
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலருக்கு எதிராக, தரமற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளின் போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்திய நிபுணர் சவின் சேமகே கொழும்பு நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.
இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்த செலுத்த வேண்டிய
தடுப்பூசிக்கு பதிலாக காலாவதியான வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தபட்டுள்ளதாக அவர் சாட்சி வழங்கியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் வெறிநாய் தடுப்பூசியை மனிதர்களுக்கு
செலுத்தியதாக வாக்கு மூலம்…
சமீபத்திய வரலாற்றில் சுகாதார துறை சந்தித்த.மிக மோசமான அதிர்ச்சியான
சம்பவம் ஒன்று அம்பலமாகியுள்ளது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெலவுக்கு
எதிரான வழக்கு விசாரணை
மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது
அதாவது கொரோனாவை.கட்டுப்
படுத்த செலுத்த வேண்டிய
தடுப்பூசிக்கு பதிலாக காலாவதியான
வெறி நாய்க்கடி தடுப்பூசிகளை (Anti-Rabies Vaccines) கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக
பதவி வகித்த.போது நோயாளர்களுக்கு செலுத்தபட்டுள்ளது
நீதிமன்றத்தில் சாட்சியமளித்த போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் வைத்திய நிபுணர் சவின் சேமகே இந்த விடயத்தை தனது வாக்குமூலத்தில் வழங்கியுள்ளார்.. என தெரிவித்து கடந்த 2026.06.14 ஆம் திகதி இந்த பதிவு பகிரப்பட்டிருந்தது.
மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலருக்கு எதிராக, தரமற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் அந்த விசாரணைகளின் போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்திய நிபுணர் சவின் சேமகே வழங்கிய வாக்குமூலத்தில் அவர் உண்மையில் அவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்திருப்பாராயின் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால் நாம் மேற்கொண்ட ஆய்வில் வெறிநாய்க் கடிக்கானகாலாவதியான மருந்துகளை கொரோனா தடுப்பூசிகளுக்கு பதிலாக மக்களுக்கு வழங்கியதாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக எந்த பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கவில்லை.
இருப்பினும் தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகளின் போது கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றில் காலாவாதியான வெறிநாய்க் கடிக்கான மருந்துகள் தொடர்பில் வைத்தியர் சவின் சேமகே வாக்குமூலம் வழங்கியிரு்தமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
இதன்போது, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் (Human Immunoglobulin) தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்ட வழக்கில், கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியும், பொதுச் சுகாதார சேவை நிபுணருமான வைத்திய நிபுணர் சவின் சேமகே நீதிமன்றத்தில் கடந்த 2026.03.11 ஆம் திகதியே இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
அவரது சாட்சியத்தின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
காலாவதியான தடுப்பூசிகளுக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது?
அரசாங்கப் பொது வைத்தியசாலைகளில் அந்தச் சமயத்தில் இருந்த வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் (Anti-Rabies Vaccines) பயன்படுத்தக்கூடிய காலாவதி திகதியை (Expiry Date) தாண்டியிருந்தன. எனினும், பின்வரும் காரணங்களைக் கருத்திற்கொண்டு, ஒரு விசேட மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையைப் பெற்று, நோயாளர்களின் சம்மதத்துடன் அந்த காலாவதியான தடுப்பூசிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது:
- புதிய தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
- இந்தத் தடுப்பூசிகள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், அவற்றை வீசி எறிந்தால் அரசாங்கத்தின் பணம் பெருமளவில் வீணாகும் (பண விரயம்). என்ற காரணங்களே பிரதானமா தெரிவிக்கப்பட்டது.
சட்ட ரீதியான பின்னணி என்ன?
வழக்கின் 6 ஆவது பிரதிவாதியாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி நுவன் ஜயவர்தன எழுப்பிய குறுக்குக் கேள்விக்கு பதிலளித்த வைத்தியர் சேமகே:
- “தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் விதிகளின்படி, தட்டுப்பாடு நிலவும் அவசர காலங்களில் மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையோடு காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகாது. ஆனால், காலாவதியான மருந்துகளை வணிக ரீதியாக விற்பனை செய்வதும் அல்லது அவற்றை சட்டவிரோதமாகக் களஞ்சியப்படுத்தி வைப்பதும் மட்டுமே தண்டனைக்குரிய குற்றமாகும்” என்று விளக்கமளித்தார்.
தீர்மானம் எடுக்கப்பட்ட விபரம்:
- 2022 மே மாதம் 24 ஆம் திகதி தனது தலைமையில் நடைபெற்ற ‘மருந்துகள் மதிப்பீட்டுக் குழு’ (Drug Evaluation Committee) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு, காலாவதியான போதிலும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கி, அந்தத் தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- வெறிநாய்க்கடி நோய் (Rabies) ஏற்படும் நோயாளர்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதால், இது மிகவும் உணர்திறன் மிக்க ஒரு தடுப்பூசியாகும். நாட்டில் நிலவிய கடுமையான தடுப்பூசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், இறுதியாக வைத்தியசாலைகளில் அவை நோயாளர்களுக்குச் செலுத்தப்பட்டதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
வழக்கு மற்றும் கைது விபரங்கள்:
- தரம் குறைந்த தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்கு (Medical Supplies Division) வழங்கி, 14 கோடி ரூபாவிற்கும் (Rs. 140 Million) அதிக பொதுப் பணத்தை மோசடி செய்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் 13 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வைத்தியர் சேமகே 2 ஆவது சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
குறுக்குக் கேள்விகளும் வைத்திய சேமகேயின் பதவிக் காலமும்:
- மருந்து இறக்குமதி விதிகள்: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டுமாயின், இந்திய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்டு, அங்கு பதிவு செய்யப்பட்ட மருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று வைத்தியர் சேமகே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
- பதவி விலகல் பின்னணி: தான் இராணுவ சேவையில் இருந்தபோது தகுதி அடிப்படையில் NMRA இன் பிரதானியாக 2021 நவம்பரில் நியமிக்கப்பட்டதாகக் கூறிய அவர், பின்னர் 2022 மே மாதம் 30 ஆம் திகதி தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாகக் குறிப்பிட்டார்.
- மேலும், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற மருந்து மீளாய்வுக் கூட்டத்தில் நாட்டில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அதிகாரிகள் கூறியபோது, தான் உண்மை நிலையை விளக்க முயன்றும் அதற்கு தனக்கு இடமளிக்கப்படவில்லை என்றும், அதன் பின்னரே தான் இராஜினாமா செய்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெளியான செய்திக் கட்டுரையை பார்வையிடவும்
மேலும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Federation of Health Professionals / Doctors’ Union for Medical and Civil Rights), இலங்கையின் பொது வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்குக் காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் (Expired Anti-Rabies Vaccines) செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சுகாதார அமைச்சிடம் அவசர மற்றும் பகிரங்க விளக்கத்தை கோரியுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்த விடயங்கள் தொடர்பிலும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்திய நிபுணர் சவின் சேமகே நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தின் மூலமே இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசாங்க வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவிய சமயத்தில், காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகளை நோயாளர்களுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டுகள்:
- மக்களின் உயிருக்கு ஆபத்து: வெறிநாய்க்கடி (Rabies) என்பது 99% மரணத்தை ஏற்படுத்தக்கூடிய மிகக் கொடிய நோய் நிலமையாகும். இத்தகைய ஆபத்தான நோய்க்குப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி காலாவதியானதாக இருந்தால், அது வேலை செய்யாமல் போய் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
- யார் பொறுப்பேற்பது? காலாவதியான தடுப்பூசிகளைப் பயன்படுத்தியதால் ஏதேனும் நோயாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது மரணம் நிகழ்ந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியை மருத்துவர்கள் சங்கம் எழுப்பியுள்ளது.
- அபராதம் மற்றும் மனித உரிமை மீறல்: தரம் குறைந்த மனித இம்யூனோகுளோபுலின் (Human Immunoglobulin) மற்றும் இதர மருந்துகளை போலியான ஆவணங்கள் மூலம் கொள்முதல் செய்த வழக்கில், அண்மையில் உச்ச நீதிமன்றம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு 75 மில்லியன் ரூபா கடுமையான அபராதம் விதித்ததுடன், பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளித்ததை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்:
- இந்த காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன?
- அவை எத்தனை நோயாளர்களுக்குச் செலுத்தப்பட்டன?
- இந்தத் தீர்மானத்தை எடுத்த அதிகாரிகள் மற்றும் அதற்குப் பரிந்துரைத்த விசேட மருத்துவக் குழுவில் இருந்தவர்கள் யார் யார்?
இவை தொடர்பான முழுமையான விபரங்களையும், தற்போதைய சுகாதார நிலைமைகளையும் சுகாதார அமைச்சு உடனடியாக நாட்டு மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வைத்தியநிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஊடகங்களில் வெளியான இந்த செய்தியும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சேமகே நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியாகியுள்ளது.
தரமற்ற மற்றும் காலாவதியான மருந்துகளைப் பொதுமக்களுக்கு வழங்கியதன் மூலம் சுகாதாரத்துறையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதையும், அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட ஊடக செய்திகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டதாக பகிர்படும் தகவல் தவறான புரிதலுடன் பகிரப்பட்ட ஒரு தகவல் என்பது தெளிவாகின்றது. நாட்டில் நிலவிய வெறிநாய்க்கடி தடுப்பூசி தட்டுப்பாட்டின் போது, மருத்துவமனைகளில் ஏற்கனவே இருந்த காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகளையே, நோயாளிகளின் அனுமதியோடு பயன்படுத்துவதற்கு NMRA குழு அனுமதி வழங்கியது என்பது தொடர்பிலேயே வைத்தியர் சேமகே நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்பது இந்த செய்திகளின் மூலம் தெளிவாகின்றது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம
மேலும் நாம் இது தொடர்பான மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்வதற்காக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார் சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிகரம அவர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது காலாவதியான நாட்டில் நிலவிய வெறிநாய்க்கடி தடுப்பூசி தட்டுப்பாட்டின் போது, மருத்துவமனைகளில் ஏற்கனவே இருந்த காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகளையே, நோயாளிகளின் அனுமதியோடு பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை குழு அனுமதி வழங்கியது உண்மை தான் எனினும் அவை கொவிட் – 19 தடுப்பூசிகளுக்கு பதிலாக மக்களுக்கு வழங்கப்பட்டதாக வைத்தியர் சேமகே வாக்குமூலம் வழங்கியதாக பகிரப்படும் தகவல் முற்றிலும் தவறானது என அவர் குறிப்பிட்டார்.
மேலும் காலாவதி திகதி நெருங்கிய அல்லது காலாவதியான சில வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகள் எஞ்சியிருந்ததாகவும் அந்தச் சமயத்தில் புதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால், காலாவதியானவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் (Manufacturers) அவற்றைச் சேமித்து வைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றின் நிலைத்தன்மையை (Stability) ஆய்வு செய்வார்கள். காலாவதி திகதிக்கு பின்னரும் அவை வீரியத்துடன் இருக்கிறதா என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியும். இது குறித்து உற்பத்தியாளரிடம் விபரங்கள் கேட்கப்பட்ட போதிலும், அவர்களிடமிருந்து உரிய பதில்கள் அந்த சந்தரப்பத்தில் கிடைக்கவில்லை எனவும் வைத்தியர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே உற்பத்தியாளரிடம் இருந்து பதில் வராததால், சுகாதார அமைச்சு இதனை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்க முடியாது என்று தீர்மானித்தது. இருப்பினும், வெறிநாய்க்கடி நோய் என்பது தடுப்பூசி செலுத்தாவிட்டால் நோயாளி இறக்கக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும். அதனால் தடுப்பூசியின் வீரியம் காலாவதி திகதி முடிந்தவுடன் திடீரென மறைந்துவிடாது, அது படிப்படியாகத்தான் குறையும். எனவே, தடுப்பூசி போடாமல் விடுவதால் ஏற்படும் உயிரபாயத்தை விட, காலாவதியான தடுப்பூசியைப் போடுவது மேலானது என்ற அடிப்படையில், நோயாளியிடம் அது குறித்த விபரங்களைக் கூறி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று அதனை வழங்கலாம் என்று ஆலோசனைக் குழுவின் கூட்ட அறிக்கையில் (Minutes) குறிப்பிடப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிகரம தெரிவித்தார்.
அதேபோன்று மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் வைத்திய நிபுணர் சவின் சேமகேவும் நீதிமன்றில் இந்த தகவல்களையே தெரிவித்துள்ளதாகவும் மாறாக வெறிநாய் கடிக்கான தடுப்பூசி கொவிட் – 19 தடுப்பூசிக்கு பதிலாக போடப்பட்டதாக அவர் குறிப்பிடவில்லை என்பதனையும் அவர் இதன்போது உறுதிப்படுத்தினர்
அதுமாத்திரமன்றி காலாவதியான வெறிநாய்கடி நோய்க்கான தடுப்பூசிகள் தொடர்பில் நோயாளர்களிடம் தெளிவுபடுத்திய பின்னர் அவர்களின் சம்மதத்துடன் அந்த தடுப்பூசிகளை அவர்களுக்கு பயன்படுத்தலாம் என ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக மாத்திரமே அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிகரம இதன்போது சுட்டிக்காட்டினார்.
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் காலாவாதியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகள், கொவிட் – 19 தடுப்பூசிக்கு பதிலாக மக்களுக்கு வழங்கப்படடதாக மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்திய நிபுணர் சவின் சேமகே நீதிமன்றில் தெரிவித்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஊடக செய்திகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிகரம வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கடந்த 2026.03.11 ஆம் திகதி தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்ட வழக்கில், கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்திய நிபுணர் சேமகே அவர்கள் காலாவதியான வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஆனால் அவை மக்களுக்கு உண்மையில் வழங்கப்பட்டதாக தனக்கு தெரியாது எனவே நீதிமன்றில் சாட்சியமளித்துளளமை தெளிவாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


