
எப்ஸ்டீன் கோப்புகள் வெளியானதை தொடர்ந்து பல சர்ச்சையான மற்றும் போலியான தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது, எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட துருக்கிய சிறுவன் துன்புறுத்தப்படும் காணொளி என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் #EpsteinFiles
ஊடக அறிக்கைகளின்படி, எப்ஸ்டீன் வழக்கிலிருந்து கசிந்த காணொளிகளில் ஒன்றில்,
எப்ஸ்டீனால் கடத்தப்பட்டு, கடுமையாகத் தாக்கப்ட்டு, இரத்தம் தோய்ந்த முகத்துடன் ஒரு துருக்கியச் சிறுவன், தன்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று படம்பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு மேற்கத்திய மனிதனிடம் கெஞ்சிக்கொண்டே, ஆடையைக் களையும்படி கட்டாயப்படுத்தப்படுவது காணப்படுகிறது.
இந்த ஒரு காணொளியின் காரணமாக, துருக்கி மக்கள் அனைத்து தீய அமெரிக்க அரசியல்வாதிகளையும் வெறுத்து, அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க, இன்னும் தாக்குதல் நடத்தவும் துருக்கியர்களுக்கு முழு உரிமை உண்டு. என தெரிவிக்கப்பட்டு 2026.02.05 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்து வருகின்றமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அண்மையில் எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் அதில் தொடர்புப்பட்டிருந்த முக்கியஸ்தர்கள் தொடர்பான பல்வேறு செய்திகள் நம்பத்தகுந்த சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.
ஆனால் மேற்குறிப்பிட்ட விதத்தில் எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட துருக்கிய சிறுவன் தொடர்பில் காணொளிகளுடனான செய்திகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
ஆகவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, பல்வேறு துருக்கிய ஊடகங்களில் இந்த சிறுவனின் காணொளி தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.
எனவே அந்த செய்திகளை ஆராய்ந்த போது, சமூக ஊடகங்களில் “ஒரு துருக்கிய சிறுவன் சித்திரவதை செய்யப்படுகிறான்” என்று பகிரப்படும் தகவல்கள் உண்மையல்ல என்று துருக்கியின் ‘தவறான தகவல்களுக்கு எதிராக போராடும் மையம்’ (DMM) அறிவித்துள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த வீடியோ 2021 இல் பிரேசிலில் நடந்த ஒரு பழைய சம்பவமாகும் எனவும் இது பிரேசிலின் மாட்டோ கிராசோ டோ சுல் (Mato Grosso do Sul) மாநிலத்தில் ஒரு தந்தை தனது குழந்தைக்கு இழைத்த வன்முறை தொடர்பானது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேபோன்று அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் துருக்கிய மொழியில் பேசவில்லை, மாறாக போர்த்துகல் மொழியில் பேசுகிறான் என்றும் இந்த வீடியோவிற்கும் துருக்கிக்கும் அல்லது ஒரு துருக்கிய சிறுவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.Link | Link | Link
எனவே மேற்குறிப்பிட்ட செய்திகளின் அடிப்படையில் நாம் துருக்கியின் தவறான தகவல்களுக்கு எதிராக போராடும் மையம் (DMM) உண்மையில் அவ்வாறான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதா என்பதனை ஆராய்ந்தோம். இதன்போ அந்த மையத்தின் x தளம் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்களில் குறித்த ஊடக அறிக்கையானது கடந்த 02 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளமையை காணமுடிந்தது.
குறித்த ஊடக அறிக்கையானது துருக்கிய மொழியில் இருந்தமையினால் நாம் அதனை Google Translate உதவியில் மொழிபெயர்த்து பார்த்த போது, அதில் சில சமூக ஊடக கணக்குகளில் “துன்புறுத்தப்பட்ட துருக்கிய சிறுவன் ‘I’m sorry Arthur’ என்று கூறுகிறான்” என்ற கூற்றுடன் பகிரப்படும் படங்கள் உண்மையை பிரதிபலிப்பவை அல்ல.
குறிப்பிடப்பட்ட இந்த காட்சிகள் 2021இல் பிரேசில் ஊடகங்களில் வெளியான ஒரு பழைய சம்பவத்தைச் சேர்ந்தவை. அப்போது வெளிவந்த செய்திகளின்படி, மாட்டோ க்ரோஸோ டு சுல் மாநிலத்தில் ஒரு தந்தை தனது குழந்தையை உடல்ரீதியாக துன்புறுத்திய சம்பவம் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டன, அந்த குழந்தை போர்த்துகல் மொழியில் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த காட்சிகளுக்கு துருக்கி அல்லது துருக்கிய சிறுவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த உள்ளடக்கம் இதற்கு முன்பும் எங்களது தவறான தகவல் எதிர்ப்பு மையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு மறுக்கப்பட்டதாகும்.
பழைய மற்றும் சூழலை விட்டு பிரிக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் பகிர்ந்து மக்களை தவறாக வழிநடத்துவது திட்டமிட்ட தவறான தகவல் பரப்பல் முயற்சியாகும். இதுபோன்ற ஆதாரமற்ற கூற்றுகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் மற்றும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டிருந்ததனை அறிய முடிந்தது.

மேலும் நாம் இது தொடர்பில் மேற்கொண்ட கூடுதல் ஆய்வில் 2024 ஆம் ஆண்டு துருக்கி ஜனாதிபதி அலுவலகத் தொடர்பு துறையின் இணையதளத்தில் இந்த காணொளி தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையையும் காணமுடிந்தது.
அதிலும் சமூக வலைதளங்களில் “சித்திரவதை செய்யப்படும் துருக்கிய சிறுவன்” என்று பரவும் செய்தி முற்றிலும் தவறானது எனவும் இது 2021 இல் பிரேசிலில் (Mato Grosso do Sul) நடந்த ஒரு சம்பவம் என்பதுடன்
வீடியோவில் உள்ள சிறுவன் துருக்கிய மொழியில் பேசவில்லை, போர்த்துகல் மொழியிலேயே பேசுகிறான்.தனது குழந்தையைத் துன்புறுத்தியதற்காக பிரேசில் நாட்டு தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

presidency of the republic of turkey directorate of communications
மேற்குறிப்பிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று 2021 இல் பிரேசில் ஊடகங்களில் இந்த சிறுவன் சித்திரவதை செய்யப்படுவது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளனவா என்பதனையும் நாம் ஆராய்ந்தபோது, குறித்த சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.Link | Link | Link
பிரேசிலின் மாடோ கிராசோ டோ சுல் (Mato Grosso do Sul) மாநிலத்தில் பொன்டா போரா (Ponta Porã) நகரில், ஒரு தந்தை தனது 3 வயது மகனைத் தாக்கி, சிறுவனின் மூக்கில் இரத்தம் வழியும் நிலையில், “உன்னை இன்னும் அடிப்பேன்” என்று மிரட்டும் வீடியோவை குறித்த தந்தையே பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை மீட்டெடுத்த சிறுவனின் தாய், அதை உறவினர்களுக்கு அனுப்பியதன் மூலம் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட தந்தை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று கைது செய்யப்பட்டார். இருப்பினும்,போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் செப்டம்பர் 27 அன்று அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு குறித்த தந்தை எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், அந்த நபர் சிறுவனைத் தாக்கியமை வீடியோவில் தெளிவாகத் தெரிவதாலும், அவரது மற்ற குழந்தைகளும் அவர் தங்களை அடிப்பதாகக் கூறியுள்ளதாலும், பொலிஸார் அவர் மீது மீண்டும் பிடியாணை அமல்படுத்த நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது மூன்று சகோதரர்களும் சம்பவத்திற்கு பின்னர் அவர்களது உறவினர்களுடன், குழந்தைகள் பாதுகாப்பு கவுன்சிலின் (Conselho Tutelar) மேற்பார்வையில் பாதுகாப்பாக உள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காணொளி 2021 ஆம் ஆண்டு காட்சிகள் மறைக்கப்பட்ட நிலையில் Jornal da Record என்ற youtube பக்கத்தில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் எப்ஸ்டீனால் கடத்தப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு, இரத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்படும் துருக்கிய சிறுவனின் காணொளி என பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் அது 2021 ஆம் ஆண்டு பிரேசிலின் மாடோ கிராசோ டோ சுல் (Mato Grosso do Sul) மாநிலத்தில், ஒரு தந்தை தனது 3 வயது மகனைத் தாக்கி, சிறுவனின் மூக்கில் இரத்தம் வழியும் நிலையில் வீடியோ எடுத்துள்ளார். அந்த காணொளியே அது என்பது கண்டறியப்பட்டது.
மேலும் குறித்த காணொளியில் அந்த சிறுவன் பேசும் மொழி துருக்கிய மொழி என தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அந்த சிறுவன் போர்த்துகல் மொழியிலேயே பேசியுள்ளான் என்பதுவும் எமது ஆய்வுகளில் உறுதியானது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட துருக்கிய சிறுவன் என பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


