2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீடுகளின் படி, இலங்கையின் இடம் என்ன?

Insight சமூகம் | Society

World Economics நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு ஊழல் உணர்வு அறிக்கையை மேற்கோள் காட்டி, ஊழலுக்கு எதிராக கடுமையான கொள்கையுடன் ஆட்சிக்கு வந்த அரசின் கீழும், 2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீட்டின் (Corruption Perceptions Index) படி, இலங்கை 24.7 என்ற மிகக் குறைந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. 

அதுகுறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கை பின்வருமாறு

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link Facebook

குறித்த சமூக ஊடகப் பதிவில், “2025 உலக பொருளாதார ஊழல் குறியீட்டின் சமீபத்திய அறிக்கையின் படி, நமக்கு 24.7/100 என்ற மதிப்பெண் கிடைத்துள்ளது (இது Distinction அல்ல; ‘D’ என்பது மிகக் குறைந்த தரத்தை குறிக்கிறது). 2024 ஆம் ஆண்டில் 32/100% ஆக இருந்த மதிப்பு, இந்த ஆண்டு 24.7% ஆகக் குறைந்துள்ளது. மிகுந்த ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் ராஜபக்ச காலத்தில், உலகின் குறைந்த ஊழல் கொண்ட நாடுகளில் இலங்கை 87வது இடத்தில் இருந்தது. தற்போது அது 121வது இடத்திற்கு தாழ்ந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இதனை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Explainer (விளக்கமளித்தல்)

World Economics இன் செயற்பாடு

World Economics என்பது உலகளாவிய பொருளாதாரத் தரவுகள், ஆய்வுகள் மற்றும் குறியீடுகள் (indices) வெளியிடும் ஒரு சுயாதீன ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

இது பல நாடுகளின் பொருளாதார நிலை, ஆட்சி தரம், வெளிப்படைத்தன்மை, ஊழல் உணர்வு போன்ற அம்சங்களை மதிப்பீடு செய்து அறிக்கைகள் வெளியிடுகிறது. அரசாங்கத் தரவுகள் முழுமையாக இல்லாத சூழலில் மாற்று தரவுகளையும் ஆய்வுகளையும் பயன்படுத்தி மதிப்பீடுகள் வழங்குவது இதன் சிறப்பம்சமாகும்.

Transparency International இன் செயற்பாடு

Transparency International என்பது உலகளாவிய அளவில் ஊழலை எதிர்த்து செயல்படும் ஒரு சுயாதீன, லாப நோக்கமற்ற அமைப்பாகும்.

இது 1993 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலக நாடுகளில் ஊழல் நிலையை ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும்  ஊழல் உணர்வு குறியீடு (“Corruption Perceptions Index (CPI)”) என்ற முக்கிய குறியீட்டை வெளியிடுகிறது. அரசாங்கங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

ஊழல் உணர்வு குறியீடு என்றால் என்ன அது எவ்வாறு கணிக்கப்படுகின்றது

Corruption Perceptions Index (CPI) என்பது ஒரு நாட்டில் பொதுத்துறை (அரசுத் துறை) ஊழல் எவ்வளவு உள்ளது என்பதை “உணர்வு” (perception) அடிப்படையில் மதிப்பிடும் ஒரு சர்வதேச குறியீடு ஆகும்.

இதை Transparency International நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

  • நாடுகள் 0 முதல் 100 வரை மதிப்பெண் பெறுகின்றன.
  • 0 = மிக அதிக ஊழல் உள்ளது எனக் கருதப்படுகிறது.
  • 100 = மிகக் குறைந்த ஊழல் உள்ளது எனக் கருதப்படுகிறது.

இந்த மதிப்பீடு நிபுணர் ஆய்வுகள் மற்றும் வணிக கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.

World Economics அறிக்கை, Transparency International அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தனது கணக்கீடுகளை மேற்கொண்டுள்ளது என்பதை அந்த இணையதள இணைப்பின் மூலம் அறிய முடிகிறது. ஆனால் நாம் இந்த சமூக ஊடகப் பதிவு வெளியிடப்பட்ட காலத்தில் மேற்கொண்ட ஆய்வுகளில் Transparency International அறிக்கையில் காணப்படுவது, அவர்கள் இந்த தரவுகளை 2024 ஆம் ஆண்டிற்காகவே தயாரித்துள்ளனர் என்பதாகும்.

அந்த ஆய்வுகளில் Transparency International நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான CPI அறிக்கையை 2025 பிப்ரவரி 11 அன்று வெளியிட்டது. இதுவரை வெளியிடப்பட்ட சமீபத்திய CPI அறிக்கையும் Transparency International இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும், முந்தைய CPI பதிவுகளையும் நாம் ஆராய்ந்தபோது, ஆண்டுகள் கடந்துவர இலங்கையின் CPI மதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது என்பதை அவதானித்தோம். 2021 ஆம் ஆண்டு CPI மதிப்பு 40 ஆகவும், 2020 ஆம் ஆண்டு 38 ஆகவும் இருந்தது. பின்னர் அது படிப்படியாகக் குறைந்து 2023 ஆம் ஆண்டில் 34 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 32 ஆகவும் குறைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த அறிக்கையானது, 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகும்.

சமூக ஊடகங்களில் பரவி வந்த பதிவில் அந்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், World Economics வழங்கிய இணைப்பின் காப்பகப் பதிவுகளை (2025 April Archive) நாம் ஆராய்ந்தோம். அதில், அந்த அறிக்கை 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே இணையதளத்தில் கிடைத்துவந்தது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

Transparency International நிறுவனம் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வு குறியீடு

Transparency International நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வு குறியீட்டை (CPI) 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை 35 மதிப்பெண்களைப் பெற்று 107ஆம் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை காணலாம்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் மதிப்பு 32 ஆக இருந்தது. 2025 ஆம் ஆண்டில் பெறப்பட்ட மதிப்பு 35 ஆக இருப்பதால், அது 3 புள்ளிகள் அதிகரிப்பாகும்.

மேலும், 2024 ஆம் ஆண்டில் 121ஆம் இடத்தில் இருந்த இலங்கை, 2025 ஆம் ஆண்டில் 107ஆம் இடத்திற்குச் சென்றுள்ளது. இது 14 இடங்கள் முன்னேற்றமடைந்ததைப் பிரதிபலிக்கிறது.

Transparency International நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வு குறியீட்டை (CPI) 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி  வெளியிட்டிருந்த போதிலும்,  2025 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு World Economics வெளியிடும் ஊழல் உணர்வு குறியீடு (World Economic CPI)  அன்றைய தினம் (2026.02.11) புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் தற்போது  World Economic CPI புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Transparency International மற்றும் World Economics வழங்கிய தரவுகள்

YearTI Official ScoreWE Converted ScoreGrade (WE System)Global Rank
20153728.6C83rd
20163627.8C95th
20173829.3C91st
20183829.3C89th
20193829.3C93rd
20203829.3C94th
20213728.6C102nd
20223627.8C115th
20233426.2C115th
20243224.7D121st
20253528.9C107


Transparency International நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீட்டைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் 

Transparency International அமைப்பின் புதிய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி (CPI) கடந்த 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்து ஒரு முழுமையான கண்ணோட்டத்தை வழங்குகிறது. நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்களின் கருத்துக்களின் அடிப்படையில், 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பொதுத்துறை எந்த அளவிற்கு ஊழல் நிறைந்ததாகக் கருதப்படுகிறது என்பதை இந்த CPI மதிப்பீடு செய்கிறது. உலக வங்கி, உலக பொருளாதார மன்றம், தனியார் இடர் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள், மற்றும் முன்னணி சிந்தனை மையங்கள் (Think Tanks) உட்பட 13 சுயாதீன வெளிப்புற மூலங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. நாடுகள் 0 முதல் 100 வரையிலான அளவுகோலில் மதிப்பிடப்படுகின்றன. இதில் 0 என்பது அதிக ஊழல் நிறைந்த பொதுத்துறையையும், 100 என்பது மிகவும் தூய்மையான (ஊழலற்ற) ஒன்றையும் குறிக்கிறது.

இந்த ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி (CPI) இலஞ்சம், பொது நிதியை தவறாக பயன்படுத்துதல், அரசுத் தரப்பு வழக்குகளின் செயல்திறன், சட்டக் கட்டமைப்புகளின் வலிமை, தகவல் பெறுவதற்கான உரிமை மற்றும் ஊழலை வெளிப்படுத்துவோர் (Whistleblowers) மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு போன்ற பொதுத்துறையின் முக்கிய ஊழல் அபாயங்களை அளவிடுகிறது. இருப்பினும் பொதுத்துறைக்கு அப்பாற்பட்ட பிற வடிவங்களினாலான ஊழல்களை இது கருத்தில் கொள்வதில்லை. 2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் (CPI) இலங்கை 35 புள்ளிகளை பெற்றுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு பெற்ற 32 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் மூன்று புள்ளிகள் என்ற சிறிய அளவிலான முன்னேற்றத்தை பிரதிபலிக்கின்றது. இதன் மூலம் தரவரிசையில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த 121 ஆவது இடத்திலிருந்து தற்போது 182 நாடுகளில் 107 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இது ஒரு நிலையான முன்னேற்றத்தை விட தேக்க நிலையையே வெளிப்படுத்துகிறது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் CPI மதிப்பெண்கள் பெரிய மாற்றங்களின்றி, 2024 இலிருந்த 32 புள்ளிகளுக்கும், 2017-2020 காலப்பகுதியில் இருந்த 38 புள்ளிகளுக்கும்; இடையிலேயே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஒரு தசாப்தம் முழுவதும் மதிப்பெண்கள் 32 முதல் 38 இற்குள் இருப்பது முன்னேற்றத்தை விட தேக்கநிலையையே காட்டுகிறது. இந்த எல்லைக்குள் ஆண்டுதோறும் ஏற்படும் சிறிய மாற்றங்கள் ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்தைவிட, சிறிய மாற்றங்களையே குறிக்கின்றன. நிலையான சீர்திருத்தங்கள் பொதுவாகக் காலப்போக்கில் தொடர்ச்சியான முன்னேற்ற போக்கை உருவாக்கும். ஆனால் இலங்கையின் CPI பயணப்பாதையில் அத்தகைய போக்கு இன்னும் தென்படவில்லை.

உலகளவில் ஊழல் அதிகரித்து வருவதாகவும், நிர்வாகங்களின் தர நிலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும்; ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு குறிப்பிடுகிறது. பல நாடுகள் பாதுகாப்பின் பெயரால் அதிகாரத்தை மையப்படுத்தும் அதேவேளையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புகூறல் தன்மையை வழுவிழக்கச் செய்து வருகின்றன. பல நாடுகள் அதிகரித்துவரும் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நிர்வாகத்தின் இக்கட்டான காலகட்டங்களில் அரசுகள் பொறுப்புக்கூறலை எவ்வளவு சிறப்பாகப் பாதுகாக்கின்றன என்பதை இந்த CPI பிரதிபலிக்கிறது. ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் உறுதியாக (resilient) இருக்கும் இடங்களில், ஊழல் அபாயங்களை கட்டுப்படுத்த முடிகிறது. கருத்துக்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களை விட அர்த்தமுள்ள கட்டமைப்பு ரீதியான முன்னேற்றங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உலகளாவிய போக்குகள் சித்தரிக்கின்றன. இலங்கையின் ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி (CPI) மதிப்பெண்ணில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய அளவிலான மாற்றம் அண்மைய சட்ட மற்றும் நிறுவன ரீதியான மேம்பாடுகளுக்கு நிபுணர்கள் மற்றும் வணிகத் தரப்பினரிடையே கிடைத்துள்ள வரவேற்பை பிரதிபலிக்கக்கூடும். புதிய ஊழல் மற்றும் சொத்து மீட்பு சட்டங்களை (Anti-corruption and asset recovery laws) ஏற்றுக் கொண்டமை மற்றும் சட்ட அமுலாக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.

இலங்கையின் இந்த CPI முடிவு, ஊழல் ஒழிப்பு முடிவடைந்து விட்டதைக் குறிக்காமல் ஒரு நிலையான கட்டமைப்பு சீர்திருத்தத்திற்கான வாய்ப்பினையே எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு வலிமையான நேர்மைப் பாதையை நோக்கிய சமிக்ஞையா அல்லது ஒரு குறுகிய கால மாற்றமா என்பது பொறுப்புக்கூறல், சட்ட அமுலாக்கம் மற்றும் வெளிப்படைத் தன்மை அமைப்புகள் நடைமுறையில் எவ்வளவு ஆழமாகவும், சீராகவும் மற்றும் சுதந்திரமாகவும் செயல்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்தே அமையும். புதிய சட்டங்கள் மற்றும் அமுலாக்க முயற்சிகள் போன்ற முன்னேற்றங்கள், அவற்றின் நீண்ட கால செயல்திறன் மற்றும் நடைமுறைப்படுத்தல்; பற்றி இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையிலும்;, முன்னேற்றம் குறித்த மக்களின் பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதேவேளை முன்மொழியப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் சட்டம் (NGO Bill) நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் (Online Safety Act) மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு போன்ற நிகழ்வுகளும் நிர்வாக சூழலை வடிவமைத்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் சிவில் சமூகத்திற்கான வெளி, ஊடக சுதந்திரம் மற்றும் சுயாதீன மேற்பார்வைக்குத் தேவையான சந்தர்ப்பங்கள் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்தும் ஊழலை அர்த்தமுள்ள வகையில் குறைப்பதற்கு அவசியமான காரணிகளாகும்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீடுகளின் படி, இலங்கையின் இடம் என்ன?

Fact Check By: Suji shabeedharan 

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *