஞ்ஜீவ கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து நேற்று மாலை புத்தளத்தில் வைத்து குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். எனவே அதன் பின்னியில் பல்வேறு தொழிநுட்பங்களை பயன்படுத்தி சிலர் நகைச்சுவை நோக்கத்திற்காக சமூக ஊடகங்களில் பதிவேற்றிய காணொளி மற்றும் புகைப்படங்கள் தவறானது என்பது உறுதியானது.

எனினும் இவ்வாறான செயல்கள் நகைச்சுவை நோக்கத்திற்கு  செய்யப்பட்டாலும் இது குறித்த உண்மைகளை அறியாதவர்கள் இவற்றினால் ஏமாற்றப்படுகின்றார்கள். மேலும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தினை நகைச்சுவையாக மாற்றி சமூக ஊடகங்களில் இவ்வாறு பகிரப்படும் விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கனேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர் குறித்து பரவும் பதிவுகளின் உண்மை என்ன?

Fact Check By: Suji Shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *