
வாடகை வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எதிரநோக்கும் பிரச்சினைகள் தற்போது நாட்டில் அதிகரித்து வருவதாக பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கொழும்பில் வாழும் வாடகை வீட்டில் இருக்கும் குடும்பங்களுக்காக இந்த அரசாங்கத்தினால் குறைந்த விலையில் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து போலியான முகவர்கள் மூலமாக பணம் சம்பாதிக்க முயலுகிறார்கள் என தெரிவித்து ஒரு சான்றிதழின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் மக்களே அவதானமாக இருங்கள் காரணம் கொழும்பில் வாழும் வாடகை வீட்டில் இருக்கும் குடும்பங்களுக்காக இந்த அரசாங்கத்தினால் குறைந்த விலையில் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து போலியான முகவர்கள் மூலமாக பணம் சம்பாதிக்க முயலுகிறார்கள் ஆகவே அரசாங்கத் திணை களத்தினால் மட்டும் விநியோகிக்கப்படும் ஆவணங்கள் அந்தந்த வீடு திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியுமே ஒழிய வீதியில் நின்று போலியான ஆவணங்களை மக்களுக்கு வழங்குவதாக தகவல்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன ஆகவே மிக கவனமாக நடந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது 2026.06.19 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் இந்த பதிவிற்கு வந்துள்ள கமென்ட்கள் தொடர்பில் ஆய்வுசெய்த போது அதில் குறித்த நிகழ்விற்கு நாம் சென்றிருந்தோம். ஆனால் அங்கு அவ்வாறான எந்த விணணப்பங்கள் வழங்கப்படவும் இல்லை பணம் வசூலிக்கப்படவும் இல்லை எனவும் இந்த பதிவு தவறானது எனவும் தெரிவிக்கப்பட்டு பல்வேறு கமெட்கள் பதிவிடப்பட்டிருந்தது.

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த சான்றிதழ் எதற்காக வழங்கப்பட்டது என்பது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது, Plat Form – Nittambuwa என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த சான்றிதழ் தொடர்பான விளக்கத்துடன் ஒரு காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
“குலியட்ட இன்ன அபி” என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ட்ரிஷான் மஞ்சுள என்பவரினால் அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் வாடகை வீட்டில் இருப்பவர்களின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் ஏற்பாட்டில் 2026.06.19 ஆம் திகதி காலிமுகத்திடலில் மாபெரும் சத்தியாகிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு மாதாந்த தவணை அடிப்படையில் கட்டணம் செலுத்தும் வகையில் சொந்தமாக ஒரு வீட்டை அமைத்து தருவதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதற்காகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அதில் பங்கேற்பவர்களுக்கு அவர்களின் பங்கேற்பை கௌரவிக்கும் வகையில் இந்த சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்காக எந்தவித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள அந்த சான்றிதழில் உண்மையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் ஆராய்ந்தோம், இதன்போது குறித்த சான்றிதழ், இலங்கையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் தவணைமுறைக் கட்டண அடிப்படையில் வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பின் உறுப்பினர் சான்றிதழ் என்பதனை அறியமுடிந்தது.
மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள விடயங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு
1. ஆவணத்தின் தலைப்பு
“කුලියට ඉන්න අපි” (வாடகைக்கு வசிக்கும் நாம்) அமைப்பின் உறுப்பினர் பதவி மற்றும் அதன் தீவிர பங்களிப்பை உறுதிப்படுத்தல்.
- திகதி: 19 ஜூன் 2026
2. அமைப்பின் நோக்கமும் சான்றிதழும்
ஆவணத்தின் மையப்பகுதியில் உள்ள முக்கிய விபரம்:
- அமைப்பின் பெயர்: “කුලියට ඉන්න අපි” (Kuliyata Inna Api) – இது சொந்தமாக காணி அல்லது வீடு இல்லாத, வாடகைக்கு குடியிருப்போருக்கு அரசாங்கத்திடம் இருந்து தவணைமுறைக் கட்டண அடிப்படையில் வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மற்றும் ஒரேயொரு கூட்டமைப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சான்றிதழின் நோக்கம்: இந்த அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட நபர் (கைப்பட பெயர் எழுதப்பட்டுள்ளது) “2026 சத்தியாக்கிரக” போராட்டத்தின் தீவிர உறுப்பினர் என்பதை இந்த சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது.
3. உள்ளடக்கப்பட்டுள்ள நிகழ்வு விபரம்
- வாடகை அடிப்படையில் வாழும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, ஜனாதிபதியைச் சந்திக்கும் நோக்குடன் 2026.03.19 அன்று நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இந்த உறுப்பினர் காட்டிய தீவிர பங்களிப்பானது, அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் பலமாக அமைந்தது என இதில் பாராட்டப்பட்டுள்ளது.
4. தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் (கீழ்ப்பகுதி)
இந்த ஆவணத்தின் இறுதியில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரின் விபரங்கள் மற்றும் ஒரு முத்திரை (Certified) இடப்பட்டுள்ளது:
- ஒருங்கிணைப்பாளர்: W. P. ட்ரிஷான் மஞ்சுள
- தொலைபேசி எண்: +94 704 512 948
- முகவரி: W.P.T. மஞ்சுள, 6/1, மொரதென்ன, யக்கல. எனகுறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இந்த பத்திரம் ஒரு உறுப்பினர் சான்றிதழ் மாத்திரமே தவிர இது வீடுகளை வழங்குவதற்கான ஆவணம் அல்ல என்பதனை அறியமுடிகின்றது.
ஆகவே நாம் குறித்த சான்றிதழில் வழங்கப்பட்டுள்ள அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் வினவினோம்.
இதன்போது இந்த அமைப்பானது ஒருபோதும் வீடுகளை வழங்குவதாக எந்தவொரு இடத்திலும் தெரிவிக்கவில்லை. அதுமாத்திரமன்றி அவ்வாறு வழங்குவதாக தெரிவித்து ஆவணங்களை மக்களுக்கு விநியோகிக்கவும் இல்லை. மேலும் இந்த அமைப்பினால் எந்தவொரு செயற்பாட்டிற்கும் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படவுமில்லை என குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ட்ரிஷான் மஞ்சுள தெரிவித்தார்.
மேலும் எமது போராட்டம் வாடகைக்கு இருக்கும் மக்களுக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வகையில் வீடுகளை பெற்றுத்தருவதற்காக ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைப்பதற்காக இடம்பெறும் ஒரு போராட்டமே எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு கடந்த 2026.06.19 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்காக வழங்கப்பட்ட சான்றிதழே இவ்வாறு தவறான தகவல்களுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அன்றைய தினம் வழங்கப்பட்டது ஒரு சான்றிதழே தவிர அது வீடுகளை வழங்குவதற்கான ஆவணம் அல்ல எனவும் அதற்காக குறித்த போராட்டத்தில் பங்குபற்றியவர்களிடம் பணம் வசூலிப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அமைப்பு பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பா என்பதனையும் நாம் அவரிடம் வினவினோம் இதன்போது, இல்லை இந்த அமைப்பு இதுவரை பதிவுசெய்யப்படவில்லை எனவும் இதனை பதிவு செய்வதற்கு கூட எமக்கு சரியான முகவரியை வழங்க ஒரு இருப்பிடம் இல்லை எனவும் ஆனால் மிக விரைவில் நாம் இந்த அமைப்பை பதிவுசெய்வோம் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த போராட்டம் சட்டவிரோதமானது அல்ல எனவும் சட்டவிதிகளின் படி பொலிஸாரின் அனுமதியைப் பெற்று மக்களுக்கு எந்த தொந்தரவுகளும் இன்றியே இந்த போராட்டம் இடம்பெறுவதாகவும் குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்மிடம் தெரிவித்தார்.
மேலும் இது கொழும்பு மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசிப்போருக்காக மாத்திரம் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பா என்பதனையும் நாம் அவரிடம் வினவினோம் இதன்போது அவ்வாறு அல்ல எனவும் இது நாடுமுழுவதும் வாடகை வீட்டில் வசிப்போர் சார்பில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு எனவும் அனைவருக்காகவுமே இந்த போராட்டம் முன்னெடுக்கபடுவதாகவும் அவர் கூறினார்.
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் முன்னெடுப்பில் ஏற்கனவே இதேபோன்று 5 முறை போராட்டங்கள் இடம்பெற்றதாகவும் தற்போது ஆறாவதாக கடந்த 2026.06.19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இதுவரை தொடர்வதாகவும் அதற்கு எந்தவித நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் சார்பில் எடுக்கப்படாவிட்டால் இன்னும் இரண்டு தினங்களில் இந்த அமைப்பின் சிலரினால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். ஆகவே வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு சொந்த வீட்டை பெற்றுத்தரும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பினால் முன்னெடுக்கபடும் இந்த போராட்டம் ஜனாதிபதியிடம் எங்களின் கோரிக்கையை முன்வைப்பதற்கான போராட்டம் மாத்திரமே எனவும் இதனை சிலர் சமூக ஊடகங்கள் வழியாக தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி ஊடகங்களுக்கு இந்த போராட்டம் தொடர்பில் அவர்கள் தகவல்களை வழங்கினாலும் எந்தவொரு ஊடகத்தினாலும் அது மக்களிடம் ஒரு செய்தியாக கொண்டு செல்லப்படவில்லை என்பதனையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாம் இந்த போராட்டம் தொடர்பில் ஆராய்ந்த போது சமூக ஊடகங்களில் இது குறித்து பலர் பதிவுகளை பதிவிட்டிருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது. Link | Link | Link
ஆகவே இது ஒரு சிவில் அமைப்பினால் அல்லது வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினால் தங்களது உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒரு சுயாதீன சான்றிதழ் ஆகும். இது உத்தியோகபூர்வ அரச திணைக்களங்களால் வழங்கப்படும் சான்றிதழ் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தொடர்பான சட்டம்
இலங்கையில் வாடகை வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வசிப்பவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் உரிமைகளை ஒழுங்குபடுத்துவதற்காக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் (Rent Act, No. 7 of 1972) தற்போதைய சமூக, பொருளாதாரத் தேவைகளுக்குப் பொருந்தாததால், அதனை நீக்கிவிட்டு புதிய சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் அண்மையில் (2025 செப்டம்பர் மாதமளவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, 2026 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட) மிக முக்கிய சட்டமூலமான “குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் – 2026” (Protection of Occupants Bill, 2026) மற்றும் வீட்டு வாடகைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய 1972 ஆம் ஆண்டுச் சட்டம் பெரும்பாலும் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு (Tenants) அதிக சாதகமாக இருந்ததாகவும், இதனால் வீட்டின் உரிமையாளர்கள் (Landlords) தங்களது சொந்த சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்வதில் பெரும் சட்டச் சிக்கல்களையும் தாமதங்களையும் எதிர்கொண்டதாகவும் கூறப்பட்டது.
புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டம் (2026), வீட்டு உரிமையாளர்கள் தன்னிச்சையாகவோ அல்லது அத்துமீறியோ வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்றுவதைத் தடுப்பதோடு, அதேவேளை நீதிமன்றத்தின் மூலம் நியாயமான முறையில் மற்றும் விரைவாகச் சொத்துக்களை மீளப் பெறுவதற்கான ஒரு சமநிலையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கான முக்கிய பாதுகாப்புகள் (Rights of Occupants)
ஒரு நபர் ஒரு வீட்டில் சட்டப்பூர்வமாக நுழைந்து, தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு மேல் அங்கு வசித்து வந்தால், அவருக்கு இந்தச் சட்டத்தின் கீழ் சில பாதுகாப்புகள் கிடைக்கின்றன:
- நீதிமன்ற உத்தரவின்றி வெளியேற்ற முடியாது: வீட்டு உரிமையாளர் தன்னிச்சையாகவோ, பலவந்தமாகவோ அல்லது ஆட்களைப் பயன்படுத்தியோ வாடகைக்கு குடியிருப்பவரை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது. தகுதியான நீதிமன்றத்தின் (District Court) கட்டளை அல்லது தீர்ப்பு மூலமே ஒருவரை வெளியேற்ற முடியும்.
- அத்தியாவசிய சேவைகளைத் துண்டிப்பது தடை: வாடகைக்கு குடியிருப்பவரைப் பலவந்தமாக வெளியேற்றும் நோக்கில் அத்தியாவசிய சேவைகளான:
- மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம்,
- கழிவறை மற்றும் சுகாதார வசதிகள்,
- சமையல் எரிவாயு வசதி,
- பொதுவான வழிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி போன்றவற்றைத் துண்டிப்பது அல்லது தடுத்து நிறுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
- சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் தடை: வீட்டை காலி செய்ய வைப்பதற்காக வீட்டின் கூரையைப் பிரிப்பது, சுவர்களை உடைப்பது, அல்லது குடியிருப்பாளரின் பொருட்களைச் சேதப்படுத்துவது போன்ற செயல்களில் உரிமையாளர் ஈடுபடக் கூடாது.
வீட்டு உரிமையாளர்களுக்கான சட்ட நடைமுறைகள் (Rights of Landlords)
புதிய சட்டமூலம் உரிமையாளர்களுக்குத் தங்களது வீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான சட்டரீதியான வழிகளை இலகுபடுத்தியுள்ளது:
- விரைவான நீதிமன்றத் தீர்ப்புகள்: முந்தைய சட்டங்களின் கீழ் ஒரு வாடகைக்கு குடியிருப்பவரை வெளியேற்ற பல வருடங்கள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டியிருந்தது. ஆனால் புதிய சட்டத்தின்படி, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
- மனு மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் மட்டும் விசாரணை நடத்தப்பட்டால் 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
- ஆட்சேபனைகள் (Objections) தாக்கல் செய்யப்பட்டு விரிவான விசாரணை தேவையாயின், அதிகபட்சமாக 9 மாதங்களுக்குள் வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
- முறைகேடான ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான தண்டனை: வாடகை ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரோ அல்லது சட்டப்பூர்வமான அடிப்படை எதுவும் இல்லாமலோ வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு, பொய்யான காரணங்களைக் கூறி நீதிமன்றத்தை ஏமாற்ற முற்படும் குடியிருப்பாளர்களுக்கு எதிராகவும் சட்டம் கடுமையான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது.
சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனைகள்
நீதிமன்ற உத்தரவின்றி ஒருவரைப் பலவந்தமாக வெளியேற்ற முயலும் அல்லது அத்தியாவசிய சேவைகளைத் துண்டிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராகக் கடுமையான குற்றவியல் தண்டனைகள் விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது:
- அதிகபட்சமாக 500,000 ரூபா வரை அபராதம்.
- ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனை (அல்லது அபராதமும் சிறைத்தண்டனையும் சேர்த்து விதிக்கப்படலாம்).
- நீதிமன்ற உத்தரவின் மூலம் மீளக் குடியமர்த்தப்பட்ட ஒருவரை, ஓராண்டுக்குள் மீண்டும் பலவந்தமாக வெளியேற்ற முயல்வது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்.
இந்த புதிய சட்டச் சூழலில், வீடு அல்லது கட்டிடங்களை வாடகைக்கு விடும்போதும் அல்லது வாடகைக்கு எடுக்கும்போதும் பின்வரும் விடயங்களில் அவதானமாக இருப்பது அவசியமாகும்:
- முறையான வாடகை ஒப்பந்தம் (Formal Lease/Tenancy Agreement): வாய்மொழி மூலமான உடன்படிக்கைகளைத் தவிர்த்து, சட்டப்பூர்வமாக எழுதப்பட்ட, சான்றொப்பமிடப்பட்ட வாடகை ஒப்பந்தங்களை இரு தரப்பும் பேண வேண்டும்.
- ஆவணப்படுத்தல்: வாடகைப்பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டுகள் (Receipts) மற்றும் நிபந்தனைகள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். Link | Link
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவு எமது ஆய்வின் அடிப்படையில் கொழும்பில் வாழும் வாடகை வீட்டில் இருக்கும் குடும்பங்களுக்காக இந்த அரசாங்கத்தினால் குறைந்த விலையில் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து போலியான முகவர்கள் மூலமாக பணம் சம்பாதிக்க முயலுகிறார்கள் என தெரிவித்து பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் அந்த பதிவில் பகிரப்படும் ஆவணமானது කුලියට ඉන්න අපි” (வாடகைக்கு வசிக்கும் நாம்) என்ற அமைப்பினால் கடந்த 2026.06.19 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குப்பற்றியவர்களுக்காக வழங்கப்பட்ட ஒரு உறுப்பினர் சான்றிதழ் என்பதுவும் கண்டறியப்பட்டது.
மேலும் கடந்த 19 ஆம் திகதி காலி முகத்திடலில் குறைந்த விலையில் வீடுகளை பெற்றுத்தருவதற்காக எந்த ஆவணங்களோ, பணமோ சேகரிக்கப்படவில்லை என்பதுடன் அன்றைய தினம் வாடகைக்கு வசிப்பவர்களுக்கு தவணைமுறைக் கட்டண அடிப்படையில் வீடுகளை பெற்றுத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்து அவரை சந்திப்பதற்காக இடம்பெற்ற ஒரு போராட்டம் மாத்திரமோ என்பதுவும் ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


