அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய உள்ளிட்ட பிரதிவாதிகள் எப்போது விடுதலையானார்கள்?

Misleading அரசியல்

நாட்டின் அரசியல் சூழலில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சம்பவங்களை தற்போது இடம்பெற்றதாக சித்தரிக்கும் பதிவுகள் சமூக ஊடகங்களில் வளம் வருகின்றன. அந்தவகையில் அவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில பதிவுகளை எம்மால் காணமுடிந்தது.

எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link 

நான் முன்னரே கூறியது தான். மீண்டும் கூறுகிறேன். புரிந்துகொள்ள முடிந்தால் தெளிவுபெறலாம்..

ராஜபக்சக்கள் மீதான உண்மையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் அனுர அரசு ஆட்சியில் இருக்கும் பொழுதே தள்ளுபடி செய்யப்படும் அல்லது எக்குற்றமும் முன்னெடுக்கப்படவில்லை என தீர்ப்பு வழங்கப்படும்.

இவ் விடையத்தில், மக்கள் அரசு மீது சந்தேகப்படாமல் இருப்பதற்காக சம்பந்தம் இல்லாத மற்றும் தொடர்பற்ற விடையங்களில் தொடர்பு இருப்பதாக ஒரு விம்பத்தை உருவாக்கி மக்களை திசை திருப்புவதுடன் அதில் மிகுந்த அக்கறையுடன் இருப்பாதாக காட்டி, அரசின் மீது சந்தேகமும் மக்கள் செல்வாக்கும் உடையாது பாதுகாத்துக்கொள்வார்கள்..

இதையும் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்..

செவ்வந்தி போனில் எங்கள் நாமல் என ஒரு நம்பர் save செய்யப்பட்டுள்ளது என பேசு பொருளாக்கி இந்த பக்கமாக அவன்கார்ட் வழக்கில் விடுதலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..

இது mutual benefits அரசியலாகும். இவ்வாறான செயற்பாடுகளால் இரு தரப்பும் பெற்றுக்கொள்ளும் நன்மைகள் யாதென சற்று ஆழமாக அரசியலை தேடினால் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்… என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது 2025.10.25 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவன்கார்ட் வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செய்லாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் விடுதலையாகியுள்ளதாகவும் அது தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் பங்களிப்புடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணர்த்தும் வகையில் பல பதிவுகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன.

FB | FB

எனவே அவன்ட் கார்ட் தொடர்பான வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா என்பதை ஆராய்வதற்கு நாம் நடவடிக்கையை மேற்கொண்டோம்.

Fact Check (உண்மை அறிவோம்)

அவன்ட் கார்ட் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் கடந்த அக்டோபர் 25 ஆம் திகதி விடுவிக்கப்பட்டதாகவே சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.

இருப்பினும், காலி துறைமுகத்திற்கு அருகிலுள்ள அவன்ட்-கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவோ அல்லது சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டதாகவோ எந்த பிரதான ஊடகத்திலும் செய்திகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவானது அததெரண ஊடகத்தின் செய்தியாகவே பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது. எனவே நாம் அது தொடர்பில் ஆராய்ந்த போது, அது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் திகதி அததெரண சிங்கள மொழி ஊடகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தி என்பது கண்டறியப்பட்டது.

Facebook | Archived Link

அதன்படி குறித்த பதிவில் காணப்பட்ட இணைப்பை கிளிக் செய்து பார்த்த போது மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவுகளில் வழங்கப்பட்டிருந்த தகவல்கள் அதில் இருப்பதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Ada derana.lk | Archived Link

அதில்  மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் செல்வதற்காக அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழங்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பிரதிவாதிகளையும் விடுதலை செய்யது மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் திகதியன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு குறித்து பல ஊடக்களில் செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Link | Link

அதேபோன்று குறித்த செய்தியானது, Save Avant Garde பேஸ்புக் பக்கத்திலும் பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்தது.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் திகதி நடந்த விசாரணையில் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பிரதிவாதிகளும் விடுவித்து விடுதலை

2015 நல்லாட்சி காலத்தில் காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடத்துவதற்கு அவன்ட் கார்ட் கடல்சார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகக் கூறி, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளில் முன்னாள் கடற்படைத் தளபதிகளான ஜயந்த பெரேரா, ஜயநாத் கொலம்பகே மற்றும் சோமதிலக திசாநாயக்க ஆகியோர் அடங்குவர். மேலும், ஓய்வுபெற்ற இரண்டு இராணுவ மேஜர் ஜெனரல்களான பாலித பெர்னாண்டோ மற்றும் பி. எகொடவெல ஆகியோரும் பிரதிவாதிகளில் அடங்குவர். அத்துடன், Avant Garde Maritime Services நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க யாப்பா சேனாதிபதியும் இந்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டார். இது தொடர்பான தகவல்களை இங்கே காண்க

இருப்பினும், கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பிரதிவாதிகளும் விடுவித்து விடுதலை செய்த போதிலும், அவன்ட் கார்ட் வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தன.

அவன்ட் கார்ட் வழக்கு 2021 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி முடிவடையும்

நிசங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் ரக்னா லங்கா அதிகாரிகள் உட்பட ஏழு பேரை விடுவித்து, கொழும்பு சிறப்பு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி உத்தரவிட்டது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஆதித்ய படபெந்திகே, மஞ்சுள திலகரத்ன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு ஒருமனதாக தீர்ப்பை வழங்கியதாக செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

தீர்ப்பை அறிவித்த மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வின் தலைவரான நீதிபதி ஆதித்ய படபெந்திகே, விசாரணையின் போது சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, அவன்ட் கார்ட் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த  ரக்னா லங்கா நிறுவனம் ஆகியவற்றிற்கு செங்கடலில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை இயக்குவதற்கு ஒப்புதல் அளித்திருந்ததாக கூறினார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தனது சாட்சியத்தில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை அவன்ட் கார்ட் கப்பலில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டதாக கூறியதை சுட்டிக்காட்டிய நீதிபதி படபெந்திகே, இருப்பினும், நிர்வாக வசதிக்காக அந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு கடிதத்தை வெளியிட்டதாகக் குறிப்பிட்டார்.

கப்பலில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் வைத்திருப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டதாகக் கூறி பிரதிவாதியால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் ஒரு சட்ட ஆவணம் என்றும் அது போலியான கடிதம் அல்ல என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனது சாட்சியங்கள் மூலம் ஒப்புக்கொண்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, கேள்விக்குரிய கப்பலில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருப்பதற்கான செல்லுபடியாகும் உரிமம் இருந்ததாகத் அறியமுடிகின்றது என்றும், உரிமம் போலியானது என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்தது.

2015 ஆம் ஆண்டு காலி துறைமுகத்திற்கு அருகிலுள்ள பேருவளை கடற்பரப்பில் எம்.வி. அவன்ட் கார்ட் கப்பலில் உரிமம் இல்லாமல் 816 துப்பாக்கிகள் மற்றும் 203,395 தோட்டாக்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க யாப்பா சேனாதிபதி உட்பட எட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட 19 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.Link| Link

நீதிமன்ற செய்தியாளர்கள்

கொழும்பில் உள்ள பல நீதிமன்ற செய்தியாளர்களிடம், அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்ததா என வினவினோம், இதன்போது குறித்த வழக்கு 2021 இல் முடிவடைந்ததாகவும், அது தொடர்பாக சமீபத்தில் எந்த வழக்கும் தொடரப்படவில்லை எனவும் அவர்கள் கூறினர்.


ஜனாதிபதி சட்டத்தரணிகளின் உறுதிப்படுத்தல்

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் அமைச்சர் அலி சப்ரியிடம் வினவியபோது, அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு விசாரணைகள்  நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டுவிட்டதாகவும், சமீபத்தில் இது தொடர்பாக எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

நிசங்க சேனாதிபதியின் சார்பாக ஆஜரான சட்டத்தரணியான, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரணவிடமும் நாம் இது தொடர்பில் வினவினோம். இதன்போது, அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பாக நிசங்க சேனாதிபதி விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும், வழக்கு முடிவடைந்ததால், மறு விசாரணை இருக்காது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட 8 பிரதிவாதிகளும் தற்போதைய அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.

மேலும் அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பிரதிவாதிகளும் கொழும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 2019 ஆம் ஆண்டு விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன், மேலும் அவன்ட் கார்ட் வழக்கு முழுவதும் 2021 ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் முடிவுக்கு  கொண்டுவரப்பட்டது என்பது உறுதியாகின்றது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய உள்ளிட்ட பிரதிவாதிகள் எப்போது விடுதலையானார்கள்?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *